Published : 15 Apr 2014 10:23 AM
Last Updated : 15 Apr 2014 10:23 AM

அணை கட்டும் இடங்களை மனைகளாக மாற்றியதே திராவிடக் கட்சிகளின் சாதனை: மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் பேச்சு

தமிழகத்தில் அணை கட்டும் இடங்களை எல்லாம் மனைக்கட்டுகளாக மாற்றியதுதான் திராவிடக் கட்சிகளின் சாதனை என்றார் மத்திய கப்பல் துறை அமைச்சர் ஜி.கே.வாசன்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டங்கச்சேரி திடலில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற பிரச்சாரத்தில் சிவகங்கை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து அவர் மேலும் பேசியது:

“சிவகங்கை தொகுதி மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வெற்றி பெற்ற பிறகுதான் அனைத்து துறைகளிலும் வளர்ச்சி அடைந்துள்ளது. அனைத்து துறை திட்டங்களும் 100 சதவீதம் மக்களைச் சென்றடைந்துள்ளதால் அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரமும் உயர்ந்துள்ளது. சிவகங்கை தொகுதியை பிற மாநிலங்களோடு ஒப்பிட்டால் வளர்ச்சி தெரியாது. ஆனால், பிற தொகுதிகளோடு ஒப்பிட்டுப் பார்த்தால் இத்தொகுதி எந்த அளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ளது என்பதை உணரமுடியும்.

தமிழ்நாட்டில் அனைவருக்கும் கல்வி கிடைக்கவும், அணைக்கட்டுகளை அமைத்து தண்ணீர் பிரச்சினைகளை தீர்க்கவும், தடையில்லா மின்சாரம் கிடைக்கவும் முன்னாள் முதல்வர் காமராஜர் அடித்தளம் அமைத்தார்.

ஆனால், அதன்பிறகு ஆட்சிக்கு வந்த திராவிடக் கட்சிகள் அணைக் கட்டுகளுக்கான நிலங்களை மனைக்கட்டுகளாக்கியதும், டாஸ் மாக் கடைகளை திறந்துவிட்டு மக்களை மதுபோதைக்கு அடிமையாக்கின. இவைதான் திராவிடக் கட்சிகளின் சாதனை.

ஆகவே, நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் தொகுதியின் வளர்ச்சிக்கான வாக்கு என்பதை உணர்ந்து காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்” என்றார் வாசன்.

பிரச்சாரத்தில் பங்கேற்காத கார்த்தி சிதம்பரம்

இங்கு நடைபெற்ற பிரச்சாரத்தில் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் பங்கேற்கவில்லை. முன்னதாக ராமநாதபுரம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சு.திருநாவுக்கரசரை ஆதரித்து அவருடன், அறந்தாங்கி சட்டப் பேரவைத் தொகுதியில் பல்வேறு இடங்களில் வேன் மூலம் பிரச்சாரம் மேற்கொண்டார் வாசன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x