Published : 25 Apr 2014 08:35 AM
Last Updated : 25 Apr 2014 08:35 AM
மக்களவைக்கு 6-ம் கட்டமாக 12 மாநிலங்களில் 117 தொகுதிகளுக்கு வியாழக்கிழமை நடந்த தேர்தலில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது. அசாம் உள்ளிட்ட சில மாநிலங்களில் வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன
ஜார்க்கண்ட் (4 தொகுதிகள்) 63.4%, உத்தரப்பிரதேசம் (12) 58.58 %, மத்தியப்பிரதேசம் (10) 64.4%, மேற்கு வங்கம் (6) 82%, அசாம் (6 தொகுதிகள்) 77.05%, பிஹார் (7) 60%, ஜம்மு காஷ்மீர் ( அனந்த்நாக் தொகுதி) 21%, ராஜஸ்தான் (5) 59.2%, சத்தீஸ்கர் (7) 62.5%, மகாராஷ்டிரத்தில் (19) 55.13% வாக்குகள் பதிவாகின. மொத்தம் 2076 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
அசாமில் கோக்ரஜார் நாடாளுமன்றத் தொகுதியில் நடந்த வன்முறையில் போலீஸ்காரர் ஒருவர் உயிரிழந்ததையடுத்து 5 சாவடிகளில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.
ஒரு வாக்குச்சாவடியை கைப்பற்ற 40 பேர் கும்பல் முயற்சி மேற்கொண்ட தையடுத்து தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக பாலபிரா மற்றும் ஹர்பங்கா கிராமத்தில் நிறுத்தப்பட்டிருந்த எல்லை பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
ராஜஸ்தான் மாநிலம் தவுசா பகுதியில் உள்ள சதா வாக்குச் சாவடியில் 50 பேர் அதிரடியாக நுழைந்ததும் அங்கு காவலில் இருந்த பாதுகாப்புப்படை வீரர்கள் 14 சுற்றுகள் வானத்தை நோக்கி சுட்டனர்.
உத்தரப்பிரதேசம் மதுராவில் உள்ள தவ்லத்பூரில் பாஜக ஆதரவாளர்களுக்கும் ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சியினருக்கும் இடையே நடந்த மோதலில் 3 பேர் காயம் அடைந்தனர். இரு தரப்பிலும் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டதுடன் கல்வீச்சிலும் ஈடுபட்டனர் என போலீஸார் தெரிவித்தனர்.
சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ், பாஜகவின் சுஷ்மா ஸ்வராஜ், மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் உள்ளிட்டோர் 6ம் கட்ட தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள்.
6ம் கட்டத்துடன் மொத்தம் 349 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்துள்ளது. மீதமுள்ள 194 தொகுதிகளுக்கு ஏப்ரல் 30 (89 தொகுதிகள்), மே 7 (64 தொகுதிகள்), மே 12 (41 தொகுதிகள்) ஆகிய கட்டங்களில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மே 16ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.
ஆர்வம் காட்டிய மும்பைவாசிகள்
மும்பை நகரவாசிகள் வாக்குப்பதிவில் ஆர்வம் காட்டாதவர்கள் என்கிற பொதுவான கண்ணோட்டத்தை இந்த தேர்தல் முறியடித்துள்ளது.
மகாராஷ்டிரத்தில் இறுதிக் கட்டமாக நடந்த மக்களவைத் தேர்தலில் மும்பை நகரில் உள்ள 6 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடந்தது. மாலை 6 மணி வரையில் 53 சதவீதம் பேர் வாக்களித்தனர். இது 2009ல் பதிவான வாக்குகளை விட மிகவும் கூடுதலாகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT