Published : 08 May 2014 10:21 AM
Last Updated : 08 May 2014 10:21 AM

தமிழகத்தில் கடைசி 2 நாள் பணப்பட்டுவாடா: தமிழக தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் பேட்டி

மக்களவைத் தேர்தலின் கடைசி 2 நாளில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டது என தமிழக தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்துள்ளார். இருப்பினும் பணப்பட்டுவாடா செய்தது எந்தக் கட்சி என்பதைத் தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார்.

தமிழக மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக தேர்தல் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மதுரை உள்பட 8 மாவட்டங்களில் உள்ள 9 மக்களவைத் தொகுதியின் தேர்தல் அதிகாரிகளுக்கான பயிற்சி முகாம் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. தேர்தல் அதிகாரிகளுக்கு தமிழக தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் பயிற்சி அளித்தார்.

முன்னதாக, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் மே 16-ம் தேதி எண்ணப்படுகின்றன. இது தொடர்பாக தேர்தல் அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. சென்னை, கோவை, திருச்சியில் பயிற்சி முகாம் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. தற்போது மதுரையில் நடத்தப்படுகிறது.

தமிழகத்தில் தபால் ஓட்டுகள் அதிகமாக வழங்கப்படவில்லை என புகார்கள் வந்துள்ளன. இது தொடர்பாக ஆட்சியர்களிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது. சில ஆட்சியர்கள் பதில் அளித்துள்ளனர். தபால் ஓட்டுகளுக்கான விண்ணப்பங்கள் சரியாக பூர்த்தி செய்யப்படாததால் தபால் ஓட்டு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதாக சில ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், ஆட்சியர்களின் அறிக்கையை மையமாக வைத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மக்களவைத் தேர்தல் தொடர்பாக திமுக சார்பில் கொடுக்கப்பட்ட புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என திமுக. தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளாரே என்ற கேள்விக்கு, அது உண்மையல்ல. சில புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டது. சில புகார்கள் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் அவற்றுக்கு பதில் சொல்ல முடியாது என்றார்.

தேர்தலில் பணப்பட்டுவாடா செய்து எந்தக் கட்சி தங்களை மனவருத்தம் அடையச் செய்தது என்ற கேள்விக்கு, பணப்பட்டுவாடா உங்களுக்கும் (செய்தியாளர்கள்) மன வருத்தம் அளித்திருக்கும். தேர்தலில் பணப்பட்டுவாடா செய்வதைத் தடுக்க பல்வேறு கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டன. சில இடங்களில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இருப்பி னும் தேர்தல் நடைபெறுவதற்கு முன், கடைசி 2 நாள்களில் பணம் பட்டுவாடா செய்யப்பட்டது. இது எனக்கு மனவருத்தம் அளித்தது. வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது எந்தக் கட்சி என்பதைக் கூற முடியாது என்றார்.

தொடர்ந்து பயிற்சி முகாமில் பிரவீண்குமார் பங்கேற்றார். மதுரை, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, தேனி ஆகிய மாவட்ட ஆட்சியர்கள் இதில் கலந்துகொண்டனர்.

சேலம், நாமக்கல்: மே 10-ல் மறுவாக்குப்பதிவு

வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சேலம் மற்றும் நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதிகளில் தலா ஒரு வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவை 8-ம் தேதி நடத்த தேர்தல் ஆணையம் முடிவெடுத்திருந்தது. அதற்கான பணிகளும் முடிவடைந்த நிலையில் மறுவாக்குப்பதிவுக்கான தேதி திடீரென மாற்றப்பட்டுள்ளது.

அந்த இரு வாக்குச்சாவடிகளிலும் மே 10-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, வாக்காளர்களுக்கு போதிய அவகாசத்தை தேர்தல் ஆணையம் தரவில்லை என கூறி முதல்வர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x