

மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் மூன்றாவது அணி மத்தியில் ஆட்சியை அமைக்கும் என்று உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார். பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:
தேர்தலின் போக்கை பார்க்கும் போது ஆட்சியில் அமர்வதற்கு தேவையான எண்ணிக்கையில் பாஜகவுக்கு போதிய எம்.பி. தொகுதிகள் கிடைக்காது என்பதுதான் உண்மை நிலைமை. காங்கிரஸ் கட்சி பலவீனம் அடைந்து விட்டதைத்தான் தேர்தல் முடிவுகள் காட்டப்போகின்றன.
மூன்றாவது அணியுடன் சம்பந்தப்பட்ட கட்சிகள் அதிகபட்ச தொகுதிகளில் வென்று அடுத்த ஆட்சியை அமைக்கப் போவது உறுதி. மூன்றாவது அணி ஆட்சி கள் இதற்கு முன் நிலைக்க முடியாமல் போய் இருக்கலாம். ஆனால் இப்போது இந்தியாவில் ஜனநாயகம் வளர்ந்து முதிர்ச்சி அடைந்துள்ளது.
இனி கூட்டணி முறியாது. கூட்டணிக்குள் கருத்து வேறுபாடுகளும் வராது. கூட்டணிகளின் ஆட்சி தற்காலிக மாக இருந்தாலும் தேசிய ஜனநாயக கூட்டணி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆகியவை தமது பதவிக்காலத்தை பூர்த்தி செய்ததை குறிப்பிடாமல் இருக்க முடியாது.
இந்த தடவை மூன்றாவது அணி ஆட்சி நிலைபெற்று ஆட்சி காலத்தை முடிக்கும். ‘காங்கிரஸ் பலவீனம் அடையும் நிலை ஏற்பட்டால் அத்தகைய நேரங்களில் சமாஜ்வாதியை அந்த கட்சி ஆதரிக்கும்’ என்பது சோஷலிச சிந்தனையாளர் ராம் மனோகர் லோகியாவின் கருத்து. அப்படிப்பட்ட நிலைமைதான் இந்த தேர்தலில் ஏற்படும். எனவே மதச்சார்பற்ற அரசு அமைய காங்கிரஸ் உதவும் என்பதே எனது கணிப்பு.
மே 16க்குப் பிறகு மூன்றாவது அணி உருவாகும். இது சம்பந்த மாக ஒடிசா முதல்வர் பிஜு பட்நாயக், பிகார் முதல்வர் நிதிஷ் குமார் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்துப் பேசி இருக்கிறேன். மூன்றாவது அணியை யார் தலைமை ஏற்று நடத்துவார் என்பதை இப்போதே சொல்ல முடியாது. இந்த அணியுடன் சம்பந்தப்பட்ட கட்சிகள் தேர்தலில் எத்தனை இடங்களை பெறுகின்றன என்பதை வைத்தே யாருக்கு தலைமை பொறுப்பு என்பது தீர்மானிக்கப்படும்.
மதச்சார்பற்ற கொள்கையில் பிடிப்புள்ள சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் நிலையான அரசு அமைப்பது பற்றி ஆலோசனை நடத்துவார்கள்.
அதிக எண்ணிக்கையில் தொண்டர்களையும் பல்வேறு அமைப்புகளையும் கொண்டது சமாஜ்வாதி கட்சி. இதுதான் உத்தரப்பிரதேசத்தில் பாஜக விரிவடைவதை தடுக்க சிறப் பான உத்திகளை வகுத்து செயல் படுகிறது. தமக்கு சோதனையான கால கட்டத்திலும் மதவாத சக்திகளை எதிர்த்து நின்றவர் முலாயம் சிங். மாநில முதல்வராக இருந்த போதும் கடுமையான முடிவுகளை எடுத்தவர்.
வாக்குச் சாவடி நிலையிலேயே பாஜகவை சமாஜ்வாதி தோற்கடிக்கும் என்றார் அகிலேஷ் யாதவ்.