Published : 06 Apr 2014 09:25 AM
Last Updated : 06 Apr 2014 09:25 AM

அநீதி இழைத்தவர்களை பழிதீர்க்க கிடைத்துள்ள நல்ல வாய்ப்பு தேர்தல்: முஸாபர் நகர் கலவரம் பற்றி அமித் ஷா பேச்சு சர்ச்சை

உத்தரப் பிரதேச மாநிலம் முஸாபர்நகரில் கடந்த ஆண்டு நிகழ்ந்த வகுப்பு மோதலின்போது மனம் புண்பட வைத்ததற்காக பழி தீர்க்க இந்த தேர்தல் சரியான வாய்ப்பு என பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் நெருங்கிய சகாவான அமித் ஷா தெரிவித்துள்ளார்.

இந்த தொகுதியில் திங்கள் கிழமை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் அவர் தெரிவித்த கருத்து வகுப்புவாத உணர்வை மேலோங்கச் செய்யும் என கருதப்படுகிறது. இரு நாள்களுக்கு முன் பல்வேறு சமூகத் தலைவர்களைச் சந்தித்துப் பேசியபோது ஷா கூறியதாவது: உத்தரப் பிரதேசத்தில் குறிப்பாக மேற்கு உத்தரப் பிரதேசத்தில் மானம், மரியாதையைக் காக்கின்ற தேர் தலாக இதை எடுத்துக் கொள்ள வேண்டும்.

நமது மனதைப் புண்பட வைத்ததற்காக பழி தீர்த்துக் கொள்ளும் தேர்தலாகும். அநீதி இழைத்த தலைவர்களுக்கு பாடம் கற்பிக்க கிடைத்துள்ள வாய்ப்பு இது. உணவு, உறக்கம் இல்லாமல் கூட மனிதன் உயிர் வாழ முடியும். ஆனால் பிறர் நம்மை அவமானப் படுத்தும்போது எப்படி தாங்கிக் கொள்ளமுடியும். இதற்கு பழி தீர்க்க வேண்டும் என்றார் ஷா.

அமித் ஷாவின் கருத்துக்கு பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

ஷாவை கைது செய்யக் கோரி காங்கிரஸ் மனு

இந்நிலையில், வகுப்பு மோதல் நிகழ்ந்த உத்தரப் பிரதேச மாவட்டங்களில் விரோதம் வளர்க்கும் வகையில் பேசிய தற்காக அமித் ஷாவை கைது செய்யக் கோரியும் அவர் பிரச்சாரம் செய்ய தடை விதிக்கக் கோரியும் தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் மனு செய்துள்ளது.

நாட்டுமக்கள் இடம்தரக்கூடாது

சமூகத்தை பிளவுபடுத்த முனை யும் சக்திகளுக்கும் வகுப்புவாத நஞ்சை பரப்புவோருக்கும், நாட்டு மக்கள் இடம் தரக் கூடாது அவர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா கேட்டுக் கொண்டுள்ளார்.

சமாஜ்வாதி தாக்கு

மோடியும் அவரது ஆதவாளர்களும் பாசிஸவாதிகள் என்பதை ஷா பேச்சு நிரூபிக்கிறது என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் ராம் கோபால் யாதவ் கூறியுள்ளார்.

சரியான கருத்து-பா.ஜ.க

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூட மத அடிப்படையில்தான் வாக்கு சேகரிக்கிறார். மத ரீதியில் வாக்காளர்களை பிரிக்கும் முயற்சியை ஆரம்பித்ததே மதச்சார்பற்ற கட்சிகள் எனக் கூறிக் கொள்பவைதான். அமித் ஷாவின் பேச்சில் தவறு ஏதும் இல்லை என்று பாஜக செய்தித்தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x