Published : 09 Apr 2014 05:59 PM
Last Updated : 09 Apr 2014 05:59 PM
# தமிழகத்தின் விளவங்கோடு, கேரளத்தின் பாறசாலை ஆகிய பகுதிகளின் விவசாயத்துக்குப் பயன்படும் வகையில், கடந்த 1963-ல் இரு மாநிலங்கள் சார்பிலும் கால்வாய் வெட்டப்பட்டு நெய்யாற்றின் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. கடந்த 2004-ம் ஆண்டு ‘கேரள நீர் ஆதாரங்களில் இருந்து பிற மாநிலங்களுக்குத் தண்ணீர் வினியோகிக்கக் கூடாது’ எனப் புதிதாக ஒரு சட்டத்தை இயற்றி, தமிழகத்தின் விளவங்கோடு தாலுகாவுக்கு வந்துகொண்டிருந்த தண்ணீரை கேரள அரசு நிறுத்தியது. இதனால், விளவங்கோடு தாலுகாவில் நெல் உள்ளிட்ட முக்கியப் பயிர்களின் சாகுபடி அறவே நின்றுபோனது. இதன் எதிர்விளைவாக இந்தப் பகுதிவாசிகள் கூலித் தொழிலாளர்களாக கேரளாவுக்குச் சென்றுகொண்டிருக்கின்றனர். தேர்தலுக்குத் தேர்தல் ஓட்டு அறுவடைக்கு மட்டுமே நெய்யாறு பிரச்சினை குமரி மாவட்டத்தில் எதிரொலிக்கின்றது.
# 1990 முதல் இன்று வரை குமரி மாவட்டத்தில் மீன் பிடிக்கக் கடலுக்குச் சென்ற 174 மீனவர்கள் மாயமாகியிருக்கின்றனர். அவர்களின் கதி என்ன என்று அரசு இதுவரை கண்டுபிடிக்கவில்லை. கடல் தொழிலின்போது ஏற்படும் பாதிப்புகளைத் தெரிவிக்க மீனவர்களுக்குத் தொலைத் தொடர்புக் கருவிகள் வழங்க வேண்டும். மீனவர்கள் காணாமல் போகும்போது அவர்களைக் கண்டுபிடிக்க குமரி மாவட்டத்துக்கு ஹெலிகாப்டர் வேண்டும் என்ற கோரிக்கையும் கிடப்பில் கிடக்கின்றது. மீனவர்கள் பிடித்துவரும் மீன்களைப் பதப்படுத்தும் நிலையங்கள் இல்லை. ஒரு லட்சத்துக்கும் மேல் இருக்கும் மீனவர் வாக்குகளைப் பெற முட்டிமோதும் கட்சிகள், அவர்கள் நலனில் கவனம் செலுத்துவதில்லை என்கிறார்கள் மீனவர்கள்.
# இயற்கையிலேயே அமைந்த துறைமுகங்களில் ஒன்று குளச்சல். இந்தத் துறைமுகத்தில் பல ஆண்டுகளாகவே சரக்குகளை ஏற்றி இறக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்தத் துறைமுகத்தில் 1995-ம் ஆண்டோடு கப்பல் போக்குவரத்து நின்றுபோனது. சேது சமுத்திரத் திட்டத்தின் ஒரு பகுதியாகக் குளச்சல் துறைமுகம் திட்டத்தை நிறைவேற்ற ஆய்வு நடந்தது. அதோடு சரி, ஆனால், பணிகள் மட்டும் கேரள மாநிலம் விழிஞ்சத்தில் நடந்ததால், அதிருப்தியில் இருக்கின்றனர் இப்பகுதி மக்கள்.
# பொன். ராதாகிருஷ்ணன் மத்திய அமைச்சராக இருந்தபோது, குமரி மாவட்டத்தை விளையாட்டுத் துறையில் முன்னிலைப்படுத்த ராஜாக்கமங்கலம் பகுதியில் மத்திய அரசின் சாய் விளையாட்டு மையம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது. கடலோர ஒழுங்காண்மைச் சட்டத்தின்படி விளையாட்டு மையம் அமைக்க அது ஏற்ற இடமல்ல என அந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
# மார்த்தாண்டம் பகுதியை இந்தியாவின் தேன் கிண்ணம் என்று வர்ணிப்பார்கள். இந்திய அளவில் அதிக அளவு தேன் இங்கு உற்பத்தி செய்யப்படுகிறது. சுற்றுவட்டாரக் கிராமங்களில் பல ஆயிரம் குடும்பத்தினர் தேனீ வளர்ப்பைக் குடிசைத் தொழிலாகச் செய்கின்றனர். சமீப காலமாகத் தேனீக்களை வைரஸ் நோய் தாக்கியதால், தேன் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதற்குத் தீர்வு தெரியாமல் தேனீ வளர்ப்போர் விழி பிதுங்கி நிற்கின்றனர். மார்த்தாண்டம் பகுதியில் தேனீ வளர்ப்பை ஊக்கப்படுத்தும் வகையில் தேனீ ஆராய்ச்சி மையம் வேண்டும் என்பது விவசாயிகளின் நீண்டகாலக் கோரிக்கை.
# ரப்பர் அதிக அளவில் விளையும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பர் ஆராய்ச்சி மையமும், ரப்பர் தொழிற்சாலையும் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாகக் கிடப்பில் உள்ளது.
# விவேகானந்தபுரத்தில் இருந்து கன்னியாகுமரி வரை மின்கம்பிகளை மண்ணில் புதைக்கும் திட்டம் கிடப்பில் உள்ளது.
# நீர் குறைவாக இருப்பதாகக் காரணம் காட்டி, திருவள்ளுவர் சிலைக்கு அடிக்கடி படகுப் போக்குவரத்து நிறுத்தப்படுகிறது. இந்தக் குறையைப் போக்கும் வகையில் விவேகானந்தர் பாறையில் இருந்து, திருவள்ளுவர் சிலைக்குப் பாலம் அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கையும் கிடப்பில் கிடக்கின்றது. ரோப் கார் திட்டம், பாதாளச் சாக்கடைத் திட்டம், சுற்றுலாத் தலங்களை இணைத்து பேருந்துவிடும் திட்டம், சுற்றுலா மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளும் கிடப்பில் கிடக்கின்றன.
# நாகர்கோவில், மார்த்தாண்டம் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த மேம்பாலம், ரிங்ரோடு உள்ளிட்ட கோரிக்கைகளும் கிடப்பில் போடப்பட்டுள்ளன. படித்தவர்கள் அதிகம் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் வேலைவாய்ப்பை உருவாக்கத் தொழிற்சாலைகள் எதுவும் இல்லை. புதிய தொழிற்கூடங்கள் வேண்டும் என்ற கோரிக்கையும் புறக்கணிக்கப்படுகிறது.
# கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து மண்டைக்காடு வரை செல்கின்றது ஏ.வி.எம் கால்வாய். இதைக் கேரள அரசு முறையாகப் பராமரிக்கின்றது. ஆனால், தமிழகத்தில் ஆக்கிரமிப்புகளின் பிடியில் சிக்கி ஏ.வி.எம் கால்வாய் சுருங்கியுள்ளது. இக்கால்வாயைச் சீரமைப்பதன் மூலம் கடலோரக் கிராமங்களில் உள்ள மக்களுக்கு நல்ல குடிநீர் கிடைக்கும்.
# நாகர்கோவில் - திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலைக்காக ஏராளமானோர் வீடுகளை இழந்துள்ளனர். அவர்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்கவில்லை. பணிகளும் ஆமை வேகத்தில் நடக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT