Published : 14 May 2014 09:37 AM
Last Updated : 14 May 2014 09:37 AM

வாக்குக் கணிப்பு முடிவுகள்: காங்கிரஸ் நிராகரிப்பு

தேர்தலுக்குப் பிந்தைய வாக்குக் கணிப்பு முடிவுகளை காங்கிரஸ் கட்சி நிராகரித்துள்ளது.

ஆய்வு நிறுவனங்களுடன் இணைந்து தொலைக்காட்சி சேனல்கள் நடத்திய வாக்குக் கணிப்புகள் அனைத்திலும் காங்கிரஸ் படுதோல்வி அடையும், பாஜக கூட்டணிக்கு 249 முதல் 290 இடங்கள் வரை கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் திக்விஜய் சிங் செய்தியாளர்களிடம் கூறியதா வது: “80 கோடி வாக்காளர்கள் உள்ள நாட்டில், சில லட்சம் பேரின் கருத்துகளைக் கேட்டு வெளியிடப்படும் முடிவுகள் எப்படி சரியாக இருக்கும்? வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள மே 16-ம் தேதி வரை காத்திருப்போம்” என்றார்.

அக்கட்சியின் பொதுச்செய லாளர் ஷகீல் அகமது கூறு கையில், “2004, 2009-ம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தலின் போது வெளியான கருத்துக் கணிப்புகள் தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, இப்போதைய கருத்துக் கணிப்புகளை நம்ப முடியாது” என்றார்.

முன்னதாக தொலைக்காட்சி சேனல்களில் நடைபெற்ற தேர்தலுக்கு பிந்தைய வாக்குக் கணிப்புகள் தொடர்பான விவாத நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரமுகர்கள் பங்கேற்க மாட்டார்கள் என்று ஷகீல் அகமது கடந்த திங்கள்கிழமை அறிவித்திருந்தார்.

நிதிஷ் கருத்து

தேர்தலுக்கு பிந்தைய வாக்குக் கணிப்புகளில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி, பிஹாரில் 5 இடங்களில் மட்டுமே வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதை பிஹார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தள மூத்த தலைவருமான நிதிஷ் குமார் மறுத்துள்ளார். உண்மையான முடிவுகளை அறிய 16-ம் தேதி வரை காத்திருக்குமாறு அவர் கூறினார்.

சமாஜ்வாதி கட்சி

சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் நரேஷ் அகர்வால் கூறுகையில், “வாக்குக்கணிப்பு முடிவுகள் எல்லாம் தில்லுமுல்லு செய்து தயாரிக்கப்பட்டவை. நரேந்திர மோடியால் ஒருபோதும் பிரதமராக முடியாது” என்றார்.

சிறந்த பொழுதுபோக்கு

காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா (தேசிய மாநாட்டுக் கட்சி), ட்விட்டர் இணையதளத்தில் கூறியுள்ளதாவது: “என்னைப் பொறுத்தவரை மே 16-ம் தேதி வெளியாவது மட்டும்தான் உண் மையான முடிவுகள். இப்போது வெளியாகி யுள்ளவை அனைத்தும் சிறந்த பொழுதுபோக்கு என்றுதான் கருத வேண்டும்.

பல்வேறு தொலைக்காட்சிகள் வெளியிட்டுள்ள இந்த வாக்குக் கணிப்புகளின் நம்பகத்தன்மை தொடர்பாக சந்தேகம் உள்ளது

ராஜஸ்தான் தொடர்பாக ஒரு தொலைக்காட்சி சேனல் வெளியிட்டுள்ள வாக்குக் கணிப்பில் காங்கிரஸ் கட்சிக்கு 2 இடங்கள் கிடைக்கும் எனக் கூறியுள்ளது. மற்றொரு தொலைக் காட்சி சேனல் 14 இடங்கள் கிடைக்கும் என கூறியுள்ளது. இந்த இரு சேனல்களும் ஒரே தேர்தலுக்கான வாக்குக் கணிப்புகளைத்தான் எடுத் துள்ளதா?” என்றார்.

300 தொகுதிகளுக்கு மேல் வெற்றி: பாஜக

வாக்குக்கணிப்புகளில் கூறப்பட்டிருப்பதைவிட அதிக இடங்களில் வெற்றி பெறுவோம் என்று பாஜக கூறியுள்ளது.

அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், “270 முதல் 275 இடங்களில் பாஜக கூட்டணி வெற்றி பெறும் எனக் கூறப்பட்டுள்ளது, அதையும் கடந்து 300-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற வாய்ப்புள்ளது.

தெலுங்கு தேசம் கட்சியுடன் அமைத்த கூட்டணி காரணமாக, சீமாந்திராவில் மிகப்பெரிய வெற்றியை தேசிய ஜனநாயக கூட்டணி பெறவுள்ளது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x