Published : 07 Apr 2014 12:00 AM
Last Updated : 07 Apr 2014 12:00 AM

ஆம் ஆத்மி கட்சியில் பிளவு: 2 தேர்தல் அறிக்கைகள் வெளியீடு

மணிப்பூர் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது. அடுத்தடுத்த நாட்களில் இரு பிரிவினர் சார்பில் தனித்தனியே தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

ஆம் ஆத்மி கட்சியின் மணிப்பூர் மாநில ஒருங்கிணைப்பாளர் மனிஹார்சிங், இணை ஒருங்கிணைப்பாளர் ஜோகிந்திரோசிங் ஆகியோர் கட்சியின் தேர்தல் அறிக்கையை தலைநகர் இம்பாலில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்டனர். முப்பது அம்சங்கள் கொண்ட இந்த அறிக்கை ‘நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை குழு’ என்ற பெயரில் வெளியானது.

இதற்கு மறுநாள், ஆம் ஆத்மியின் மணிப்பூர் மாநில தேர்தல் குழு, 10 அம்சங்களுடன் கூடிய மற்றொரு தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. தேர்தல் குழுவின் அமைப்பாளர் ஹரேஷ்வர் கோஸ்வாமி இதை வெளியிட்டார். மணிப்புரி மொழியில் பிரச்சார பாடல் சி.டி.யுடன், ‘மணிப்பூர் தேர்தல் குழு’ என்ற பெயரில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஹரேஷ்வர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “முதலில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கை போலியானது. இது, மனிஹார்சிங் மற்றும் ஜோகிந்திரோ செய்த சதியாகும். ஆம் ஆத்மியின் தேசிய அமைப்பு எங்களுக்கு மட்டுமே தேர்தல் அறிக்கை வெளியிடும் அதிகாரத்தை கொடுத்துள்ளது” என்றார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் ஜோகிந்திரோ கூறுகையில், “தேர்தல் முடிந்தவுடன் ஹரேஷ்வர் தலைமையிலான தேர்தல் குழு கலைக்கப்பட்டுவிடும். எனவே எங்கள் மீது நடவடிக்கை எடுக்க அவர்களுக்கு அதிகாரம் இல்லை” என்றார்.

இதனால், மணிப்பூரின் ஆம் ஆத்மி கட்சியில் பிளவு ஏற்பட்டிருப்பதாகக் கருதப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x