Published : 28 Mar 2014 07:15 PM
Last Updated : 28 Mar 2014 07:15 PM

வளர்ச்சியின் வாசலை எட்டிப் பார்க்காத சிவகங்கை!

# பின்தங்கிய மாவட்டங்களான சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களை உள்ளடக்கிய இந்தத் தொகுதியின் முக்கியக் குறையே, அங்கே போதிய தொழில்வளமும் வேலைவாய்ப்பும் இல்லாததே. இந்தத் தொகுதியில் ஏழு முறை எம்.பி-யாகி, அதில் 23 ஆண்டுகள் மத்திய அமைச்சராக இருந்த ப.சிதம்பரம், இந்தக் குறையைக்கூடப் போக்கவில்லை என்று வேதனைப்படுகிறார்கள் தொகுதி மக்கள். ஒவ்வொரு ஒன்றியத்துக்கும் ஒரு தொழிலதிபரை அழைத்து வந்து, புதிய தொழில்களைத் தொடங்கச் செய்வேன் என்று அவர் கொடுத்த தேர்தல் வாக்குறுதியில் 10 சதவீதம்கூட நிறைவேறவில்லை என்கிறார்கள் தொகுதிவாசிகள்.

# சிவகங்கைத் தொகுதியில் தொழிற்சாலைகளை விரல் விட்டு எண்ணிவிடலாம். வேலைவாய்ப்பு இல்லாத காரணத்தால், பிழைப்புத் தேடி வெளிநாடு செல்பவர்கள் இங்கு அதிகம். இளையான்குடி வட்டாரத்தில் அப்படி வெளிநாடு சென்றவர்களின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் போனதால்தான், அது சட்டமன்றத் தொகுதி என்கிற அந்தஸ்தை இழந்து, மானாமதுரையுடன் இணைக்கப்பட்டதாக ஒரு பேச்சு உண்டு.

# வெளிநாட்டில் வேலை பார்ப்பவர்கள் அதிகம் இருப்பதால், காரைக்குடியில் உள்நாட்டு விமான நிலையம் அமைக்க வேண்டும். மதுரை விமான நிலை யத்தை சர்வதேச விமான நிலையமாக்க வேண்டும்.

# வைகைத் தண்ணீரை நம்பி விவசாயம் செய்பவர்களின் எண்ணிக்கை இந்த மாவட்டத்தில் மிக அதிகம். ஆனால், முல்லைப் பெரியாறு பிரச்சினை காரணமாக, வைகை அணை முழுமையாக வறண்டுவிட்டதால், இந்தப் பகுதியும் தொடர்ந்து வறட்சியைச் சந்தித்துவருகிறது. இந்தப் பிரச்சினைக்கு ஒரு நல்ல தீர்வுகாண வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கை.

# சிவகங்கை தாலுகாவில் இருக்கும் சித்தலூரில் குடிநீருக்கு மக்கள் அல்லாடுகின்றனர். சரியான குடிநீர் வசதி இல்லாததால் மக்கள் பல கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று உப்பாறு படுகையில் பள்ளம் தோண்டி ஊற்றுத் தண்ணீரை சுமந்து வருகின்றனர். அதைத்தான் மக்கள் குடிநீராகப் பயன்படுத்த வேண்டிய அவல நிலை.

# கேரள அரசால் வஞ்சிக்கப்படுவது மட்டுமின்றி, தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்ட நிர்வாகங்களும் சிவகங்கை மாவட்டத்துக்குரிய தண்ணீரை பயன்படுத்தி விடுவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.

# திருப்பத்தூர் மக்களின் பிரதான கோரிக்கை அந்த ஊருக்கு ரயில் சேவை வேண்டும் என்பதுதான். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இருந்தே இந்தக் கோரிக்கை பரிசீலனையில் இருந்துவருகிறது. கடந்த தேர்தலின்போது, இந்தத் திட்டத்தை நிறைவேற்றித்தருவதாக ப.சிதம்பரம் வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், இதுவரையில் அது நிறைவேறாதது தொகுதி மக்களுக்கு ரொம்பவே வருத்தம்.

# இன்னமும் கிராமம் போலவே இருக்கும் சிவகங்கைக்கு அடிப்படை வசதிகள் செய்துதர வேண்டும். நகரைச் சுற்றி ரிங் ரோடு அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறார்கள் சிவகங்கைவாசிகள்.

# சிறுநகரங்களில் தரமான அரசுப் பள்ளிகள், மத்திய அரசுப் பள்ளிகள் இல்லாததால், தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளை கட்டுக்கடங்காமல் போய்க்கொண்டிருக்கிறது.

# இந்தியாவிலேயே மிக அதிகமான வங்கிக் கிளைகளையும், ஏ.டி.எம். மையங்களையும் கொண்ட தொகுதி அநேகமாக இதுவாகத்தான் இருக்கும். ஆனால், கிளை தொடங்குவதில் காட்டிய ஆர்வத்தை, ஏழை எளிய விவசாயிகளின் வளர்ச்சிக்குக் காட்டவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இன்னமும் இந்தத் தொகுதியில் கந்துவட்டிக் கொடுமை ஒழியாததை அதற்கு உதாரணமாகச் சொல்கிறார்கள் விவசாயிகள்.

# சிவகங்கை, மானாமதுரை பகுதியில் வைகை ஆற்றில் மணல் கொள்ளை பிரதான பிரச்சினை. திருபுவனம் தொடங்கி பார்த்திபனூர் வரையில் வைகை ஆற்றைச் சீரமைத்து, மணல் கொள்ளையைத் தடுக்க வேண்டும். மணல் தாறுமாறாக அள்ளியதால் ஆற்றங்கரையோர பாசனக் கிணறுகள் வறண்டுகிடக்கின்றன. விவசாயம் பொய்த்துப்போனதால், ஆயிரக் கணக்கானோர் கடந்த இரு ஆண்டுகளில் மதுரை, கோவை, திருப்பூர், சென்னை ஆகிய நகரங்களுக்கு இடம்பெயர்ந்துவிட்டார்கள்.

# மானாமதுரை பகுதியில் உள்ள செங்கல் சூளைகளில் இன்னமும் தொழிலாளர் நலச் சட்டம் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை. முன்பணம் பெற்றுக்கொண்டு, நூற்றுக் கணக்கான குடும்பங்கள் கொத்தடிமைகளாக உள்ளன.

# திருமயம் பகுதியில் பேருந்து வசதி இல்லாத கிராமங்கள் இருக்கின்றன. வேலைவாய்ப்பின்மையும் வறுமையும் இங்கு அதிகம் என்கின்றன தொண்டு நிறுவனங்கள். சிவகங்கை, திருப்பத்தூர், மானாமதுரை பேருந்து நிலையங்களில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை. திருப்புவனத்தில் பேருந்து நிலையமே இல்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x