Published : 18 Apr 2014 01:17 PM
Last Updated : 18 Apr 2014 01:17 PM

நடிகர்களை மோடி சந்திப்பது தேர்தல் நாடகம்: நல்லகண்ணு

தமிழகத்திற்கு வந்த நரேந்திர மோடி, நடிகர்களைச் சந்தித்து வருவதும், வேட்டி சட்டை அணிவதும் தேர்தல் கால நாடகம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு கூறினார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கடலூரில் போட்டியிடும் வேட்பாளர் கு.பாலசுப்ரமணியனை ஆதரவாக வாக்கு சேகரிக்க வியாழக்கிழமை கடலூர் வந்த மூத்தத் தலைவர் ஆர்.நல்லகண்ணு, செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

"ஊழலற்ற ஆட்சி அமைய வேண்டும். மதசார்பற்றக் கொள்கை வெற்றி பெற வேண்டும். ஊழலும் உலகமயமும் இணைந்ததால் இந்தியப் பொருளாதாரமே சீர் குலைந்து விட்டது. இதற்கு காங்கிரஸ் கட்சிதான் முழு பொறுப்பு. அதே பொருளாதாரக் கொள்கை யைத்தான் பாஜகவும் பின்பற்றுகிறது. கூடுதலாக ஆர்எஸ்எஸ் கொள்கைகளையும் நிறைவேற்றத் துடிக்கிறது. இவற்றை அனுமதிக்கக் கூடாது.

தமிழகத்தில் கூட்டணி அமையும் வரை தேர்தல் அறிக்கையை பாஜக வெளியிடவில்லை. கூட்டணி அமையும் முன்பே தேர்தல் அறிக்கை வெளியிட்டிருந்தால் கூட்டணி அமையாமல் போய்விடுமோ என்ற அச்சத்தால்தான் காலம் தாழ்த்தி வந்தனர்.

பாஜக அறிக்கையில் உள்ள பொதுசிவில் சட்டம், ராமர் கோயில், சேது சமுத்திர திட்டம், சிறுபான்மை, பழங்குடியின, தலித் மக்களுக்கு உரிமைகள் மறுப்பு போன்றவை தமிழக கூட்டணி கட்சிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மோடி ஒருவேளை பிரதமராக வந்தால் என்ன செய்வார் என்பதற்கு அந்த அறிக்கையே அடையாளமாக உள்ளது. இந்த அறிக்கையின் மீது பாமக, மதிமுக கட்சிகள் கருத்து சொல்ல முடியாத நிலையில் சிக்கியுள்ளன.

இந்தியாவில் 60 வருடங்களில் தீர்க்க முடியாத பிரச்சினையை, 60 மாதத்தில் தீர்ப்பேன் என்று மோடி திருச்சி கூட்டத்தில் பேசி உள்ளார், குஜராத்தில் 14 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள மோடி என்ன செய்துள்ளார்? சிறுபான்மை மக்களுக்கு எதிரான கொடுமை, தலித், பழங்குடி மக்களுக்கு உரிமை கள் மறுப்பு ஆகியவற்றுடன் மனிதவள மேம்பாட்டு அறிக்கையில் 12 வது இடத்தில்தான் குஜராத் உள்ளது. 90% தலித் மக்களின் வீடுகளுக்கு மின்சாரம் கிடைக்கவில்லை. இப்படி குஜராத்தில் எதுவுமே செய்யாதவர் இந்தியாவை முன்னேற்றுவேன் என்று எப்படி சொல்கிறார்?

தேர்தல் நடக்கும் நேரத்தில், தமிழகத்திற்கு வேட்டி சட்டையுடன் வருவதும் நடிகர்களை வரிசையாகச் சந்திப்பதும் ஏதோ தமிழகத்தில் நாடகத்தை அரங்கேற்றுவது போல் இருக்கிறது. தேர்தலுக்காகவே நடைபெறும் இப்படிபட்ட சந்திப்புகள் மக்களை திசை திருப்பும் வேலை. இந்தியாவின் முதல் தேர்தலில் இருந்து பார்த்து வருகிறேன். பிரதமர் வேட்பாளருக்கு இவ்வளவு அதிகமான செலவு செய்தது கிடையாது. கட்சியை பின்னுக்குத் தள்ளிவிட்டு மோடியை முன்னிறுத்துகின்றனர்.

பல கோடி ரூபாய் செலவு செய்கின்றனர். இதற்குப் பின்னால் கார்ப்பரேட் கம்பெனிகளின் முதலாளிகள் உள்ளனர். இது ஆபத்தான அரசியல். தமிழகத்தில் இடதுசாரிகட்சிகள் 18 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. நாட்டு நலனையும், மக்கள் நலனையும் முன்னிறுத்தி எத்தகைய ஆட்சி அமையவேண்டும் என்று மக்களிடம் சொல்லி வாக்கு கேட்கிறோம்" என்றார் நல்லகண்ணு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x