

பாஜக கூறுவது போல் நாட்டில் எங்குமே மோடி அலை வீசவில்லை என்று நடிகை நக்மா கூறினார்.
காங்கிரஸ் சார்பில் உத்தரப் பிரதேசம் மாநிலம் மீரட் மக்களவைத் தொகுதியில் நடிகை நக்மா போட்டியிடுகிறார். அவர் இன்று மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சத்ய நாராயணனை ஆதரித்து வாக்கு சேகரித்தபோது பேசியது:
"நாட்டில் எங்கும் மோடி அலை எல்லாம் வீசவில்லை. மோடி தனக்கு மிகவும் சாதகமான தொகுதியைத்தான் தேர்வு செய்துள்ளார். வாரணாசி தொகுதியில் பாஜக நல்ல நிலைமையில் உள்ளதால், அந்தத் தொகுதியில் வேட்பாளராக களம் இறங்கி, நாடெங்கும் மோடி அலை வீசுகிறது என்று கூறுவதில் பொருள் இல்லை. என்னைப் போல கட்சியின் பலம் இல்லாத தொகுதியை அவர் தேர்வு செய்திருக்க வேண்டும்.
மத்தியப் பிரதேசமும், குஜராத்தும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நிகழ்வதில் முன்னிலை வகிக்கின்றன. மத்தியப் பிரதேசத்தில், சிவராஜ் சிங் சவுகான் ஆட்சியில் 4 வயது குழந்தைகூட பலாத்காரத்தால் பாதிக்கப்படுகிறது. ஊழலுக்கும் இந்த மாநிலம் குறைந்தது அல்ல. சுரங்க ஊழல், முதியோர் ஓய்வூதியம், நில அபகரிப்பு, போட்டித் தேர்வு முறைகேடு என அனைத்து விதமான ஊழல்களும் இங்கு நடந்துள்ளன.
போட்டித் தேர்வு முறைகேட்டால் 75 லட்சம் குடுமபங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த முறைகேடு தொடர்பாக மத்தியப் பிரதேச அரசு ஏன் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடவில்லை?
எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று, இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் அரசு சிபிஐ மூலம் விசாரணையை மேற்கொண்டு, உண்மைகளை வெளியே கொண்டுவரும்" என்றார் நடிகை நக்மா.