Published : 01 Apr 2014 04:51 PM
Last Updated : 01 Apr 2014 04:51 PM

வறட்சியும் வெள்ளமும் புரட்டிப்போடும் மயிலாடுதுறை!

# காவிரி, கொள்ளிடம் ஆறுகளின் கடைமடை என்பதுதான் இந்தத் தொகுதியின் வரம். ஆனால், அதுவே சாபமாக மாறிப்போனதுதான் சோகம். கர்நாடகாவில் தண்ணீர் தராததால் இங்கு மூன்று போகம் என்பது ஒரு போகமாகிவிட்டது என்று விவசாயிகள் வருத்தப்படுகிறார்கள். மழைக் காலம் எனில், மேட்டூருக்குக் கீழே இருக்கும் அத்தனை வெள்ளமும், மேட்டூரில் இருந்து திறந்துவிடப்படும் வெள்ளமும் தாண்டவமாடும் நிலப் பகுதியும் இதுதான். தடுப்பணைகள் கட்டி நீர் மேலாண்மைத் திட்டங்களை எந்த அரசும் செயல்படுத்தவில்லை. அதனால், வறட்சி அல்லது வெள்ளம் என இரண்டோடும் போராடுகிறார்கள் மக்கள்.

# ஆங்கிலேயர்கள் தரங்கம்பாடி கோட்டைக்கு வருவதற்கும், வணிகர்கள் செட்டிநாட்டுக்குச் செல்வதற்கும் அமைத்த பாரம்பரியம் மிக்க ரயில் பாதைகள், சாலைகள் இருந்த இந்தத் தொகுதியில், தற்போது இரண்டுமே சொல்லிக்கொள்ளும் நிலையில் இல்லை. ரொம்ப காலத்துக்குப் பிறகு, இப்போதுதான் அகல ரயில்பாதைத் திட்டம் எட்டியிருக்கிறது. தொகுதியில் ஒரு இடத்தில்கூட இன்னமும் இரட்டை ரயில்பாதை கிடையாது.

# தவிர, மீட்டர் கேஜ் பாதையில் ஓடிய எண்ணிக்கையில்கூட இப்போது ரயில்கள் இயக்கப்படுவது இல்லை. ஜெயங்கொண்டம் வழியாக கும்பகோணம், விருத்தாசலம் ரயில்பாதைத் திட்டத்தைத் தொடர்ந்து வலியுறுத்தி, ஆய்வுப் பணிகள் முடிந்தும் அது நிலுவையில்தான் உள்ளது.

# பழமையான சென்னை - கும்பகோணம் நெடுஞ்சாலை மற்றும் விக்கிரவாண்டி - பண்ருட்டி - கும்பகோணம் - தஞ்சை சாலைகளை நான்குவழிச் சாலைகளாக மாற்ற வேண்டும். சிதம்பரம்-மயிலாடுதுறை வழியாகச் செல்லும் தேசிய நெடுஞ்சாலையும் பழுதாகிக்கிடக்கிறது. அதையும் சரி செய்ய வேண்டும் என்கின்றனர் மக்கள்.

# வட மாநிலங்களில் நடக்கும் கும்பமேளாவுக்கு இணையாக நடக்கும் மகாமகத்துக்கு மத்திய அரசு எந்த உதவிகளும் செய்ததில்லை. அதற்கான திட்டங்களும் தீட்டியதில்லை. பல லட்சம் பேர் திரளும் இந்தத் திருவிழாவைத் தேசிய விழாவாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். இங்கு மகாமகம் விழாவின்போது லட்சக் கணக்கான மக்கள் குவிவதால் அவர்களுக்கு தங்குமிடம் கிடைப்பதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது. எனவே, அரசு சார்பில் திருப்பதி தேவஸ்தானத்தில் இருப்பதுபோன்ற குறைந்த கட்டணத்தில் தங்குமிடங்கள் ஏற்படுத்தித் தரவேண்டும் என்கின்றனர் ஆன்மிகவாதிகள்.

# விவசாயமே பிரதான தொழில் என்பதால், விவசாயத்தை மையப்படுத்தி நவீன அரிசி ஆலைகள், தவிட்டு எண்ணெய் தொழிற்சாலை, உரத் தொழிற்சாலை ஆகியவற்றை இங்கு அமைக்க வேண்டும் என்பது தொகுதி மக்களின் பிரதான கோரிக்கையாக இருக்கிறது.

# தொகுதிக்குள் வேலைவாய்ப்பு மிக மோசமாக இருக்கிறது. படித்த இளைஞர்கள் சென்னை, திருச்சி அல்லது வெளிமாநிலங்களுக்குச் சென்றுதான் வேலை பார்க்கிறார்கள். புதிய தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்பப் பூங்கா போன்றவை இந்தப் பகுதியில் அமைக்கப்பட வேண்டும் என்பது படித்த இளைஞர்களின் கருத்தாக இருக்கிறது.

# கும்பகோணத்தில் நசிந்துவரும் நெசவுத் தொழிலுக்கு மத்திய அரசின் மானிய உதவிகளை பெற்றுத் தர வேண்டும்.

# மீன்பிடித் துறைமுகங்கள் நிறைய இருந்தாலும், சோழர் காலத்தில் இருந்தே துறைமுகமாக இருக்கும் பூம்புகாரைப் பெரிய துறைமுகமாக்க இப்போதுதான் 78.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. விரைவில் பணிகளைத் தொடங்க வேண்டும் என்பது மக்களின் விருப்பம்.

# தொகுதியின் பல இடங்களில் கழிவுநீர், குப்பை முறையாக அகற்றப்படுவதில்லை. இது தொடர்பாக மக்கள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x