

பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி மீது காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் சையது அலி ஷா கிலானி கூறியுள்ள குற்றச்சாட்டு விஷமத்தனமானது என பாஜக விளக்கமளித்துள்ளது.
டெல்லியில் சிகிச்சை மேற்கொள்ள வந்த தன்னிடம் காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக ஆலோசிக்க பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி 2 பிரதிநிதிகளை அனுப்பி வைத்ததாகவும் ஆனால் மோடியின் ஆர்.எஸ்.எஸ். பின்னணி கருதி அவர்களை தான் சந்திக்கவில்லை என்றும் பிரிவினைவாத தலைவர் சையது அலி ஷா கிலானி தெரிவித்தார். அவரது இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்நிலையில், சையது அலி ஷா கிலானி கூறியிருப்பது அடிப்படை ஆதாரமற்ற விஷமத்தனமான குற்றச்சாட்டு என பாஜக செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். மேலும் இத்தகைய தவறான தகவலை தெரிவித்ததற்காக கிலானி பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார். காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பாஜக பிரதிநிதிகள் யாரும் கிலானியை சந்திக்கவில்லை என்று தெளிவுபடுத்துவதாகவும் அவர் கூறினார்.
காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. காஷ்மீரில் நிலவும் அனைத்து விவகாரங்களுக்கும் தீர்வு நல்லாட்சி நடத்துவதே ஆகும் என ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.