Published : 01 Apr 2014 06:14 PM
Last Updated : 01 Apr 2014 06:14 PM

வேலைவாய்ப்புக்குத் துளியும் வழி இல்லாத மதுரை!

# தொகுதியின் மிக முக்கியப் பிரச்சினை வேலைவாய்ப்பின்மை. வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிந்துவிட்டுக் காத்திருப்பவர்களின் எண்ணிக்கை மட்டும் சுமார் மூன்று லட்சம். தொழிற்சாலைகளோ, பெரிய நிறுவனங்களோ இங்கே வரவில்லை. இதனால், மதுரையின் படித்த இளைஞர்கள் வேலை தேடி சென்னை, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத், கோவை, திருப்பூர் என்று செல்கின்றனர்.

# படித்தவர்கள் வாழத் தகுதியற்ற ஊர்களில் ஒன்று மதுரை. செவிலியர்களில் ஆரம்பித்து, கல்லூரிப் பேராசிரியர்கள் வரை இங்கே உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்காமல் தவிக்கிறார்கள். இவர்கள் வேலை பார்ப்பது பெரும்பாலும் தனியார் நிறுவனங்கள் என்பதால், முறையிடவும் முடியாமல் வெளியேறவும் முடியாமல் தவிக்கிறார்கள். ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மட்டுமே சம்பளம் கொடுக்கிற பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை மட்டும் சுமார் 10 என்கின்றனர் பாதிக்கப்பட்டவர்கள்!

# மதுரைக்கு என்று அரசு அறிவிக்கும் திட்டங்கள் எல்லாம் கிடப்பில் போடப்பட்டுள்ளன. கடந்த ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட தகவல் தொழில்நுட்பப் பூங்கா வெறும் கட்டிடமாகவே நிற்கிறது. இந்த ஆட்சியில் துணைநகரம், மெட்ரோ ரயில் என்றார்கள். அவையும் வெற்று அறிக்கைகளாகிவிட்டன.

# முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையில் உண்மையான அக்கறையோடு இரு திராவிடக் கட்சிகளும், கம்யூனிஸ்ட்டுகளும் குரல் கொடுக்காததால் வைகை வறண்டுவிட்டது. ‘வைகை என்னும் பொய்யா குலக்கொடி’ என்ற பெருமையையும் இழந்தாகிவிட்டது. இருபோகம் விவசாயம் செய்த மேலூர், மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதி விவசாயிகள் இப்போது ஒரு போகத்துக்கே திண்டாடுகின்றனர்.

# ஆற்றில் கழிவுநீர் கலக்கும் இடங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. கடந்த தி.மு.க. ஆட்சியில் வைகையைச் சுத்தப்படுத்தினார்கள். ஆனால், தொடர்ந்து பராமரிக்கத் தவறிவிட்டார்கள். இப்போது, ஆற்றின் தடமே தெரியாத அளவுக்குப் பல இடங்களில் கருவேல மரங்கள் ஆக்கிரமித்துவிட்டன. வைகையின் கரையோரங்களில் பல இடங்களில் மாநகராட்சி அனுமதியுடன் ராட்சதக் குழாய்களில் நகரக் கழிவுகளைக் கலக்கின்றனர்.

# குடிநீர்ப் பற்றாக்குறை பெரும் பிரச்சினை. குடிநீர்த் திட்டக் கிணறுகள் எல்லாம் வறண்டுபோனதால், மதுரை மாநகரில் மட்டும் 500 ஆழ்துளைக் கிணறுகள் அமைக்க அவசர உத்தரவு போட்டார்கள். பல ஆழ் துளைக் கிணறுகளில் வெறும் காற்றுதான் வருகிறது. காசுக்குத் தண்ணீர் வாங்கவே லாரிகளின் முன்னால் மக்கள் அடித்துக்கொள்ளும் நிலை வந்துவிட்டது.

# காமராஜர் ஆட்சிக் காலத்தில் மதுரையில் மீனாட்சி அரசு கலைக் கல்லூரியும், அரசு மருத்துவக் கல்லூரியும் வந்தது. அதன் பிறகு, மேலூர் அரசு கலைக் கல்லூரி யைத் தவிர, ஒரு அரசுக் கல்லூரிகூட வரவில்லை. சட்டமன்றத் தொகுதிகள் தோறும் அரசு கலைக் கல்லூரி கள் வேண்டும்; ஐ.ஐ.டி. கிளை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்படவே இல்லை.

# அண்ணா பேருந்து நிலையத்தில் அரசு மருத்துவ மனையின் விரிவாக்கக் கட்டிடத்தை மத்திய அரசு உதவியுடன் மிகப் பிரமாண்டமாகக் கட்டினர். ஆனால், மருத்துவ உபகரணங்கள், தளவாடங்கள் வாங்க நிதி ஒதுக்காததால், வெற்றுக் கட்டிடமாக இயங்கு கிறது இந்த மருத்துவமனை. எய்ம்ஸ் மருத்துவ மனைக்கு இணையாக இங்கே மருத்துவமனை கொண்டுவருவதாகச் சொன்னார் அழகிரி. அதுவும் நிறைவேற்றப்படவில்லை.

# சென்னையின் பிரபல ஜவுளிக் கடைகள், தியேட்டர்கள், பல்பொருள் அங்காடிகள், மருத்துவமனைகள் எல்லாம் மதுரையில் கிளை அமைத்து லாபகரமாக இயங்குகின்றன. ஆனால், தொழிற்சாலைகள், பெரும் நிறுவனங்களை யாருமே இங்கே தொடங்க முன்வருவதில்லை.

# தமிழகத்தின் மின்உற்பத்தியில் பெரும்பங்கு வகிக்கும் தென்மாவட்டங்கள், மின்வெட்டின்போது ஓரவஞ்சனையாக நடத்தப்படுகின்றன. கூடங்குளம் அணு மின்நிலையம், நெல்லை, குமரி, தேனி மாவட்டக் காற்றாலைகள், அணைக்கட்டுகளின் நீர்மின் நிலையங்கள், தூத்துக்குடி அனல் மின்நிலையம், ராமநாதபுரம் மாவட்டம் வழுதூர் இயற்கை எரிவாயு மின்நிலையம் என்று தென்மாவட்டங்களில்தான் அதிகம் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. ‘மின்உற்பத்தி செய்யப்படுகிற மாநிலத்துக்குத்தான் முன்னுரிமை தர வேண்டும்’ என்று கூடங்குளம் விவகாரத்தில் தமிழக முதல்வர் மத்திய அரசை வலியுறுத்தினார். ஆனால், அதே தமிழக அரசு, தென்தமிழகத்தில் உற்பத்தியாகிற மின்சாரத்தை எல்லாம் வடதமிழகத்துக்குக் கொண்டு செல்வதில்தான் முனைப்பு காட்டுகிறது என்கின்றனர் மக்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x