Published : 05 Apr 2014 12:46 PM
Last Updated : 05 Apr 2014 12:46 PM

நரேந்திர மோடிதான் அடுத்த பிரதமர்: அத்வானி உறுதி

நரேந்திர மோடியே நாட்டின் அடுத்த பிரதமர் என்று பாஜக மூத்த தலைவர் அத்வானி உறுதி படத் தெரிவித்துள்ளார். இதனிடையே காந்திநகர் தொகுதியில் நேற்று அவர் வேட்பு மனு தாக்கல் செய்தார். அவருடன் நரேந்திர மோடியும் வந்திருந்தார். வேட்புமனு தாக்கலுக்கு முன்பு காந்திநகரில் நிருபர்களிடம் அத்வானி கூறியதாவது:

1947 இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு பாகிஸ்தானில் வசித்த எனது குடும்பம் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்தது. எனது தந்தை குஜராத் மாநிலம் கட்ச் நகர் அருகே அதிப்பூரில் குடியேறினார். பின்னர் எனது பாட்டி விருப்பத்தின்பேரில் நாங்கள் காசிக்கு இடம் பெயர்ந்தோம். 4 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் அதிப்பூருக்கே திரும்பி வந்துவிட்டோம்.

அன்றிலிருந்து இன்றுவரை குஜராத் மாநிலத்தோடு ஒன்றிணைந்து வாழ்ந்து வருகிறேன். மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சில நண்பர்கள் நான் போபாலில் போட்டியிட வேண்டும் என்று விரும்பினர். ஆனால் காந்தி நகரை விட்டுப் பிரிய எனக்கு விருப்பமில்லை. இங்கு போட்டியிடுவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.

இதைத் தொடர்ந்து பிற்பகலில் அத்வானியும் நரேந்திர மோடியும் இணைந்து காந்திநகர் தேர்தல் அலுவலகத்துக்கு வந்து வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.

பின்னர் நிருபர்களிடம் அத்வானி கூறியதாவது: நரேந்திர மோடியை என்னுடைய சீடர் என்று கூறமாட்டேன். மோடி மிகச் சிறந்த தலைவர். ஆனால் அவரைப் போன்ற புத்திசாலி, நிர்வாகியை நான் பார்த்தது இல்லை. இந்த திறமையை அவர் ஆட்சி நிர்வாகத்திலும் வெளிப் படுத்துவார். அதனால்தான் கட்சித் தலைமை அவருக்கு முக்கிய பொறுப்பை வழங்கியுள்ளது.

வாஜ்பாயையும் மோடியையும் என்னால் ஒப்பிட்டுப் பேச முடியாது. வாஜ்பாய் தன்னிகரற்ற தலைவர். பாஜகவின் கொள்கை வழிகாட்டி தீனதயாள் உபாயாத்யாயா. அவரது கொள்கைகளை ஆட்சி நிர்வாகத்தில் வெற்றிகரமாக செயல்படுத்தியவர் வாஜ்பாய் என்று அத்வானி தெரிவித்தார்.

மோடி வேண்டுகோள்

முன்னதாக கட்சி பொதுக் கூட்டத்தில் மோடி பேசியதாவது: அத்வானி எனது அரசியல் வழிகாட்டி, ஆலோசகர். காந்திநகர் தொகுதியில் போட்டியிடும் அத்வானியை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

மக்களவைத் தேர்தலில் மத்தியப் பிரதேசத்தின் போபால் தொகுதியில் போட்டியிட அத்வானி விரும்பியதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் பாஜக தலைமை அவருக்கு காந்தி நகர் தொகுதியையே ஒதுக்கியது.

பின்னர் கட்சியின் மூத்த தலைவர்கள், ஆர்.எஸ்.எஸ். தலை வர்கள் சமரசம் செய்து காந்தி நகரில் போட்டியிட அத்வானியை சம்மதிக்கச் செய்தது நினைவு கூரத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x