Published : 17 Apr 2014 04:39 PM
Last Updated : 17 Apr 2014 04:39 PM

குஜராத்தைவிட பல துறைகளில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது: கிருஷ்ணகிரி பிரச்சாரக் கூட்டத்தில் ஜெயலலிதா பேச்சு

குஜராத் மாநிலத்தைவிட தமிழகம் பல்வேறு துறைகளில் முதலிடத்தில் உள்ளது என கிருஷ்ணகிரி தொகுதியில் நடந்த பிரச்சார கூட்டத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக தமிழக முதல்வர் ஜெயலலிதா, கிருஷ்ணகிரி - குப்பம் சாலையில் பூசாரிப்பட்டி கூட்டுரோடு அருகே நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:

கடந்த 34 மாத மத்திய காங்கிரஸ் ஆட்சியில் மாற்றாந்தாய் மனப்பான்மை போக்கு, திமுக சதி திட்டத்தையும் மீறி தமிழக மக்களுக்கு வளர்ச்சி திட்டங்கள், தொலைநோக்கு திட்டங்களை அளித்து வருகிறேன்.

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் கடந்த 1986-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் காலத்தில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, அதனைத் தொடர்ந்து வந்த அதிமுக ஆட்சி காலத்தில் தொடர்ந்து ஜப்பான் நாட்டின் நிதியுதவி பெறுவதற்காக மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால் திமுக ஆட்சி காலத்திலும் இந்த திட்டம் தொடங்க என் தலைமையில் பல போராட்டங்கள் நடத்தினோம். எனது தொடர் வற்புறுத்தல் காரணமாக இத்திட்டத்தை திமுக அரசு தொடங்கியது.

2011-ம் ஆண்டில் இத்திட்டம் 50 விழுக்காடு பணி முடித்திருக்க வேண்டும். ஆனால் அன்றைய திமுக அரசு 18 சதவீத பணிகள் மட்டுமே முடித்திருந்தது. கடந்த ஆண்டு திட்டம் முழுமையாக நிறைவேற்றப்பட்டு கிருஷ்ணகிரி - தருமபுரி மாவட்ட மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீரை வழங்கி வருகிறோம். ஆனால் ஸ்டாலின் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் குறித்து பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்.

அதிமுக அரசுக்கு மக்கள் மீது அக்கறை இல்லை என நரேந்திர மோடி கூறியுள்ளார். உண்மையிலயே மக்கள் மீது அக்கறை கொண்டது அதிமுக அரசுதான். இந்தியாவிலயே குஜராத் மாநிலம்தான் முதலிடம் என அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் வறுமை ஒழிப்பு, குழந்தை இறப்பு விகிதம், உற்பத்தி துறை, பொது விநியோக திட்டம், உள்நாட்டு உற்பத்தி, உணவு தானிய உற்பத்தி, அந்நிய முதலீடு ஆகியவற்றில் குஜராத் மாநிலத்தைவிட தமிழகம் முதலிடம் வகிக்கிறது. குஜராத் மாநிலம் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்வதில் மட்டுமே முதலிடம் வகிக்கிறது. நான் இங்கு கூறுவது உண்மை, இது பலருக்கு அதிர்ச்சியைத் தரலாம்.

நிலக்கரி சுரங்க ஊழல், காமன்வெல்த் ஊழல் என பல ஊழல்கள் செய்த காங்கிரஸ் கட்சி 40 தொகுதிகளிலும் டெபாசிட் இழக்க வேண்டும் என்றார்.

பாஜக-வுக்கு சவால்

நதிகள் இணைப்பு திட்டம் குறித்து வாஜ்பாய் அரசில் பேசப்பட்டதே தவிர தொடங்கப்படவில்லை. தமிழகத்தில் நதிகள் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த பாஜக அரசு அமைந்தால் ரூ.6,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யத் தயாரா என பாஜக-வினர் பதில் கூற வேண்டும். காவிரி நதிநீரை தமிழகத்துக்கு எந்தவித நிபந்தனை இல்லாமல் பாஜக பெற்றுத்தர முடியுமா என்று சவால் விடுத்தார் ஜெயலலிதா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x