

தேர்தல் வந்தாலும் வந்தது. வாக்காளர்களிடமிருந்து வரும் வித்தியாசமான கோரிக்கைகளை எதிர்கொள்ள முடியாமல் அரசியல்வாதிகள் தவியாய் தவிக்கின்றனர்.
எங்களின் வாக்கு வேண்டு மென்றால் கல்யாண தரகர் வேலை பாருங்கள் என ஹரியாணா இளைஞர்கள் கறாராய்ச் சொல்லிவிட்டனர்.
ஹரியாணா மாநிலத்தில் பாலின விகிதம் மிகக்குறைவாக இருக்கிறது. 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப் பின்படி ஹரியாணாவில் 1,000 ஆண்களுக்கு 879 பெண்கள்தான் உள்ளனர்.
இதனால், ஹரியாணாவில் ஏராளமான ஆண்கள் திருமணத்துக்குப் பெண் கிடைக்காமல் விரக்தியில் உள்ளனர்.
திருமணமாகாதவர்கள் ஒன்று சேர்ந்து அவிவாஹித் புருஷ் சங்கதன் (விவாகமாகா தவர்கள் சங்கம்) என்ற அமைப்பை ஏற்படுத் தியுள்ளனர். வேட்பாளர்கள் வாக்குச் சேகரிக்க வரும்போது, இந்த சங்கத்தைச் சேர்ந்தவர்கள், “எங்களுக்குத் திருமணத் துக்குப் பெண் பார்த்துக் கொடுத்தால், எங்கள் வாக்கு உங்களுக்குத்தான்” எனக் கூறி வருகின்றனர்.
ஆனால், இந்த கோரிக் கையால் எந்தப் பயனுமில்லை. திருமணத்துக்குப் பெண் கிடைப்பது குதிரைக் கொம்பாகி விட்டதால், எந்த அரசியல்வாதியும் இதுதொடர் பாக வாயே திறக்கவில்லை.
பெண் சிசுக்கொலை அதிகரித்ததே பெண் பாலின விகிதம் குறைந்ததற்குக் காரணம் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
பிபிபூர் கிராமத் தலைவர் சுனில் ஜக்லான் கூறுகையில், “பெண் சிசுக்கொலை மிகப்பெரும் பிரச்சினையாக உள்ளது. உடனடியாக இதைத் தடுத்து நிறுத்தாவிட்டால், மிகவிரைவிலேயே மிக மோசமான பின்விளைவைச் சந்திக்க நேரிடும்.
‘பெண்பார்த்துக் கொடு; வாக்களிக்கிறோம்’ என்ற அந்த கோரிக்கை வாசகம், அனைத்து இளைஞர்களும் திருமணத் துக்காகப் பெண் வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கிறார்கள் என்ற அர்த்தத்தில் சொல்லப் படவில்லை. பெண் சிசுக் கொலை பிரச்சினையை அரசியல்வாதிகள் கவனிக்க வேண்டும் என்பதற்காகவே சொல்லி யிருக்கிறோம்”, என்றார்.
இந்திய தேசிய லோக்தளம் வேட்பாளர் ரோடக் ஷம்ஷீர் கார்கரா கூறுகையில், “பெண் சிசுக் கொலை தேர்தல் பிரச்சினை அல்ல; சமூகப் பிரச்சினை. சமூக விழிப்புணர்வு மூலம் இதற்குத் தீர்வு காணப்பட வேண்டும்” என்றார்.