Published : 13 Apr 2014 09:12 PM
Last Updated : 13 Apr 2014 09:12 PM

அதிமுக, திமுகவுக்கு மக்களைப் பற்றி அக்கறையில்லை: சென்னை பிரச்சாரக் கூட்டத்தில் மோடி குற்றச்சாட்டு

திமுக, அதிமுக இடையே சிக்கி தமிழக மக்கள் தவிக்கின்றனர். மக்களைப் பற்றி அந்தக் கட்சிகளுக்கு அக்கறையே இல்லை என்று சென்னையில் நடந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பேசினார்.

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள ஜெயின் கல்லூரி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த பொதுக்கூட்டத்தில் நரேந்திர மோடி பேசியதாவது: "இன்று பொன்னான நாள். மகாவீரர் ஜெயந்தி. நாளை அம்பேத்கார் பிறந்த நாள். மற்றொரு பொன்னான விழா, நாளை தமிழ்ப் புத்தாண்டு. லட்சுமி தேவியும் சரஸ்வதியும் தமிழக மக்களுக்கும், இந்திய மக்களுக்கும் வரங்களை அள்ளித் தரவேண்டும். 2014 தேர்தல் மிகவும் தனித்துவம் மிக்கது.

நாடு முழுவதும் தேர்தல் மீது மக்களுக்கு ஈடுபாடு மிகுந்திருப்பதை முதல் முறையாக பார்க்கிறேன். இந்தத் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடனே முடிவும் அறிவிக்கப்பட்டுவிட்டது விந்தையானது. தற்போது உள்ள அரசு முடிவுக்கு வந்து, புதிய அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர்.

இந்தத் தேர்தலில் மக்களின் உற்சாகம் மிகுந்துள்ளது. நாட்டு மக்கள் 10 ஆண்டுகள் ஊழல் ஆட்சியில் தவித்துக் கொண்டிருந்தனர். மக்களுக்கு இப்போது தேவை ஒரு மாற்றம். அதற்கான சபதத்தை மக்கள் எடுத்துவிட்டார்கள். நமது நாட்டின் அடிப்படை தத்துவம் கூட்டாட்சி.

ஆனால், டெல்லியில் உள்ள அரசு, மாநில அரசுகளுக்கு மதிப்பு கொடுப்பதில்லை. மாநில மக்களுக்கு மதிப்பு கொடுக்கும் புதிய அரசாங்கம் வரும். பாஜக, அதன் தோழமைக் கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைக்கப்போகிறது. தேசிய ஜனநாயக கூட்டணி பல கட்சிகள் இணைந்த ஒரு அமைப்பு. ஒரே அணியாக நாட்டுப் பிரச்சினைகளை தீர்ப்போம் என்ற உறுதியை அளிக்கிறேன்.

இந்தத் தேர்தலில் நாட்டின் அரசியல் வரலாற்றிலேயே தேர்தலுக்கு முன்பு பாஜகவுடன் 24 கட்சிகள் இணைந்து களம் காண்கிறது. எங்கள் கூட்டணி இந்தியாவில் மட்டுமல்ல, தமிழகத்திலும் புதிய வரலாற்றை ஏற்படுத்தும். தமிழக மக்கள் திமுக, அதிமுக என இரு கட்சிகளிடையே சிக்குண்டு தவிக்கின்றனர். இவர்கள் 5 ஆண்டு ஆட்சி செய்கிறார்கள். அடுத்து 5 ஆண்டுகள் அவர்கள் ஆட்சிக்கு வருவார்கள். ஒருவரையொருவர் எப்படி ஒழிப்பது என்றே சிந்திக்கிறார்கள். இருவரும் மக்களைப் பற்றி சிந்திப்பது இல்லை. மக்களைப் பற்றிய அக்கறை அவர்களுக்கு இல்லை என்பதை பல ஆண்டுகளாக பார்த்து வருகிறோம்.

தமிழகத்தில் முதன் முறையாக 3-வது சக்திமிக்க ஓர் அணி உருவாகி உள்ளது. இந்த அணி அவர்களை நடுங்கவைத்துள்ளது. இந்த அணி, தமிழக மக்களின் எண்ணங்களை ஈடேற்றும். நாங்கள் விரும்புவது, மாநிலங்களை சில அணிகளாக நினைத்து பிரச்சினைகளை தீர்க்க வேண்டும். வடகிழக்கு மாநிலங்களின் பிரச்சினைகள் ஒரே மாதிரியானவை. அதேபோல், தமிழகம் உள்ளிட்ட கடலோர மாநிலங்களுக்கு சில பிரச்சினைகள் உள்ளன. அதேபோல் எல்லை மாநிலங்களிலும் சில பிரச்சினைகள் உள்ளன.

எல்லா மாநிலங்களின் பிரச்சினைகளையும் தீர்க்க ஒரே அணியாக செயல்படுவோம். ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் நிலை இன்று பரிதாபமாக இருக்கிறது. அதன் தலைவர்கள் பயந்து ஓடிவிட்டார்கள். மறு எண்ணிக்கை அமைச்சர் (ப.சிதம்பரம்) பயந்து ஓடிவிட்டார். இதுதான் காங்கிரஸின் நிலை. தற்போது காங்கிரஸ் அரசு, ஏழைகளின் பேரைச் சொல்லி ஏமாற்றி வருகிறது.

தேர்தல் நேரத்தில்தான் ஏழைகளின் குடிசைக்குச் சென்று தன்னை மிகைப்படுத்திக் காட்டிக்கொள்ள விரும்புகிறார், ஒரு இளம் தலைவர். காங்கிரஸின் இளவரசருக்கு ஏழ்மை பற்றி தெரியாது. ஏனென்றால், அவர் பிறக்கும்போதே பணக்காரராக பிறந்தவர்.

ஆனால், நான் ஏழையாகப் பிறந்தவன். ஏழைகளின் துயரம் எனக்குத் தெரியும். நான் ஏழ்மையில் பிறந்து, ஏழ்மையில் வளர்ந்தவன். ஏழைகளின் வாழ்க்கையில் விளக்கு ஏற்றுவதே எங்கள் அணியின் நோக்கம். 2022-ம் ஆண்டு நமது நாடு தனது 75-ம் ஆண்டு சுதந்திர தின விழாவை அதாவது, பவளவிழாவை கொண்டாட இருக்கிறது.

நமக்கு ஒரு கனவு உள்ளது. நாம் ஒரு சபதத்தை எடுத்துள்ளோம். சுதந்திர தின பவளவிழாவின் போது, ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு வீடு இருக்கும். அந்த வீட்டில் குடிதண்ணீர், மின்சாரம் இருக்கும். 2009-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் 10 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிப்போம் என்று காங்கிரஸ் வாக்குறுதி அளித்தது. அவர்கள் உறுதிமொழியை நிறைவேற்றவில்லை.

ஆனால், இப்போது மீண்டும் அதே உறுதிமொழி அளிக்கிறார்கள். ஆனால், வாஜ்பாய் அரசு 6 ஆண்டுகளில் 7 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்தது உண்மை. தமிழகத்தில் இளைஞர்களுக்கு மட்டுமல்ல, இந்திய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிப்போம் என்று உறுதிபட கூறுகிறேன். இதுதான் நாட்டை முன்னேற்றும் வழி.

இன்றைய அரசு, நம் மீனவர்கள் வாழ்க்கையில் கவனம் செலுத்துவது இல்லை. அவர்களுக்கு உரிய நவீன தொழில்நுட்ப வசதி செய்து தரப்படவில்லை. மீனவர்கள் வாழ்வில் நான் ஒளியேற்றுவேன். தமிழகத்தில் வாழும் மீனவர்களுக்கு இலங்கையாலும், குஜராத் மீனவர்களுக்கு பாகிஸ்தானாலும் அன்றாடம் துன்பமும் இன்னல்களும் ஏற்படுகிறது. கேரள மீனவர்களை இத்தாலியில் இருந்து வந்து நசுக்கி செல்கின்றனர்.

நாங்கள் அனைத்து மீனவர்களுக்கும் பாதுகாப்பு அளிப்போம். டெல்லியில் வலுவற்ற அரசு இருப்பதால் எந்தப் பயனும் இல்லை. ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயங்கும் அரசால் எந்தப் பயனும் இல்லை. எங்கள் அணி வெற்றி பெற்றால் தமிழக தலைவர்களான ராமதாஸ், விஜயகாந்த் உள்ளிட்டோரின் உறுதுணையுடன் வலுவான அரசை அமைப்போம். மத்தியில் துணிச்சல் மிக்க அரசு இல்லாததால், மக்கள் இப்போது துவண்டு இருக்கிறார்கள். அண்டை நாடுகளான இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்டவை வளர்ந்துகொண்டிருக்கின்றன. அண்டை நாடுகளால் அச்சுறுத்தலும் இருக்கிறது.

எனவே, துணிச்சல் மிக்க அரசு தேவை. இலங்கையின் எங்கள் தமிழ்ச் சகோதரர்களுக்கும், மற்ற நாடுகளில் உள்ள தமிழ்ச் சகோததர்களுக்கும் நாங்கள் துணைபுரிவோம். அவர்களை தற்போது உள்ள அரசு கைவிட்டுவிட்டது. ஆனால், நாங்கள் கைவிட மாட்டோம்.

டெல்லியில் பெண்களுக்கே பாதுகாப்பு இல்லாத நிலைமை இருக்கிறது. நிர்பயாவின் நிலை உங்களுக்குத் தெரியும். டெல்லியில் மக்கள் வெகுண்டு எழுந்தார்கள். அவர்களுக்கு அரசு செய்தது என்ன? வெறும் ரூ.1000 கோடி நிதியை ஒதுக்கியதுதான். மறு எண்ணிக்கை அமைச்சரிடம் (ப.சிதம்பரம்) கேட்கிறேன். நிர்பயா நிதிக்கு ரூ.1000 கோடி ஒதுக்கி ஓராண்டு ஆன பின்பும் அதில் இருந்து ஒரு ரூபாய் கூட இன்னும் செலவிழிக்கவில்லையே ஏன்? இதுதான் இந்தியப் பெண்கள் மீதான அக்கறையா? சமூக வலைத்தளங்களில் இன்று ஒரு செய்தி படுவேகமாக பரவிக் கொண்டிருக்கிறார்.

உலகின் பல நாடுகளின் கட்டளைக்கு இணங்க, சீனாவிடம் பிரதமர் மன்மோகன் சிங் விட்டுக்கொடுத்துப் போகவுள்ளதாக செய்திகள் பரவுகிறது. சியாச்சின் விவகாரத்தில் பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டியது அவசியம். வைகோ, ராமதாஸ், விஜயகாந்த் உள்ளிட்ட தலைவர்கள் ஒன்றிணைந்து பாஜக தலைமையில் நாட்டுக்காக தங்களையே அர்ப்பணித்துக் கொண்டுள்ளனர். இந்தத் தேர்தல் புதிய வரலாறு படைக்கும். இந்தியாவுக்கு மட்டுமின்றி தமிழகத்திலும் புதிய சரித்திரம் நிகழும்" என்றார் மோடி.

பாஜக வேட்பாளர்களான இல.கணேசன் (தென்சென்னை), ஏ.சி.சண்முகம் (வேலூர்), தேமுதிக வேட்பாளர்களான ரவீந்திரன் (மத்திய சென்னை), சவுந்திர பாண்டியன் (வடசென்னை), யுவராஜ் (திருவள்ளூர்), மதிமுக வேட்பாளர்கள் மாசிலாமணி (ஸ்ரீபெரும்புதூர்), மல்லை சத்யா (காஞ்சிபுரம்), பாமக வேட்பாளர்களான வேலு (அரக்கோணம்), ஏ.கே.மூர்த்தி (ஆரணி) ஆகியோரை ஆதரித்து மோடி வாக்கு சேகரித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x