Published : 27 Apr 2014 03:51 PM
Last Updated : 27 Apr 2014 03:51 PM

தேர்தலில் பணபலத்தைத் தடுக்க பிரவீண்குமாருக்கு ராமதாஸ் 10 யோசனைகள்

தேர்தலில் பணபலம் பயன்படுத்தப்படுவதை தடுக்க, மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமாருக்கு, பாமக நிறுவனர் ராமதாஸ் 10 அம்ச யோசனைகளை வழங்கியுள்ளார்.

இது தொடர்பாக தேவையான புதிய சட்டங்களை இயற்ற நடவடிக்கை எடுக்கும்படி தேர்தல் ஆணையத்தின் வழியாக மத்திய அரசுக்கு பரிந்துரைக்க வலியுறுத்தி இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ். சம்பத், தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் ஆகியோருக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.

அதில் இடம்பெற்றுள்ள 10 யோசனைகள் வருமாறு:

1) தேர்தல்களில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் ஓட்டுக்கு பணம் தர மாட்டோம் என்ற வாக்குறுதியை தேர்தல் ஆணையத்திடம் வழங்குவதை கட்டாயமாக்க வேண்டும். அதுமட்டுமின்றி, மாநில முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அனைத்துக் கட்சித் தலைவர்களும் விழிப்புணர்வு விளம்பர படங்களில் தோன்றி, "எங்கள் கட்சி சார்பில் வாக்காளர்களுக்கு பணம் தர மாட்டோம் & வேறு ஏதேனும் கட்சிகள் ஓட்டுக்கு பணம் கொடுத்தால் அது குறித்து தேர்தல் ஆணையத்திடமோ அல்லது தேர்தல் அதிகாரிகளிடமோ புகார் அளிக்க வேண்டும்" என அறிவுரை வழங்க வேண்டும். இந்த விழிப்புணர்வுப் படங்கள் மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் திரையிடப்பட வேண்டும்.

2) மக்களவைத் தேர்தல்கள் இப்போது நடைபெற்று முடிந்துள்ள நிலையில், இதில் போட்டியிட்ட அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட கட்சித் தலைவர்கள் கூட்டத்தை ஒவ்வொரு மாநிலத்திலும் தலைமைத் தேர்தல் அதிகாரிகள் கூட்ட வேண்டும். இந்த தேர்தலில் பணப் பயங்கரவாதம் எந்தளவுக்கு தலைவிரித்தாடியது என்பதை விளக்கி, இனி எந்த கட்சியும் ஓட்டுக்கு பணம் தரக்கூடாது என்று அறிவுறுத்த வேண்டும். அடுத்து வரும் தேர்தல்களுக்கு முன்பாகவும் இதேபோன்ற கூட்டத்தைக் கூட்டி , ‘ஓட்டுக்கு பணம் தர மாட்டோம்’ என்ற வாக்குறுதியை பெற வேண்டும்.

3) தேர்தல்களில் வாக்காளர்களுக்கு ஏதேனும் ஒரு கட்சி சார்பில் பணம் தரப்பட்டது ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டால் அதற்கு அந்தக் கட்சியின் வேட்பாளர் தான் பொறுப்பு என்று அறிவித்து அடுத்த 10 ஆண்டுகளுக்கு அவர் எந்த தேர்தலிலும் போட்டியிட தடை விதிக்க வேண்டும்.

4) தேர்தல்களில் வாக்காளர்களுக்கு பணம் தருபவர்களுக்கான தண்டனையை கடுமையாக்க வேண்டும்.

5) ஒரு தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது தொடர்பாக வழக்கு பதிவாகியிருந்தால், அந்த வழக்கின் விசாரணை முடிவடையும் வரை அத்தொகுதியின் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைக்க வேண்டும்.

6) இதனால், ஜனநாயக நடைமுறைகள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக தேர்தல் தொடர்பான வழக்குகள் வாக்குப்பதிவு முடிவடைந்த ஒரு மாதத்திற்குள் விசாரித்து தீர்ப்பளிக்கப்பட வேண்டும். இதற்காக தேர்தல் கால சிறப்பு நீதிமன்றங்களை அமைப்பது குறித்தும் ஆராயலாம்.

7) ஒரு தேர்தலில் ஏதேனும் ஓர் கட்சி வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது உறுதி செய்யப்பட்டால், அந்தக் கட்சியின் வேட்பாளர் விசாரணையின்றி தகுதி நீக்கம் செய்யப்பட்டு, அவருக்கு பதிவான வாக்குகள் அனைத்தும் செல்லாதவையாக அறிவிக்க வேண்டும்.

8) வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பணம் தருவதை கையும் களவுமாக பிடித்துக் கொடுப்பதுடன், குற்றச்சாற்றுகளை விசாரிக்க துணை நிற்பவர்களுக்கு ஒரு லட்சரூபாய் பரிசாக வழங்க வேண்டும்.

9) அரசியல் கட்சிகளின் பொதுக் கூட்டங்களுக்கு வாகனங்களையும், பேருந்துகளையும் அனுப்பும்படி கட்டாயப்படுத்தும் அதிகாரிகளை உடனடியாக பணி இடைநீக்கம் செய்வதுடன், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து சட்டப்படி தண்டனை பெற்றுத் தர வேண்டும்.

10) தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் உள்ள காலத்தில் காவல்துறை உள்ளிட்ட தேர்தல் தொடர்பான அனைத்து அதிகாரிகளும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் தான் இருப்பார்கள். எனினும் தேர்தல் முடிவடைந்த பின்னர் தேர்தல் ஆணையத்தால் தங்களைக் கட்டுப்படுத்த முடியாது என்பதாலும், ஆட்சியாளர்களைத் தான் தாங்கள் சார்ந்திருக்க வேண்டும் என்பதாலும், எந்த ஒரு அதிகாரியும் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுகளை மதிக்காமல் ஆளுங்கட்சியினருக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையை மாற்றி தேர்தல் காலத்தில் தவறு செய்யும் அதிகாரிகளை உடனடியாக பணி இடை நீக்கம் செய்யும் அதிகாரத்தை தேர்தல் ஆணையத்திற்கு வழங்க வேண்டும்; அவ்வாறு பணி இடை நீக்கம் செய்யப்பட்ட அதிகாரி தம்மை குற்றமற்றவர் என நிரூபிக்கும் வரை அவரை மீண்டும் பணியில் சேர்க்கக் கூடாது.

சுதந்திரமான, நேர்மையான, நியாயமான தேர்தல்களை நடத்துவதற்காக நான் முன்வைத்துள்ள மேற்கண்ட யோசனைகளை ஆராய்ந்து உரிய நடவடிக்கைகளை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்" என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x