Published : 07 Apr 2014 07:51 PM
Last Updated : 07 Apr 2014 07:51 PM

ராமர் கோயில்: பாஜக தேர்தல் அறிக்கை மீது காங்., மார்க்சிஸ்ட், ஆம் ஆத்மி கட்சிகள் சாடல்

அயோத்தியில் ராமர் கோயில் உள்ளிட்ட பாஜகவின் தேர்தல் அறிக்கையின் அம்சங்களை காங்கிரஸ், கம்யூனிஸ்ட், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன.

காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங்: "பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கை, அரசியல் ஆதாயங்களுக்காக மதத்தை அக்கட்சி பயன்படுத்துகிறது என்பதைத் தெளிவாகக் காட்டி இருக்கிறது. மதவாதத்தை பேசி மதத்தை அரசியல் ரீதியாக செயல்படுத்த நினைக்கின்றனர்."

மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி: "பாஜக தேர்தல் அறிக்கையில் ராமர் கோயில் கட்டப்படும் என்று வாக்குறுதி அளித்திருப்பது இந்துக்களின் வாக்குகளை ஈர்க்கவே ஆகும். முற்றிலும் இந்துதுவாவின் பிரதிபலிப்புதான் பாஜக என்பது மீண்டும் ஒருமுறை நிரூபனமானது. அரசியலமைப்பின் அடிப்படையில் ராமர் கோயில் அமைக்கப்படும் என்றால், பாபர் மசூதி எந்த அரசியல் அமைப்பு சட்டத்தின் மூலம் அகற்றப்பட்டது எனபதை பாஜக விளக்க வேண்டும்."

ஆம் ஆத்மி கட்சி: "ராமர் கோயில் கட்டப்படும்; சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகள், வகுப்புவாத மற்றும் பிரிவினைக் கொள்கைகள்தான் பாஜகவின் உண்மையான நோக்கம் என்பதை தெளிவுபடுத்தியுள்ளது. ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதாவை நிறைவேற்றவும், தேர்தல் சீர்திருத்தத்துக்கும் எந்த வாக்குறுதியும் அளிக்காததில் இருந்தே பாஜகவின் நிலைப்பாடு தெளிவாகத் தெரிந்துவிடுகிறது."

ஜம்மு - காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா: "சட்டப் பிரிவு 370-ஐ திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாஜக கூறியுள்ளதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. முதலில் இதற்கு முன்னர் ஆட்சியில் இருந்தபோது பாஜக இது குறித்து அக்கறை காட்டியதா என்று நினைவுகூர்ந்து பார்க்க வேண்டும். பாஜக இதற்கு முன்னரும் இதே அடிப்படை கொள்கைகளை கொண்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.''

தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா: "பாஜக தனது கனவுகளை எல்லாம் தேர்தல் அறிக்கை என்று கூறி மக்களை ஏமாற்றுகிறது."

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரஷீத் ஆல்வி: "அனைத்து மக்களுக்கும் வீடு கட்டி தரப்படும் என்று பாஜக சொல்கிறது. ஆனால் இதற்கெல்லாம் எங்கிருந்து பணம் வரும்? எப்போது வரும்? என்பதை அக்கட்சி விளக்கவில்லையே."

மக்களவை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு திரிபுரா, அசாமில் இன்று நடைபெற்றது. இதனால் இந்த இரண்டு மாநிலங்களில் பாஜக தேர்தல் அறிக்கை தொடர்பான செய்திகள் எதுவும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x