Published : 28 Apr 2014 09:21 AM
Last Updated : 28 Apr 2014 09:21 AM

நாட்டை ஆள பரந்த மனம்தான் வேண்டும்: மோடியின் ‘56 அங்குல மார்பு’ பேச்சுக்கு பிரியங்கா காந்தி பதில்

நாட்டை ஆள்வதற்கு 56 இன்ச் மார்பு இருந்தால் போதாது. பரந்த மனமும், தார்மீக பலமும் வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் நட்சத்திர பேச்சாளர் பிரியங்கா காந்தி கூறினார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி போட்டியிடும் ரேபரேலி தொகுதியில் பிரியங்கா நேற்று பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், “நாட்டை ஆள்வதற்கு 56 இன்ச் மார்பு இருந்தால் போதாது. பரந்த மனம் வேண்டும். கொடூர அதிகாரப் போக்கு தேவையில்லை. ஆனால் தார்மீக பலம் வேண்டும். நாட்டின் கலாச்சாரத்தை காப்பற்றுவதற்கு உயிரை கூட தியாகம் செய்ய முன்வரவேண்டும்” என்றார்.

அண்மையில் கோரக்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பேசுகையில், “நேதாஜி (முலாயம் சிங் யாதவ்), உ.பி.யை குஜராத் போல் மாற்றுவேன் என்று கூறியதற்கு என்ன அர்த்தம் தெரியுமா? 24 மணி நேர மின்சாரம், ஆண்டில் 365 நாளும் எல்லா கிராமங்களுக்கும் தடையற்ற மின் விநியோகம் என்பதே இதன் அர்த்தம். இதை உங்களால் செய்ய முடியாது. உங்களுக்கு அந்த திறன் கிடையாது. அதற்கு 56 இன்ச் மார்பு வேண்டும்” என்றார்.

இந்நிலையில் நரேந்திர மோடியை விமர்சிக்கும் வகையில் பிரியங்கா இவ்வாறு பேசினார். பிரியங்கா மேலும் பேசுகையில், “இது மகாத்மா காந்தியின் நாடு. இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கி யர்கள், கிறிஸ்தவர்கள், புத்த மதத்தினர், ஜைனர்கள் என அனைத்து மதத்தினரும் இந்நாட் டின் சுதந்திரத்துக்காக தங்கள் உயிரை தியாகம் செய்துள்ளனர். தலித்துகளும் பழங்குடியினரும் இந்நாட்டுக்காக தங்கள் உயிரை இழந்துள்ளனர். எனது ஒவ்வொரு துளி ரத்தத்திலும் இந்த மண் கலந்துள்ளது.

இது உங்கள் நாடு. நீங்களே இதன் பாதுகாவலர்கள். இந்த நாட்டை காப்பது உங்கள் கடமை. நீங்கள் சோனியாஜிக்காகவோ, இப்பகுதியின் முன்னேற்றத்துக் காவே வாக்களிக்க வேண்டாம். ஆனால் நாட்டை வலுப்படுத்தவும், நாட்டின் ஒருமைப்பாட்டை காக்கவும் வாக்களிக்க வேண்டும். உங்களுக்கு எந்த வகையிலான நாடு வேண்டும் என்று நீங்கள் தீர்மானிக்க வேண்டும்.

இந்தத் தேர்தல் குறிப்பிட்ட பகுதியுடன் மட்டும் தொடர்புடைய தல்ல. மத்தியில் அடுத்த அரசை தீர்மானிக்கப்போகிறது. எனவே பிராந்திய உணர்வுகளை கடந்து நீங்கள் வாக்களிக்க வேண்டும். உங்கள் பகுதி, குழந்தைகளின் எதிர்காலம் மட்டும் பார்க்காமல் நாட்டின் எதிர்காலம் கருதியும் வாக்களிக்க வேண்டும்.

இத்தொகுதி எம்.பி. உங்களுக் காக சிறப்பாக பணியாற்றுவார் என்பதை நான் அறிவேன். அவருக்கு நீங்கள் முழு ஆதரவு அளிப்பீர்கள், அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்வீர்கள் என்பதையும் நான் அறிவேன்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x