

பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை எதிர்த்து விமர்சிப்பவர்களுக்கு தேர்தலுக்குப் பிறகு இந்தியாவில் இடமில்லை. அவர்கள் பாகிஸ்தானுக்குத்தான் செல்ல வேண்டும் என்று அக்கட்சி வேட்பாளர் கிரிராஜ் சிங் கூறினார்.
அவரது இப்பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்து வருகிறார். அவருக்கு எதிராக பல்வேறு கட்சிகளும் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.
இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலம், தியோகர் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பாஜக பிஹார் மாநில மூத்த தலைவர் கிரிராஜ் சிங் பேசும்போது ‘‘நரேந்திர மோடியை பிரதமராகவிடாமல் தடுப்பவர்கள், பாகிஸ்தானுக்குச் செல்லத் தயாராக இருங்கள். மோடியை விமர்சிப்பவர்களுக்கு வருங்காலத்தில் (தேர்தலுக்குப் பிறகு) இந்தியாவில் இடமில்லை. அவர்கள் வசிக்க பாகிஸ்தானில்தான் இடம் கிடைக்கும்” என்றார்.
இக்கூட்டத்தில் பாஜக முன்னாள் தேசியத் தலைவர் நிதின் கட்கரி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்றிருந்தனர். கிரிராஜின் கருத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
மோடியின் தீவிர ஆதரவாளரான கிரிராஜ் சிங், பிஹாரின் நவாடா தொகுதியில் தற்போது போட்டியிடுகிறார். இவர், 2005 முதல் 2013 வரை பிஹார் மாநில அமைச்சராக பதவி வகித்துள்ளார்.