Published : 17 May 2014 05:02 PM
Last Updated : 17 May 2014 05:02 PM

தமிழகத்தில் பாஜக அமோக வெற்றி பெறாதது ஏன்?- தமிழருவி மணியன் விளக்கம்

தமிழகத்தில் பாஜக கூட்டணி மிகப் பெரிய வெற்றியைப் பெற முடியாமல் போனதற்கு விஜயகாந்த், ராமதாஸ் இருவரின் அணுகுமுறையே அடிப்படைக் காரணம் என காந்திய மக்கள் கட்சித் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்: " மோடி ஆதரவலையும், காங்கிரசுக்கு எதிரான சூறாவளியும் சேர்ந்துதான் தனிப்பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைக்கும் வாய்ப்பை உருவாக்கியுள்ளது.

மதச்சார்பின்மையும் சாதிய அழிவுச்சக்திகளும் இத்தேர்தலில் பரிதாபகரமான முடிவைச் சந்தித்துள்ளன. மாயாவதி, முலாயம்சிங், லாலு பிரசாத் போன்றோரின் வீழ்ச்சியும், காங்கிரஸின் வரலாறு காணாத தோல்வியும் சாதி மதங்களைப் பயன்படுத்தி மக்களைப் பிளவுபடுத்தும் இழிந்த அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முதல் முயற்சியாக அமைந்திருப்பது வரவேற்கத்தக்கது.

தமிழகத்தில் இரண்டு முக்கிய நோக்கங்களுக்காக தேசிய ஜனநாயக் கூட்டணி அமைக்கப்பட்டது. காங்கிரசை வீழ்த்தவும், திராவிடக் கட்சிகளின் பிடியிலிருந்து தமிழகத்தை விடுவிக்கவும் உருவாக்கப்பட்ட இக்கூட்டணியின் நோக்கங்கள் ஓரளவு நிறைவேறியுள்ளன.

காங்கிரஸ் அனைத்துத் தொகுதிகளிலும் மோசமான தோல்வியைத் தழுவி மீண்டும் எழ முடியாமல் விழுந்து விட்டது. தி. மு. க. ஒரு தொகுதியில் கூட வெற்றியைப் பெற முடியாமல் மக்களவைப் பிரதிநிதித்துவத்தை முற்றாக இழந்துவிட்டது.

இச்சூழலைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி, சட்ட மன்றத் தேர்தலுக்கான வியூகம் வகுப்பதில் ஈடுபட வேண்டும்.

தமிழகத்தில் 75 லட்சம் வாக்காளர்கள் இக்கூட்டணிக்கு வாக்களித்ததன் மூலம் மாற்று அரசியல் மலர தங்கள் ஆதரவைத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளனர்.

விஜயகாந்தின் ஆரம்பகால அரசியல் ஊசலாட்டங்களும், மருத்துவர் ராமதாசின் பிடிவாதமான புறக்கணிப்பும், மாதக்கணக்கில் தொகுதி உடன்பாடு காண்பதில் கடைப்பிடித்த கேலிக்கூத்துகளும், கூட்டணித் தலைவர்கள் ஒருங்கிணைந்து ஒரு மேடையில் கூட வாக்காளர்களைச் சந்திக்காமல் தவிர்த்ததும் மோடியை மையமாகக் கொண்டு மக்களிடம் மலர்ந்த எதிர்பார்ப்பை முறியடித்துவிட்டன.

இந்தக் கூட்டணி மிகப் பெரிய வெற்றியைப் பெற முடியாமல் போனதற்கு விஜயகாந்த், ராமதாஸ் இருவரின் அணுகுமுறையே அடிப்படைக் காரணம்.

இதில் வாக்காளர்களைக் குறைசொல்வதற்கு ஒன்றுமில்லை. தவறுகளிலிருந்து பாடம் பெறுவதுதான்அரசியல் பண்புடைமை. ஆனால், ராமதாசும் விஜயகாந்தும் சட்டமன்றத் தேர்தலை நோக்கி சேர்ந்து களத்தில் நிற்பார்கள் என்பது சந்தேகத்திற்குரியது.

தேசிய ஜனநாயகக் கூட்டணி இந்த இருவர் மூலம் வலுப்பெறுவதற்கு வாய்ப்பில்லை. மாற்று அரசியல் மலர்வதற்குத் தன்னை முற்றாக அர்ப்பணித்துக் கொண்ட வைகோவின் தோல்வியை தமிழினத்தின் ஒட்டு மொத்தத் தோல்வியாக காந்திய மக்கள் கட்சி (கா.ம.க.) கருதுகிறது.

இரண்டு ஆண்டுகளுக்குள் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் ஜெயலலிதாவிற்கு இன்றுள்ள சாதகமான சூழல் இருப்பதற்கு வாய்ப்பில்லை. மாற்று அரசியல் வளர்த்தெடுக்கப்படுவதற்கு ஏற்ற வியூகத்தை இனி காலம் தான் நமக்கு காட்ட வேண்டும்". இவ்வாறு தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x