

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், இதுவரை பிரதமர் பதவியை வகித்தவர்களில் மன்மோகன் சிங் மட்டுமே 'சூப்பர் பிரதமர்' ஆக இருக்கிறார் என்று பிரியங்கா காந்தி புகழாரம் சூட்டினார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மகள் பிரியங்கா தனது சகோதரரும், காங்கிரஸ் துணைத் தலைவருமான ராகுல் காந்தி போட்டியிடும் அமேதி தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில், அவர் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், "ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் அங்கம் வகித்த பிரதமர்களில் 'சூப்பர் பிரதமர்' என்றால் அவர் மன்மோகன் சிங்தான்" என்றார்
பிரதமர் மன்மோகன் சிங்கின் முன்னாள் ஊடக ஆலோசகர் சஞ்சய பாரு எழுதிய 'ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர்' நூலில், மன்மோகன் சிங் பிரதமர் பதவியில் இரண்டாம் பட்சமாகவே செயல்பட்டார் என்றும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியே அவரை வழிநடத்தினார் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டபோதுதான், பிரதமர் மன்மோகன் சிங்குக்கு பிரியங்கா காந்தி புகழாரம் சூட்டினார்.
அவர் மேலும் கூறும்போது, "இந்தத் தேர்தல் மக்களின் இதயங்களை பிளவுப்படுத்த நினைப்பவர்களுக்கும், அவர்களை ஒருங்கிணைக்க பாடுபடுபவர்களுக்கும் இடையே உள்ள போட்டியாகவே கருதப்பட வேண்டும். நாங்கள் மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம். நாங்கள் அதனை செய்வோம் என்பதை மக்களும் நம்புகின்றனர்" என்றார் பிரியங்கா காந்தி.