Published : 08 Apr 2014 09:57 PM
Last Updated : 08 Apr 2014 09:57 PM

அதிகாரிகள் பணியிடமாற்றம்: தேர்தல் ஆணைய உத்தரவை ஏற்றார் மம்தா

மேற்கு வங்கத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை, அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி ஏற்றுக்கொண்டார்.

இது தொடர்பாக அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, "தேர்தல் ஆணையம் உத்தரவின்படி, 5 அதிகாரிகளையும் நியமிப்பேன். எனக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை. என்னைப் பொருத்தவரை, அனைத்து அதிகாரிகளுடனும் நன்னடத்தையுடன்தான் நான் செயல்பட்டு வருகிறேன்" என்றார் மம்தா பானர்ஜி.

முன்னதாக, மேற்கு வங்கத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள ஆட்சியர், 5 காவல் துறை அதிகாரிகள் மீது புகார் கூறப்பட்டதைத் தொடர்ந்து, அவர்களை பணியிடமாற்றம் செய்ய மாநில அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. ஆனால், அதற்கு முதல்வர் மம்தா பானர்ஜி மறுப்புத் தெரிவித்தார்.

மேற்கு வங்க மாநில தலைமைத் தேர்தல் அலுவலர் சுனில் குப்தா, கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறும்போது, "தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் ஆர்.கே.யாதவ் (மால்டா), ஹுமாயுன் கபிர் (முர்ஸிதாபாத்), எஸ்.எம்.எச்.மிர்ஸா (பர்த்வான்), பாரதி கோஷ் (மேற்கு மிட்னாபூர்) உள்ளிட்ட 5 அதிகாரிகளையும், வடக்கு 24 பர்கானாஸ் மாவட்ட ஆட்சியர் சஞ்சய் பன்சால் ஆகியோர் மீது புகார் வந்துள்ளது.

அது தொடர்பாக விசாரணை நடத்தியதைத் தொடர்ந்து, அவர்களை தேர்தல் அல்லாத வேறு பணிக்கு மாற்ற மாநில அரசின் தலைமைச் செயலாளர் சஞ்சய் மித்ராவுக்கு உத்தரவிட்டுள்ளோம்" என்றார்.

இதுகுறித்து மம்தா பானர்ஜி பேசியபோது, "தேர்தல் ஆணையத்தை மதிக்கிறேன். ஆனால், அதிகாரிகளை மாற்றும் உத்தரவை அமல்படுத்த மாட்டேன். வரம்பு மீறி தேர்தல் ஆணையம் செயல்படக் கூடாது. வேண்டுமானால், நீங்கள் (தேர்தல் ஆணையம்) முதல்வர் பதவியை எடுத்துக் கொள்ளுங்கள். சட்டம், ஒழுங்கை பராமரிக்கும் பணியை நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள்.

அதிகாரத்தைப் பற்றி எப்போதும் நான் கவலைப்பட்டதில்லை. காங்கிரஸ் தான் வெற்றி பெறுவதற்காக கூறும் யோசனையை மட்டும்தான் நீங்கள் (தேர்தல் ஆணையம்) கேட்பீர்களா? ஒரு ஊடக நிறுவனம், காங்கிரஸ், தேர்தல் ஆணையம், பாஜக, மார்க்சிஸ்ட் ஆகியோர் இணைந்து இத்தகைய சதிச்செயலில் ஈடுபட்டுள்ளனர். இதே போன்ற நடவடிக்கையை குஜராத்திலும், சோனியா காந்தி போட்டியிடும் தொகுதியிலும் நீங்கள் மேற்கொள்வீர்களா? தேர்தல் ஆணையத்தின் உத்தரவை அமல்படுத்த மாட்டேன். 5 பேரையும் பணியிட மாற்றம் செய்ய மாட்டேன். இதற்காக நீங்கள் என்னை சிறையில் தள்ளினாலும் கவலையில்லை" என்றார்.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜியின் இந்த நிலைப்பாடு பெரும் சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், தேர்தல் ஆணைய உத்தரவை நடைமுறைப்படுத்துவதாக இன்று அறிவித்தார்.

இதனிடையே, அதிகாரிகள் பணியிடமாற்றம் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தனது உத்தரவை மறு பரிசீலனை செய்யக்கோரி மேற்கு வங்க அரசு கடிதம் எழுதியது. அந்த கடிதத்தில், அதிகாரிகளின் பணியிடமாற்றம் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தனது நிலைப்பாட்டை மறு பரிசீலனை செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்தக் கோரிக்கையை உடனடியாக நிராகரித்த தேர்தல் ஆணையம், புதன்கிழமைக்குள் உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்று திட்டவட்டமாக மேற்கு வங்க அரசுக்கு பதிலளித்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x