

கும்பா.கோவிந்தசாமி - செயலாளர், கைத்தறிப் பட்டு ஜவுளி உற்பத்தியாளர் சங்கம், கும்பகோணம்.
கும்பகோணம் பகுதியில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு கைத்தறிப் பட்டு நெசவாளர்களும் 1,000-க்கும் மேற்பட்ட பெரும் நெசவாளர்களும் நொடித்துப்போய் வேலையில்லாமல் இருக்கிறார்கள். விசைத்தறிகளின் போட்டியும் பட்டுநூலின் விலை உயர்வும்தான் இதற்குக் காரணம். இதனைச் சரிசெய்ய மத்திய அரசு கடந்த 2011-12-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் ரூ.3,000 கோடி மதிப்பிலான ஒரு திட்டத்தைக் கொண்டுவந்தது. ஆனால், கூட்டுறவுச் சங்கங்களுக்கு மட்டுமே அதனால் பலன் கிடைத்தது. சிறு மற்றும் பெரிய கைத்தறி நெசவாளர்களுக்கு அதனால் எந்தப் பலனும் இல்லை.
நாளுக்கு நாள் வங்கிக் கடன் வட்டி ஏறிக்கொண்டே போகிறது. ஏராளமான சிறு கைத்தறிக் கூடங்கள் மூடப்பட்டு வருகின்றன. நெசவாளர்கள் பிற தொழில்களில் கூலி வேலைக்குச் செல்கிறார்கள். அதனால், வரவிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் மத்திய அரசின் அந்தத் திட்டத்தை நெசவுத் தொழில் செய்யும் அனைவருக்கும் ஏற்புடையதாக மாற்றித்தர வேண்டும். அப்போதுதான் கும்பகோணம் பகுதியில் அழியும் நிலையில் இருக்கும் கைத்தறிப் பட்டுத் தொழிலைக் காப்பாற்ற முடியும்.