

பிகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் மகளும் பாடலிபுத்திரம் தொகுதி வேட்பாளருமான மிசா பாரதியின் (39) சொத்து மதிப்பு ரூ.4.72 கோடி என அவரது வேட்பு மனுவில் கூறப்பட்டுள்ளது.
அதே தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் மிசாவின் மாமா ராம் கிருபால் யாதவ் (53) தனக்கு ரூ.1.39 கோடி மட்டுமே சொத்து இருப்பதாக தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
ராஷ்ட்ரிய ஜனதா தளம் சார்பில் போட்டியிடும் மிசா பாரதி, தனக்கு ரூ.1.74 கோடி மதிப்பிலான அசையா சொத்து இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். இதில் கணவர் (ரூ.72 லட்சம்) மற்றும் 2 மகள்களின் (ரூ.18.71 லட்சம்) சொத்தும் அடங்கும். மேலும் தனக்கு ரூ.3.01 கோடி மதிப்பிலான அசையா சொத்து இருப்பதாகவும் கூறியுள்ளார். இதில் கணவர், மகள்களின் சொத்து மதிப்பு ரூ.1.39 கோடி.
தன்னிடம் ரூ.80 ஆயிரமும், தனது கணவரிடம் ரூ.70 ஆயிரமும் ரொக்கம் இருப்பதாகவும் கூறியுள்ளார். எம்பிபிஎஸ் படித்துள்ள மிசா பாரதி, இந்திய தண்டனை சட்டப் பிரிவு 188 (அரசு பணி உத்தரவை மதிக்காதது) மற்றும் 171 (எப்) ஆகிய பிரிவுகளின் கீழ் தானாபூர் நீதிமன்றத்தில் தன் மீது வழக்கு நிலுவையில் இருப்பதாகவும் மனுவில் கூறியுள்ளார்.
ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த ராம் கிருபால் யாதவ், பாடலிபுத்திரம் தொகுதியை தனக்கு ஒதுக்காததால், அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தொகுதியில் இப்போது எம்பியாக உள்ள ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த ரஞ்சன் பிரசாத் யாதவ் மீண்டும் போட்டியிடுகிறார்.