

பாலிவுட் சூப்பர்ஸ்டார் சல்மான் கானின் தந்தையும் சிறந்த எழுத்தாளருமான சலிம் கான், பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் இணையதளத்தை புதன்கிழமை உருது மொழியில் அறிமுகப்படுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, மும்பையின் பாந்த்ரா பகுதியில் உள்ள அவரது வீட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக மூத்த தலைவர் என்.சி. ஷைனாவும் கலந்து கொண்டார்.
இதுகுறித்து சலிம் கான் கூறுகையில், "நரேந்திர மோடி எனது நண்பர். உருது மொழி எனக்குப் பிடிக்கும் என்பதால், மோடியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை (www.narendramodi.in) எனது இல்லத்தில் உருது மொழியில் அறிமுகம் செய்துள்ளேன். இதுகுறித்து மோடிக்கு நான்தான் ஆலோசனை தெரிவித்தேன். இது முஸ்லிம் வாக்காளர்களை ஈர்ப்பதற்கான பாஜகவின் தந்திரம் அல்ல.
குஜராத் மாநிலம் கோத்ராவில் கடந்த 2002ம் ஆண்டு நடைபெற்ற கலவரத்துக்கு பின் ஏற்பட்ட மோதல் சம்பவங்களை மறந்து விடவேண்டும். முஸ்லீம்கள் இப்போது பாதுகாப்பாக உள்ளனர் என்றார்.
சலிம் கான் செய்தித்தாள்கள் மற்றும் பருவ இதழ்களில் கட்டுரை எழுதி வருகிறார். இதனால் மோடிக்கும் இவருக்கும் இடையே நட்பு மலர்ந்தது.