Published : 12 May 2014 07:59 AM
Last Updated : 12 May 2014 07:59 AM

இறுதிகட்ட தேர்தல்: 41 மக்களவை தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடங்கியது

மக்களவைக்கான இறுதி கட்ட வாக்குப் பதிவு, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், பிஹார் ஆகிய மாநிலங்களில் உள்ள 41 தொகுதிகளில் இன்று காலை தொடங்கியது.

மொத்தமுள்ள 543 தொகுதி களில் கடந்த 8 கட்டங்களாக 502 தொகுதிகளில் வாக்குப்பதிவு முடிவடைந்துவிட்டன. சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் நிகழ்ந்த ஒன்றிரண்டு வன்முறை சம்பவங்களைத் தவிர, பெரும்பாலான தொகுதிகளில் அமைதியாகவே வாக்குப்பதிவு நடந்தது. இந்த 8 கட்டங்களில் சராசரியாக 66 சதவீத வாக்காளர்கள், தங்களின் வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.

இன்று 9-வது கட்டமாக உத்தரப் பிரதேசத்தில் 18 தொகுதிகளிலும், மேற்கு வங்கத்தில் 17 தொகுதிகளிலும், பிஹாரில் 6 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. தேர்தல் களத்தில் உள்ள 606 வேட்பாளர்களின் வெற்றி தோல்வியை 9 கோடி வாக்காளர்கள் நிர்ணயிக்க உள்ளனர்.

வாரணாசியில் கடும் போட்டி

உத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசியில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவாலும், காங்கிரஸ் சார்பில் அஜய் ராயும் போட்டியிடுகின்றனர். மோடிக்கும், கேஜ்ரிவாலுக்கும் இடையே கடும் போட்டி காணப்படுகிறது. இதனால், இத்தொகுதி நாடு முழுவதும் மிகுந்த கவனத்தைப் பெற்றுள்ளது. இந்த தொகுதியில் வாக்குப்பதிவின்போது பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள 4 ஆயிரம் துணை ராணுவப் படை வீரர்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கேமராக்களை பொருத்தி வாக்குப்பதிவை கண்காணிக்கவும், வீடியோ பதிவு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாஜக கோரிக்கை

இந்நிலையி்ல, உத்தரப் பிரதேசத்தில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள 18 தொகுதிகளிலும் பெரிய அளவில் ரகளையில் ஈடுபட மாநிலத்தை ஆளும் சமாஜ்வாதி கட்சி திட்டமிட்டுள்ளதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது. எனவே, 18 தொகுதிகளிலும் கூடுதலாக துணை ராணுவப் படையினரை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் பாஜக மாநிலத் தலைவர் லட்சுமிகாந்த் பாஜ்பாய் கடிதம் எழுதியுள்ளார்.

கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியும் கோரிக்கை விடுத்துள்ளார்.

முக்கிய பிரமுகர்கள்

மத்திய அமைச்சர் அதிர் ரஞ்சன் சவுத்ரி (மேற்கு வங்கத்தின் பெர்ஹாம்பூர்), சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் (உத்தரப் பிரதேசம் ஆஸம்கர்), பாஜக மூத்த தலைவர் ஜெகதாம்பிகா பால் (உத்தரப் பிரதேசம் - தோமாரியாகஞ்ச்), மத்திய அமைச்சர் ஆர்.பி.என். சிங் (உத்தரப்பிரதேசம் குஷிநகர்), முன்னாள் அமைச்சரும், ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் மூத்த தலைவருமான ரகுவம்ச பிரசாத் சிங் (பிஹார் வைசாலி) ஆகியோர் தேர்தல் களத்தில் உள்ள முக்கிய பிரமுகர்களாவர்.

இன்று நடைபெற்று வரும் 9-ம் கட்ட (இறுதி) வாக்குப் பதிவைத் தொடர்ந்து, அனைத்து தொகுதிகளுக்குமான (543) வாக்கு எண்ணிக்கை வரும் 16-ம் தேதி நடைபெறும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x