Published : 07 Apr 2014 10:53 AM
Last Updated : 07 Apr 2014 10:53 AM

பொருளாதார வளர்ச்சிக்கு உத்தரவாதம், நிர்வாக முடக்கத்திற்கு முடிவு: பாஜக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி

மக்களவை தேர்தல் தொடங்கிய முதல் நாளான இன்று பாரதிய ஜனதா கட்சி தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. தேர்தல் அறிக்கையை, கட்சியின் மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி வெளியிட்டார்.

நாட்டின் பொருளாதாரம் மேம்படுத்தப்படும், நல்லாட்சிக்கு வழிவகுக்கப்படும், நிர்வாக முடக்கத்திற்கு முடிவு கட்டப்படும், ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என பாஜக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள்:

* அரசியல் அமைப்புக்கு சட்டத்திற்கு உட்பட்ட வகையில், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

* சட்டப் பிரிவு 370-ஐ திரும்பப்பெற நடவடிக்கை எடுக்கப்படும்.

* கருப்பு பணத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான பணிக்குழு அமைக்கப்படும். கருப்பு பண பரிவர்த்தனைகள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்படும்.

* விலை ஸ்திரத்தன்மை நிதியம் அமைத்து, இந்திய உணவு கழகத்தின் கொள்முதல், சேமிப்பு மற்றும் விநியோகத்தை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* ஒற்றை தேசிய வேளாண் சந்தையை உருவாக்கி, வெவ்வேறு பகுதியில் உள்ள மக்களின் உணவுப் பழக்கத்தை கருத்தில்கொண்டு, அங்கு அந்தப் பயிர்கள் மற்றும் காய்கறிகளை தயாரிப்பை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* பாரம்பரிய தொழில்சார் வேலை வாய்ப்பு, தொழிலாளர் வளர்ச்சி, சுற்றுலா, விவசாயம் ஆகியவற்றில் மனித வளத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

* உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் அதனை மேம்படுத்த திட்டங்கள் வகுக்கப்படும்.

* இளைஞர் நலன், சுய வேலைவாய்ப்பு ஊக்குவித்தல் போன்றவற்றை மேம்படுத்த வேலைவாய்ப்பு மையங்களை வாழ்க்கை தர மையமாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* தேசிய அபிவிருத்தி கவுன்சில் மற்றும் மாநில கவுன்சிலை ஒன்றிணைத்த அமைப்பாக மாற்றப்படும்.

* அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் பிரதமருக்கு இணையாக ஒருமித்து செயல்பட கூட்டு முயற்சி எடுக்கப்படும்.

* முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் வரி விதிப்பில் மாற்றம் மேற்கொள்ளப்படும்.

* இணைய மையமாக்கப்பட்ட அரசாங்க நிர்வாகம், அரசாங்கம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தி ஊழல் அற்ற ஆட்சியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

* வெளிநாட்டு வங்கிகளில் முடங்கிக் கிடக்கும் இந்தியர்களின் கருப்புப் பணம் திரும்ப கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.

* நாட்டில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

* இந்தியா - வங்கதேசம், இந்தியா - மியான்மர் எல்லைப் பகுதியை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

* வெளியுறவு கொள்கையை சீர்படுத்தி பரஸ்பர நன்மை ஏற்பட வழி நடத்தப்படும்.

* நவீன தொழில்நுட்ப உதவியுடன் நாட்டின் நிர்வாகத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

* உணவு பாதுகாப்பு திட்டத்தை திறம்பட நிர்வகிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* சில்லறை வர்த்தகத்தை தவிர, பிற துறைகளில் நேரடி அந்நிய முதலீட்டுக்கு அதரவு வழங்கப்படும். இதனால், வேலைவாய்ப்பு அதிகரிக்கும்.

* நேரடி அன்னிய மூதலீட்டை தனியார் துறை பங்களிப்புடன் ஊக்குவிக்க நடவடிக்கை.

* கிராம அளவில் எரிவாயு குழாய்கள் அமைக்கப்படும்.

* கல்வி, தொழிற்துறையில் சிறுபான்மையினருக்கு முக்கியத்துவம் தரப்படும்.

* அழுகக் கூடிய உணவு பொருட்களை சேமிக்க விவசாய பொருட்களுக்கான கிடங்குகள் ஏற்படுத்தப்படும்.

* வீடுகளுக்கும் விளைநிலங்களுக்கும் தண்ணீர் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

* பெண் குழந்தைகள் பாதுகாப்பு, கல்வியை உறுதி செய்யும் வகையில் தேசிய அளவில் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும்.

* 50 புதிய சுற்றுலா மையங்கள் அமைக்கப்படும்.

* வேளாண் விளை பொருட்களை சந்தைப்படுத்துதலில் சீர்திருத்தம் மேற்கொள்ளப்படும்.

* மேல்நிலை கல்வி திட்டம் தரம் உயர்த்தப்படும். நாடெங்கும் ஒரே மாதிரியான கல்வித் திட்டம் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

* நாட்டில் உள்ள அனைத்து ஆறுகளையும் சுத்தப்படுத்த திட்டம் வகுக்கப்படும்.

* சகோதர நாடுகள் இடையே நட்புக் கரத்தை மேம்படுத்த வலுவான நிலைப்பாடு எடுக்கப்படும்.

* காங்கிரஸின் வலுவற்ற பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பை கலைத்து, நியாயமான விசாரணை நடத்த வழிவகுக்கப்படும்.

* இரண்டாம் நிலை பள்ளிகளின் திறன் மேம்பட தேசிய மின் நூலகம் அமைக்கப்படும்.

* தேசிய கல்வி கொள்கையை மேமபடுத்தி, பல்கலைக்கழக கிராண்ட் கமிஷன் மூலம் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

* ஜம்மு, காஷ்மீர், லடாக் ஆகிய மூன்று பகுதிகளில் சம மற்றும் விரைவான வளர்ச்சியை ஏற்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

* காஷ்மீரின் முன்னோர்களாகிய பண்டிதர்களை முழு கண்ணியம் மற்றும் பாதுகாப்பும், அவர்கள் இடத்தில் வாழ வழிவகை செய்யப்படும்.

* சுய ஆட்சியை பலப்படுத்துதல், பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

* கிராம சபைகளை ஒருங்கிணைத்த கொள்கைகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.ம்.

பாஜக நல்லாட்சி அளிக்கும்: மோடி

பாஜக ஆட்சிக்கு வந்தால் நாட்டில் நல்லாட்சி செலுத்தும் என அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்ட பின்னர் பேசிய மோடி கூறும்போது, "வலுவான, ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்குவதே பாஜகவின் லட்சியம். நல்லாட்சி, வளர்ச்சி என இரண்டே வார்த்தைகளில் பாஜகவின் தேர்தல் அறிக்கையின் சாராம்சத்தை தெரிவித்துவிடலாம். பாஜக தேர்தல் அறிக்கை வெறும் சம்பிரதாயமோ, ஆவணமோ அல்ல இதுவே கட்சியின் லட்சியம்" என்றார்.

வாக்குறுதிகளை செயல்படுத்துவோம்: ராஜ்நாத் சிங்

பாஜக தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழாவில் பேசிய அக்கட்சி தலைவர் ராஜ்நாத் சிங், "பாஜக தேர்தல் அறக்கையில் குறிப்பிட்டுள்ள அனைத்து வாக்குறுதிகளையும் ஒன்றுவிடாமல் உறுதியாக செயல்படுத்துவோம்" என்றார்.

மேலும், "பாஜக ஆட்சிக்கு வந்தால், தேர்தல் வாக்குறுதிகளைத் தவிர, மேலும் பல நல்ல திட்டங்களையும் அறிமுகப்படுத்தும்" என்றார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x