Published : 17 May 2014 10:53 AM
Last Updated : 17 May 2014 10:53 AM

நான் ஒரு திறந்த புத்தகமாகவே இருந்திருக்கிறேன்: மன்மோகன் சிங்

பொது வாழ்வில் நான் எப்போதும் ஒரு திறந்த புத்தகமாகவே இருந்திருக்கிறேன் என பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மன்மோகன் சிங் இன்று தனது பதவியை ராஜினாமா செய்கிறார். மக்களவை தேர்தலில் தனி மெஜாரிட்டி பெற்ற பாஜக ஆட்சி அமைக்க உள்ளது.

இந்நிலையில், பதவியை ராஜினாமா செய்யும் முன்னர் ஆற்றிய உரையில்: "பொது வாழ்வில் நான் எப்போதும் ஒரு திறந்த புத்தகமாகவே இருந்திருக்கிறேன். இந்திய தேசத்திற்காக சிறப்பாக பணியாற்றி இருக்கிறேன். கடந்து 10 ஆண்டுகளில் இந்தியா பெரும் வளர்ச்சி அடைந்துள்ளது. மேலும் வளர்ச்சிப் பாதையில் செல்லத் தேவையான அனைத்து சாத்தியக்கூறுகளைப் இந்தியா பெற்றுள்ளது. புதிதாக அமையவுள்ள அரசுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்". இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

மன்மோகன்சிங் பேச்சு முழு உரை:

என் சக குடிமக்களே,

இந்திய பிரதமராக கடைசி முறையாக உங்கள் மத்தியில் நான் உரையாற்றுகிறேன்.

10 ஆண்டுகளுக்கு முன்னர் எனக்கு இந்த பொறுப்பு வழங்கப்பட்டது.

அப்போது, கடும் சிரத்தையை மட்டுமே அயுதமாகக் கொண்டும், உண்மையை என்னை வழிநடத்தும் கலங்கரை விளக்காகக் கொண்டும் எப்போதும் சரியானதை மட்டுமே செய்ய வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் எனக்கு அளிக்கப்பட்ட பொறுப்பை ஏற்றுக் கொண்டேன்.

இன்று, எனது பதவியை ராஜினாமா செய்யவிருக்கும் நிலையில், ஆண்டவன் அளிக்கவிருக்கும் இறுதி நியாயத் தீர்ப்புக்கு முன்னர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவருக்கும் மக்கள் மன்றத்தில் ஒரு தீர்ப்பு வழங்கப்படும் அதற்கு அவர்கள் கட்டாயம் பணிய வேண்டும் என்பதை நன்கு உணர்கிறேன்.

என் சக மக்களே, நீங்கள் அளித்த தீர்ப்பை மதிக்க வேண்டும். நடந்து முடிந்த தேர்தல், இந்திய ஜனநாயகத்திற்கு மேலும் வலு சேர்த்திருக்கிறது என்றே கூற வேண்டும்.

நான் இதற்கு முன்னர் பலமுறை இதை கூறியிருப்பது போல், பொது வாழ்வில் நான் எப்போதும் திறந்த புத்தகமாகவே இருந்திருக்கிறேன். என் தேசத்திற்கு தொண்டாற்றுவதில் சிறப்பாகவே செயல்பட்டிருக்கிறேன்.

கடந்த 10 ஆண்டுகளில், இந்திய தேசம் பெரும் வெற்றிகளை கண்டிருக்கிறது. பெரும் சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறது. அதற்காக நாம் அனைவரும் பெருமிதம் கொள்ள வேண்டும்.

இப்போது இந்திய தேசம் 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட எல்லா வகையில் பலம் பொருந்திய நாடாக உள்ளது. இந்த வெற்றியை உங்கள் ஒவ்வொருவருக்கும் உரித்தாக்குகிறேன். இன்னும் அளப்பரிய வளர்ச்சிப் பாதையில் செல்லுவதற்கு தேவையான அனைத்து சாத்தியக்கூறுகளைப் இந்தியா பெற்றுள்ளது.

இந்த பதவியை ராஜினாமா செய்யவுள்ள நான், உங்கள் அன்பையும், பிரியத்தையும் என் நினைவு அலைகளில் எப்போதும் நிலைநிறுத்தியிருப்பேன்.

இந்த தேசத்தில் எல்லாவற்றையும் நான் நேசிக்கிறேன். இந்தியப் பிரிவினையின் வேதனையை அனுபவித்த துரதிர்ஷ்ட குழந்தையான எனக்கு நாட்டின் மிகப்பெரிய பதவியை வகிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதை நினைத்து பெருமிதம் கொள்கிறேன். எனக்கு அப்படி ஒரு பதவியை வழங்கி அலங்கரித்த மக்களுக்கு நன்றிக்கடன் செலுத்த முடியாத நிலையில் உள்ளேன்.

இந்தியாவின் எதிர்காலம் குறித்து நான் பூரண நம்பிக்கை கொண்டிருக்கிறேன். இந்தியா பொருளாதார வல்லரசாகும் நேரம் நெருங்கி விட்டது.

பாரம்பரியத்தை, நவீனத்துவத்துடன் ஒருங்கிணைத்தும், வேற்றுமையில் ஒற்றுமையை நிலைநிறுத்தியும் நம் நாடு உலக நாடுகளுக்கு வழிகாட்டியாக இருக்கும் என்பதில் ஐயம் இல்லை.

புதிதாக அமையவுள்ள அரசுக்கு என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய தேசத்திற்கு இன்னும் பெரிய வெற்றிகள் பல கிடைக்க வேண்டும் என பிரார்த்திக்கிறேன்.

நன்றி. ஜெய் ஹிந்த்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x