

பாஜகவும், காங்கிரஸ் கட்சியும் தேர்தல் பிரச்சாரத்துக்கு கறுப்பு பணத்தை பயன்படுத்துகின்றன. சமூக ஊடகங்களுக்கு இவ்விரு கட்சிகளும் செலுத்திய தொகை குறித்து ஆராய ரிசர்வ் வங்கிக்கு உத்தரவிடவேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு முன்னாள் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தவாதி கே.என். கோவிந்தாச்சார்யா கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து தேர்தல் ஆணையர் வி.எஸ். சம்பத்திடம் அவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
தொழில் நிறுவனங்களும் முதலாளித்துவ சக்திகளும் போலியான அரசியல் தலைவர்கள் பெயரில் பெருமளவு பணத்தை தேர்தல் பிரச்சாரத்துக்கு செலவிடுகின்றன. இவை பெரும்பாலும் பத்திரிகை, எலெக்ட்ரானிக், மற் றும் இன்டெர்நெட் ஊடகங் களில் விளம்பரத்துக்கு செலவிடப் படுகிறது.
பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் விளம்பர பட்ஜெட் ரூ.10 ஆயிரம் கோடி என்றும் இதில் 90 சதவீதம் கறுப்பு பணம் என்றும் மத்திய அமைச்சர் ஆனந்த் சர்மா கூறியுள்ளார்.
2011-12-ல் பாஜகவின் வரவுத் தொகை சுமார் ரூ.168 கோடி என வருமான வரித் துறையிடம் கணக்கு காட்டப்பட்டுள்ளது. இந்நிலை யில் ஆனந்த் சர்மா கூறுவது உண்மையானால், அக்கட்சி சார்பில் செலவிடப்படும் கிட்டத் தட்ட எல்லா பணமும் கறுப்பு பணமாகவே இருக்க முடியும்.
இதுபோல காங்கிரஸ் விளம்பர பட்ஜெட் ரூ.400 கோடி என ஆனந்த் சர்மா கூறியதில் தெளிவாகிறது. என்றாலும் 2011-12 வருமான வரி கணக்கு தாக்கல் செய்தபோது, காங்கிரஸ் தனது வரவுத் தொகை ரூ.307 கோடி என்றே கூறியுள்ளது.
இந்நிலையில் கறுப்பு பணப் புழக்கத்தை தடுக்க, விளம்பரத்துக்காக சமூக ஊடகங்களுக்கு இக்கட்சிகள் செலுத்திய தொகை குறித்து ஆராயுமாறு ரிசர்வ் வங்கிக்கு உத்தரவிடவேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.