

காங்கிரஸ் அரசு தங்கள் நிலங்களை அபகரித்துவிடுமோ என விவசாயிகள் அச்சமடைந்துள்ளதாக பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
ஹரியாணா மாநிலம் ஜாஜரில் நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா மீதான நிலபேர விவகாரத்தை சுட்டிக் காட்டினார். அவர் பேசியதாவது:
ஹரியாணாவில் தந்தை- மகன் கூட்டணி (காங்கிரஸ் முதல் வர் பூபிந்தர் சிங் ஹூடா, அவரது மகன் திபேந்தர் சிங் ஹூடா) வணிகம் நடத்திக் கொண்டிருக்கிறது. டெல்லியில் தாய்- மகன் (சோனியா- ராகுல்) கூட்டணி வணிகம் நடத்துகிறது. இதுபோதாதென்று மருமகனும் (ராபர்ட் வதேரா) களத்தில் குதித்துள்ளார்.
ஹரியாணாவைச் சேர்ந்த விவசாயிகள் மாநில அரசு எப்போது தங்களது நிலங்களை அபகரிக்குமோ என்ற அச்சத்தில் உள்ளனர். இந்த மாநில அரசு விவசாயிகளிடமிருந்து நிலங்க ளைப் பறித்து மிகக் குறைந்த விலைக்கு ஏஜெண்டுகளுக்கு விற்பனை செய்கிறது. இதற்கு காரணம் உங்கள் (ராகுல்) சகோதரியின் கணவர்தான். ஒரு பைசாகூட முதலீடு இல்லாமல் 3 மாதங்களில் ரூ.50 கோடி சம்பாதிக்க முடியுமா? இந்த வித்தை இளவரசரின் (ராகுல்) குடும்பத்துக்கு தெரியும்.
அவர் (ராகுல்) செல்வச் செழிப்பில் பிறந்தவர். நான் ரயில் நிலைய நடைமேடைகளில் டீ விற்று வளர்ந்தவன். அவர் பகட்டான ஆடைகளை உடுத்தி வளர்ந்தவர். நான் அப்படி இல்லை.
நான் உங்களின் சேவகன். 60 மாதங்கள் மட்டும் நாட்டை ஆள எனக்கு வாய்ப்பளியுங்கள். நமது நாட்டை வலிமையான நாடாக மாற்றிக் காட்டுகிறேன் என்றார் நரேந்திர மோடி.