

குஜராத் மாநிலம், வதோதராவில் பாஜக பிரதமர் வேட்பாளரும், அந்த மாநில முதல்வருமான நரேந்திர மோடி புதன்கிழமை மனு தாக்கல் செய்தார்.
மக்களவைத் தேர்தலில் குஜராத்தின் வதோதரா தொகுதியிலும், உத்தரப் பிரதேசத்தின் வாரணாசி தொகுதியிலும் நரேந்திர மோடி போட்டியிடுகிறார்.
வதோதராவில் வாக்குப்பதிவு வரும் 30-ம் தேதி நடைபெறுகிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய புதன்கிழமை கடைசி நாளாகும். இதைத் தொடர்ந்து புதன்கிழமை வதோதராவுக்கு வந்த மோடிக்கு பாஜக தொண்டர்கள் சிறப்பான வரவேற்பை அளித்தனர். ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்த மோடி, தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவரின் பெயரை டீ கடை நடத்திவரும் கிரன் மகிதா, வதோதரா மன்னர் பரம்பரையைச் சேர்ந்த சுபாங்கினிதேவி ராஜே கெய்க்வாட் ஆகியோர் முன்மொழிந்தனர்.
சிறிய வயதில் டீ விற்பனையில் ஈடுபட்டவர் மோடி. அவர் பிரதமர் பதவிக்கு தகுதியற்றவர் என்று காங்கிரஸை சேர்ந்த தலைவர் ஒருவர் சில மாதங்களுக்கு முன் விமர்சனம் செய்திருந்தார். இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் டீ கடைகளில் உள்ள பொதுமக்களுடன் வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் மோடி பிரச்சாரம் செய்தார். இந்நிலையில் வதோதராவில் மோடி வேட்பு மனு தாக்கல் செய்தபோது, அவரின் பெயரை டீ கடைக்காரர் கிரண் மகிதா என்பவர் முன்மொழிந்தார்.
வேட்பு மனு தாக்கல் செய்த பின் செய்தியாளர்களிடம் நரேந்திர மோடி கூறியதாவது: “வதோதராவை ஆண்ட கெய்க்வாட் பரம்பரையினர் நல்லாட்சியை தந்தனர். கெய்க்வாட் அரச பரம்பரையினரின் ஆளுகைக்கு உள்பட்ட வட்நகரில்தான் நான் பிறந்தேன். அவர்கள் தொடங்கிய பள்ளியில் தான் கல்வி கற்றேன். முதல்வராக பதவியேற்ற பின்பு, மாநில அதிகாரிகளிடம் மகாராஜா சாயாஜிராவ் கெய்க்வாட் எழுதிய ‘சிறு குறிப்புகள்’ என்ற நூலை படிக்குமாறு அறிவுரை கூறினேன். அதில் பல பயனுள்ள தகவல்கள் இருக்கின்றன. இந்த நகரம் எனது கர்மபூமியாகும்.
இங்கு போட்டியிடும் எனக்கு இப்பகுதி மக்கள் மிகப்பெரிய அளவில் ஆதரவு தந்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என்றார்.
இத்தொகுதியில் மோடியை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் ராகுலின் நெருங்கிய நண்பரும், அக்கட்சியின் பொதுச் செயலாளருமான மதுசூதன் மிஸ்திரி போட்டியிடுகிறார். அவர் தனது வேட்புமனுவை கடந்த 5-ம் தேதி தாக்கல் செய்தார்.
வதோதராவில் பாஜகவின் மாற்று வேட்பாளராக, அத்தொகுதியின் தற்போதைய எம்.பி.யான பாலகிருஷ்ண சுக்லா வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
வாரணாசியில் மோடியை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் அஜய் ராயும், ஆம் ஆத்மி கட்சி சார்பில் அர்விந்த் கேஜ்ரிவாலும் போட்டியிடுகின்றனர்.