Published : 02 May 2014 05:56 PM
Last Updated : 02 May 2014 05:56 PM

இந்தியாவில் அமெரிக்க பாணியில் விவாதம்: அத்வானி விருப்பம்

அமெரிக்க அரசியல் பாணியில் இந்தியப் பிரதமர் வேட்பாளர்கள் இடையே பொதுத் தளத்தில் விவாதம் நடத்தப்படுவதற்கு, பாஜக மூத்த தலைவர் அத்வானி விருப்பம் தெரிவித்துள்ளார்.

உத்தரகாண்டின் பிதோரகரில் அல்மோரா மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் அஜர் தாம்தாவை ஆதரித்து இன்று பிரச்சாரம் மேற்கொண்டபோது அத்வானி இதனை கூறியுள்ளார்.

"பல்வேறு அரசியல் கட்சிகள் பிரச்சாரப் பேரணிகள் நடத்துவதற்கு பதிலாக, தேர்தலில் களமிறங்கும் பிரதமர் பதவிக்கான போட்டியில் இருப்பவர்களிடையே பொதுத் தளத்தில் விவாதம் நடத்தலாம்.

இதற்கான ஏற்பாட்டை தேர்தல் ஆணையம் மேற்கொள்ள வேண்டும். இந்திய ஜனநாயகத்தை மேலும் வலுப்படுத்துவதற்கு, இதுபோன்ற நடவடிக்கைகள் அவசியமாகிறது" என்றார் அத்வானி.

அமெரிக்க தேர்தலில், அதிபர் தேர்தலில் போட்டியிடுபவர்கள் நேருக்கு நேர் விவாதத்தில் ஈடுபடுவது அந்நாட்டு அரசியல் நடைமுறையில் உள்ளது. அதன் அடிப்படையிலேயே அவ்வாறான விவாதம் இந்தியாவிலும் நடத்தப்பட வேண்டும் என்று அத்வானி குறிப்பிட்டுள்ளார்.

அத்வானி மேலும் பேசும்போது, நாட்டில் நதிநீர்ப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நதிகளை இணைக்கும் யோசனையை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பின்பற்றவில்லை என்று குற்றம்சாட்டினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x