Published : 08 Apr 2014 12:10 PM
Last Updated : 08 Apr 2014 12:10 PM

தேர்தல் ஆணைய உத்தரவை அமல்படுத்த மம்தா மறுப்பு

மேற்கு வங்கத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள ஆட்சியர், 5 காவல் துறை அதிகாரிகள் மீது புகார் கூறப்பட்டதைத் தொடர்ந்து, அவர்களை பணியிடமாற்றம் செய்ய மாநில அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

ஆனால், அதற்கு முதல்வர் மம்தா பானர்ஜி மறுப்புத் தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநில தலைமைத் தேர்தல் அலுவலர் சுனில் குப்தா, கொல்கத்தாவில் செய்தி யாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது: “தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் ஆர்.கே.யாதவ் (மால்டா), ஹுமாயுன் கபிர் (முர்ஸிதாபாத்), எஸ்.எம்.எச்.மிர்ஸா (பர்த்வான்), பாரதி கோஷ் (மேற்கு மிட்னாபூர்) உள்ளிட்ட 5 அதிகாரிகளையும், வடக்கு 24 பர்கானாஸ் மாவட்ட ஆட்சியர் சஞ்சய் பன்சால் ஆகியோர் மீது புகார் வந்துள்ளது.

அது தொடர்பாக விசாரணை நடத்தியதைத் தொடர்ந்து, அவர்களை தேர்தல் அல்லாத வேறு பணிக்கு மாற்ற மாநில அரசின் தலைமைச் செயலாளர் சஞ்சய் மித்ராவுக்கு உத்தரவிட்டுள்ளோம்” என்றார்.

மம்தா மறுப்பு:

இதுகுறித்து, மம்தா பானர்ஜி பேசியதாவது: “தேர்தல் ஆணை யத்தை மதிக்கிறேன். ஆனால், அதிகாரிகளை மாற்றும் உத்தரவை அமல்படுத்த மாட்டேன். வரம்பு மீறி தேர்தல் ஆணையம் செயல்படக் கூடாது. வேண்டுமானால், நீங்கள் (தேர்தல் ஆணையம்) முதல்வர் பதவியை எடுத்துக் கொள்ளுங்கள். சட்டம், ஒழுங்கை பராமரிக்கும் பணியை நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள்.

அதிகாரத்தைப் பற்றி எப்போதும் நான் கவலைப்பட்டதில்லை. காங்கிரஸ் தான் வெற்றி பெறுவதற்காக கூறும் யோசனையை மட்டும்தான் நீங்கள் (தேர்தல் ஆணையம்) கேட்பீர் களா? ஒரு ஊடக நிறுவனம், காங்கிரஸ், தேர்தல் ஆணையம், பாஜக, மார்க்சிஸ்ட் ஆகியோர் இணைந்து இத்தகைய சதிச்செயலில் ஈடுபட்டுள்ளனர். இதே போன்ற நடவடிக்கையை குஜராத்திலும், சோனியா காந்தி போட்டியிடும் தொகுதியிலும் நீங்கள் மேற்கொள்வீர்களா? தேர்தல் ஆணையத்தின் உத்தரவை அமல்படுத்த மாட்டேன். 5 பேரையும் பணியிட மாற்றம் செய்ய மாட்டேன்.

இதற்காக நீங்கள் என்னை சிறையில் தள்ளினாலும் கவலையில்லை” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x