

பாஜக கூட்டணி 275 இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக என்.டி.டி.வி. கருத்துக் கணிப்பு வெளியிட்டுள்ளது.
இதில் பாஜக மட்டும் 226 இடங்களில் வெற்றி பெறும் என கூறப்படுகிறது. இதுவரை நடைபெற்ற தேர்தல்களிலேயே இந்த முறைதான் பாஜக மிகப்பெரிய வெற்றியை பெறவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்.டி.டி.வி., ஹன்சா ஆய்வு நிறுவனம் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் கூறப்பட் டுள்ளதாவது:
சமீபத்தில் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணியை ஏற்படுத்தியது, மோடி உள்ளிட்ட தலைவர்கள் மேற்கொண்டு வரும் தீவிரப் பிரசாரம் உள்ளிட்ட நடவடிக்கைகளால் பாஜகவுக்கு சாதகமான நிலை ஏற்பட்டுள்ளது.
அதே சமயம் 10 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள காங்கிரஸ், இதுவரை சந்தித்திராத தோல்வியை இந்த தேர்தலில் சந்திக்கவுள்ளது. அக்கட்சி 100-க்கும் குறைவான இடங்களில்தான் வெற்றி பெறும்.
காங்கிரஸ் கூட்டணிக்கு 111 இடங்களில் வெற்றி கிடைக்கும். இதில் காங்கிரஸுக்கு மட்டும் 92 இடங்கள் கிடைக்கும்.
இதுவரை பிற கட்சிகளைவிட அதிக இடங்களில் பாஜக வெற்றி பெறும் என்று மட்டுமே கூறப்பட்டு வந்தது. தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், பாஜகவிற்கு சாதகமான நிலை ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக பாஜக கூட்டணி பெரும்பான்மை பலம் பெற வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் அதிமுகவிற்கு 22 இடங்களிலும், திமுகவிற்கு 14 இடங்களிலும், பாஜக கூட்டணிக்கு 3 இடங்களிலும் வெற்றி கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் பாஜக கூட்டணி 51 இடங்கள், சமாஜ்வாதி கட்சி 14 இடங்கள், பகுஜன் சமாஜ் கட்சி 10 இடங்கள், காங்கிரஸ் கட்சிக்கு 5 இடங்களில் வெற்றி கிடைக்க வாய்ப்புள்ளது.
குஜராத்தில் பாஜகவிற்கு 22, காங்கிரஸிற்கு 4 இடங்களில் வெற்றி கிடைக்கும். மகாராஷ்டிரத்தில் பாஜக கூட்டணிக்கு 37 இடங்கள், காங்கிரஸ் கூட்டணிக்கு 9 இடங்கள், மகாராஷ்டிர நவ நிர்மாண் சேனை கட்சிக்கு ஓரிடத்திலும் வெற்றி கிடைக்கும்.
மத்தியப் பிரதேசத்தில் பாஜக கூட்டணிக்கு 26 இடங்கள், காங்கிரஸிற்கு 3 இடங்களில் வெற்றி கிடைக்கும்.
கர்நாடகத்தில் காங்கிரஸிற்கு 14 இடங்கள், பாஜகவிற்கு 12 இடங்கள், மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கு 2 இடங்களில் வெற்றி கிடைக்கும்.
கேரளாவில் இடதுசாரி கூட்டணிக் கட்சிகளுக்கு 12, காங்கிரஸ் கூட்டணி கட்சிகளுக்கு 8 இடங்களில் வெற்றி கிடைக்கும்.
பிஹாரில் பாஜக கூட்டணிக்கு 24 இடங்கள், ராஷ்ட்ரீய ஜனதா தளத்திற்கு 12 இடங்கள், ஐக்கிய ஜனதா தளத்திற்கு 4 இடங்களில் வெற்றி கிடைக்கும்.
மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸிற்கு 30 இடங்கள், இடதுசாரிக் கட்சிகளுக்கு 8, காங்கிரஸிற்கு 4 இடங்களில் வெற்றி கிடைக்க வாய்ப்புள்ளது.
தெலங்கானாவில் மொத்த முள்ள 17 தொகுதிகளில் தெலங் கானா ராஷ்டிர சமிதிக்கு 8, காங்கிரஸிற்கு 5, பாஜக கூட்டணிக்கு 3, மற்றவை -1, சீமாந்திராவில் மொத்தமுள்ள 25 தொகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சி 15, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் 9, காங்கிரஸ் 1 இடங்களில் வெற்றி பெற வாய்ப்புள்ளது.