Published : 13 Apr 2014 01:55 PM
Last Updated : 13 Apr 2014 01:55 PM

காவிரி பிரச்சினையை சட்டப்பேரவையில் விவாதிக்கத் தயாரா?: ஜெ.க்கு கருணாநிதி கேள்வி

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் ஏ.கே.எஸ். விஜயன் (நாகை), டி.ஆர். பாலு (தஞ்சை) ஆகியோரை ஆதரித்து திருவாரூர் தெற்கு வீதியில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் கருணாநிதி பேசியது:

தமிழகத்தை ஆளும் ஜெயலலிதா எதற்கெடுத்தாலும் எதிர்க்கட்சிகளை தாக்கிப் பேசி வருகிறார். தான் வெற்றிபெற்று இந்தியாவின் பிரதமராவதைத் தடுக்கப் பார்க்கிறார்களே என்று எங்கள் மீது பாய்கிறார்.

காவிரி பிரச்சினையில் கருணாநிதி சிறு துரும்பையாவது கிள்ளிப்போட்டிருப்பாரா என்று தஞ்சை கூட்டத்தில் ஜெயலலிதா கேட்டுள்ளார்.

நாங்கள், பெரிய பெரிய தூண்களையே அள்ளிப்போட்டும் எதுவும் நடக்கவில்லை. கர்நாடகத்தின் பிடிவாதம், மத்திய அரசின் அலட்சியம், சட்டத்தின் பிடியாலும் தீர்வு தள்ளிக்கொண்டே போகிறது.

இந்தப் பிரச்சினையில் ஜெயலலிதாவுக்கு உள்ள உரிமையைவிட எனக்கு அதிக உரிமை உள்ளது. ஏனென்றால் நான் தஞ்சாவூர்காரன், காவிரி ஆற்றுத் தண்ணீரைக் குடித்து வளர்ந்தவன்.

காவிரி பிரச்சினையில் நாங்கள் என்ன தவறு செய்தோம் என்பதை ஜெயலலிதா சொல்லட்டும். நான் சட்டப்பேரவைக்கு வருகிறேன். நேரம் ஒதுக்கட்டும். அங்கு விவாதிக்கலாம். அப்போது, உண்மை நாட்டுக்குத் தெரியும். அதுவரை ஜெயலலிதா அதைப்பற்றி பேசக்கூடாது. அது, அவருக்கும் நல்லது. நாட்டுக்கும் நல்லது. காவிரிக்கும் நல்லது.

இலங்கை தமிழர் பிரச்சினையில் இலங்கை அரசுக்கு எதிராக ஒரு தீர்மானத்தையாவது தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்ற கருணாநிதிக்கு துணிச்சல் இருந்ததா என்றும் ஜெயலலிதா பேசியுள்ளார்.

1956-ல் அண்ணாவின் தலை மையில் சிதம்பரத்தில் நடந்த பொதுக்குழுவில் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவான தீர்மானத்தை முன் மொழிந்தது நான். தொடர்ந்து எனது தலைமையில் எத்தனைப் போராட்டங்கள், மத்திய அரசுக்கு கடிதங்கள். மனிதச் சங்கிலி போராட்டங்கள் நடத்தியுள்ளோம், எத்தனை முறை சிறை சென்றுள்ளோம். சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம் என்பது, இங்குள்ள கட்சிகளுக்கும், மக்களுக்கும் தெரியும். இதை ஜெயலிலதா மறுக்கிறாரா, மறைக்கிறாரா?

மாதம் ரூ.1 சம்பளம் வாங்கி யதாகக் கூறிய ஜெயலலிதாவுக்கு எவ்வளவு சொத்துகள் உள்ளன என்பதை அரசு வழக்கறிஞர் பவானி சிங் பட்டியலிட்டுள்ளார். அதில், சென்னையில், சிறுதாவூரில், கொடநாட்டில், கன்னியாகுமரியில், ஐதராபாத்தில் இவருக்கும், இவரது தோழி சசிகலாவுக்கும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களும், பங்களாக் களும், ஆடம்பர கார்களும், கோடிக்கணக்கான மதிப்பில் அசையும் சொத்துகளும் உள்ளதாகத் தெரிவித்துள்ளார். அப்படிப்பட்ட ஜெயலலிதாவுக்கு, இனியும் மற்றவர்களைப் பற்றி பேசத் தகுதி இல்லை.

இதில் உண்மை இல்லை. எங்கேயும், எனக்கு பங்களாக்கள், சொத்துகள் இல்லை என்று ஜெயலலிதா அறிவிக்கத் தயாரா என்றார் கருணாநிதி.

கூட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், செல்வராஜ், மதிவாணன், அழகு. திருநாவுக்கரசு, தேர்தல் பணிக்குழு செயலர் எல். கணேசன், மாவட்டச் செயலர் பூண்டி கே. கலைவாணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x