Published : 02 May 2014 09:19 PM
Last Updated : 02 May 2014 09:19 PM

சோனியா காந்தி பேச்சுக்கு அமைதி காத்தது சீமாந்திரா

சீமாந்திராவில் நடந்த காங்கிரஸ் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தியின் பேச்சுக்கு, எவ்வித ஆரவார வரவேற்பும் தரப்படாதது, அப்பகுதி மக்களின் அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் இருந்தது.

ஆந்திரத்தில் இருந்து தெலங்கானா தனி மாநிலமாக பிரிக்கப்பட்டதற்குப் பிறகு, முதல் முறையாக சீமாந்திராவுக்கு பயணம் மேற்கொண்ட காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மக்களின் அதிருப்தியை நேரில் கண்டார்.

சீமாந்திராவில் இம்மாதம் 7-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், குண்டூரில் உள்ள ஆந்திர முஸ்லிம் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற காங்கிரஸ் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் சோனியா காந்தி கலந்துகொண்டு பேசினார்.

சோனியா காந்தியின் 30 நிமிடப் பேச்சை வரவேற்கும் வகையில், கூட்டத்தில் இருந்து ஒருமுறை கூட கைத்தட்டலோ, ஆரவாரமோ எழுப்பப்படவில்லை.

ஆந்திர மாநிலத்தை இரண்டாகப் பிரித்தது குறித்து உருக்கத்துடன் விவரித்த சோனியா காந்தி, சீமாந்திரா மக்கள் நலனில் கருத்தில்கொண்டே நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறினார்.

பல ஆண்டுகளாக தெலங்கானா மக்களின் கோரிக்கைக்கு காங்கிரஸ் மதிப்பளித்து, மாநில பிரிவினைக்கு இறுதி முடிவு மேற்கொண்டது என்றும், இது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது என்றும் அவர் கூறினார்.

சீமாந்திரா இளைஞர்களின் வேலை வாய்ப்புக்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும், சீமாந்திரா வளர்ச்சிக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், ஆந்திர மாநிலத்துக்கு மத்திய அரசு செய்துள்ள நலத் திட்டங்களை அவர் பட்டியலிட்டார்.

தனது பேச்சை வரவேற்காமல், சீமாந்திரா மக்கள் அமைதி காத்தது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு பெரும் ஏமாற்றத்தை தந்ததாக தெரிகிறது.

இக்கூட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றாலும்கூட, எதிர்பார்த்த கூட்டம் வரவில்லை என்பதை மிகுதியாக காலியாக இருந்த இருக்கைகளே காட்டின.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x