Published : 08 Apr 2014 12:00 AM
Last Updated : 08 Apr 2014 12:00 AM

நாளை இறுதி வேட்பாளர் பட்டியல்: சிதம்பரம் பாமக, நீலகிரி பாஜக வேட்பாளர்கள் மனு தள்ளுபடி

தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் திங்கள்கிழமை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. சிதம்பரத்தில் பாமக வேட்பாளர், நீலகிரியில் பாஜக வேட்பாளரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இறுதி வேட்பாளர் பட்டியல் நாளை வெளியிடப்படுகிறது.

நாடாளுமன்ற மக்களவைக்கு 9 கட்டங்களாக தேர்தல் நடத்தப் படுகிறது. தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதி களுக்கு வரும் 24-ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல், மார்ச் 29-ம் தேதி தொடங்கி கடந்த 5-ம் தேதி வரை நடந்தது.

முதல் நாளில் மந்தமாக இருந்த மனு தாக்கல், ஏப்ரல் 1-ம் தேதிக்குப் பிறகு சூடுபிடித்தது. கடைசி நாளான 5-ம் தேதி மட்டும் 560 மனுக்கள் பெறப்பட்டன. தமிழகம் முழுவதும் அரசியல் கட்சி வேட்பாளர்கள், சுயேச்சைகள் என மொத்தம் 118 பெண்கள் உள்பட 1,318 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.

மனுக்கள் பரிசீலனை

இந்நிலையில், வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை, திங்கள்கிழமை நடந்தது. காலை 11 மணிக்கு தொடங்கிய பரிசீலனை, பிற்பகல் 3 மணி வரை நடந்தது. மத்திய தேர்தல் பொதுப் பார்வையாளர்கள் முன்னிலையில் வேட்பு மனுக்களை அந்தந்த தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் பரிசீலனை செய்தனர். நாமக்கல் தொகுதியில் மட்டும் பொதுப் பார்வையாளர் வராததால் செலவுக் கணக்கு பார்வையாளர் முன்னிலையில் வேட்புமனு பரிசீலனை நடந்தது. பல இடங்களில் சுயேச்சைகள் சிலரது மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மேலும் அரசியல் கட்சிகளின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில், அவர்களது மாற்று வேட்பாளர்களின் மனுக்கள் தானாகவே தள்ளுபடியானது.

காங்கிரஸ் கட்சியில் சீட் மறுக்கப்பட்டதால் பாமகவில் சேர்ந்து அக்கட்சியின் சிதம்பரம் தொகுதி வேட்பாளராக அறிவிக் கப்பட்ட மணிரத்னத்தின் மனுவை தேர்தல் நடத்தும் அதிகாரியும் மாவட்ட ஆட்சியருமான சரவணவேல்ராஜ் தள்ளுபடி செய்தார். பாமக கட்சி அங்கீகாரத்தை இழந்ததால், அது தற்போது பதிவு செய்யப்பட்ட கட்சியாகவே இருக்கிறது.

பதிவு செய்யப்பட்ட கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பா ளரின் மனுவை 10 பேர் முன் மொழிய வேண்டும். ஆனால், 4 பேர் மட்டுமே முன் மொழிந் திருந்ததால் மணிரத்னத்தின் மனு நிராகரிக்கப்படுவதாக தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.

இதேபோல், நீலகிரி தொகுதி பாஜக வேட்பாளர் குருமூர்த்தியின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. கட்சியின் அங்கீகார படிவத்தை தாமதமாக தாக்கல் செய்ததாகக் கூறி, அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் பாஜக மாற்று வேட்பாளரின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டதால், அங்கு தேசிய ஜனநாயக கூட்டணி போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மனுக்களை வாபஸ் பெற 9-ம் தேதி (நாளை) கடைசி நாளாகும். அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். மேலும், சுயேச்சை வேட்பாளர்களுக்கான சின்னங்களும் உடனடியாக ஒதுக்கீடு செய்து அறிவிக்கப்படும்.

ஆலந்தூரில் 18 மனு ஏற்பு

ஆலந்தூர் சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக 3 பெண்கள் உள்பட 19 பேர் மனு செய்திருந்தனர். இங்கும் திங்கள்கிழமை மனு பரிசீலனை நடந்தது.

தேமுதிக வேட்பாளர் ஏ.எம்.காமராஜின் மனுவுக்கு ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டதால், அதற்கான ஆவணங்களைக் கேட்டு வேட்புமனு பரிசீலனையை செவ்வாய்க்கிழமைக்கு தேர்தல் அதிகாரி ராஜாராம் ஒத்திவைத்தார். மீதமுள்ள 18 மனுக்கள் ஏற்கப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x