Published : 23 Apr 2014 08:36 AM
Last Updated : 23 Apr 2014 08:36 AM

117 தொகுதிகளில் நாளை வாக்குப் பதிவு

தமிழகம் உள்பட 12 மாநிலங்களைச் சேர்ந்த 117 மக்களவைத் தொகுதிகளில் நாளை (வியாழக்கிழமை) வாக்குப் பதிவு நடைபெறுகிறது. அந்த தொகுதிகளில் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியுடன் பிரச்சாரம் நிறைவடைந்தது.

நாடு முழுவதும் கடந்த 7-ம் தேதி தொடங்கி மே 12-ம் தேதி வரை 9 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது.

இதில் ஆறாம் கட்டமாக தமிழகம்- 39, புதுச்சேரி- 1, மேற்கு வங்கம்- 6, உத்தரப் பிரதேசம் -12, ராஜஸ்தான்- 5, மகாராஷ்டிரம்- 19, மத்தியப் பிரதேசம்- 10, ஜார்க்கண்ட்- 4, காஷ்மீர்- 1, சத்தீஸ்கர்- 7, பிஹார்- 7, அசாம்- 6 ஆகிய மாநிலங்களில் 117 தொகுதிகளுக்கு வியாழக்கிழமை தேர்தல் நடைபெறுகிறது.

மேலும் பிஹார் (2), மத்தியப் பிரதேசம் (1), தமிழகம் (1) ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற இடைத்தேர்தலும் நடைபெறுகிறது. இந்தத் தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.

முலாயம் சிங், ஹேமமாலினி

உத்தரப் பிரதேசத்தில் 12 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. 187 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஆளும் கட்சியான சமாஜ்வாதியின் தலைவர் முலாயம் சிங் மெயின்புரி தொகுதியில் போட்டியிடுகிறார். அவரது மருமகளும் முதல்வர் அகிலேஷ் யாதவின் மனைவியுமான டிம்பிள் யாதவ், கன்னோஜ் தொகுதியை தக்கவைக்க மீண்டும் போட்டியிடுகிறார்.

‘நட்புக்காக’ இந்த இரு தொகுதிகளிலும் காங்கிரஸ் சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்படவில்லை. இதேபோல் சோனியாவின் ரேபரேலி, ராகுலின் அமேதி தொகுதிகளில் சமாஜ்வாதி வேட்பாளர்கள் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பதேபூரில் ராஷ்ட்ரீய லோக் தளம் சார்பில் அமர்சிங், பரூக்காபாதில் வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் போட்டியிடுகின்றனர்.

மதுரா தொகுதியில் பாஜக வேட்பாளர் நடிகை ஹேம மாலினியை எதிர்த்து ராஷ்ட்ரீய லோக் தளம் தலைவர் அஜித் சிங்கின் மகன் ஜெயந்த் சவுத்ரி போட்டியிடுகிறார். முன்னாள் முதல்வர் கல்யாண் சிங்கின் மகன் ராஜ்வீர் சிங், எடா தொகுதியில் களத்தில் உள்ளார்.

பிஹாரில் ஷாநவாஸ் ஹுசேன்

பிஹார் மாநிலத்தில் 7 தொகுதி களுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதில் பாகல்பூர் தொகுதியில் பாஜக மூத்த தலைவர் ஷாநவாஸ் ஹுசேன் போட்டியிடுகிறார். ஐக்கிய ஜனதா தளம் சார்பில் அபு கைசர், ராஷ்ட்ரீய ஜனதா தளம் சார்பில் புல்லோ மண்டல் ஆகியோர் இந்தத் தொகுதியில் போட்டியிடுகின்றனர். மூவருக்கும் இடையில் கடும் போட்டி நிலவுகிறது.

குடியரசுத் தலைவர் மகன் போட்டி

மேங்கு வங்கத்தில் 6 தொகுதி களுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஜான்ஜிபூர் தொகுதியில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மகன் அபிஜித் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டி யிடுகிறார். ராய்கஞ்ச் தொகுதியில் மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சர் தீபா முன்ஷி போட்டியிடுகிறார். நடிகையான இவர் முன்னாள் மத்திய அமைச்சர் பிரியரஞ்சன் தாஸ் முன்ஷியின் மனைவி ஆவார்.

ஒட்டுமொத்தமாக 6-ம் கட்ட தேர்தலில் 1767 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அவர்களின் எதிர் காலத்தை 11.6 கோடி வாக்காளர்கள் நிர்ணயிக்க உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x