Published : 10 Apr 2014 12:48 PM
Last Updated : 10 Apr 2014 12:48 PM

காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் 46 பேர் போட்டி

காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மூன்று தொகுதிகளில் 46 பேர் போட்டியிடுகின்றனர்.

காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட 25 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதில் 8 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, 11 மனுக்கள் ஏற்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, இறுதி வேட்பாளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் கா.பாஸ்கரன் புதன்கிழமை வெளியிட்டார். அவர்களுக்கான சின்னங்களும், அவர்கள் கேட்டவாறே ஒதுக்கப்பட்டன.

அதன் விவரம் ( கட்சி, சின்னம் அடைப்பு குறிக்குள்): தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சி வேட்பாளர்களான சத்தியராஜ் (பகுஜன் சமாஜ் கட்சி-யானை), ஜி.செல்வம் (திமுக- உதயசூரியன்), மரகதம் குமரவேல் (அதிமுக- இரட்டை இலை), பெ.விஸ்வநாதன் (காங்கிரஸ்- கை), பதிவு செய்யப்பட்ட கட்சி வேட்பாளர் மல்லை சத்யா (மதிமுக- பம்பரம்), சுயேச்சை வேட்பாளர்களான உலகநாதன் ( கூரை மின் விசிறி), சத்தியநாதன் (பட்டம்), சீனிவாசன் (தொப்பி), பற்குணம் (பலூன்), பாலமுருகன் (மெழுகுவர்த்தி), எம்.மரகதம் (இறகு பந்து). ஆகிய 11 பேர் இறுதி வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

ஸ்ரீபெரும்புதூர்

இத்தொகுதியில் மொத்தம் 39 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இதில் 16 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 23 மனுக்கள் ஏற்கப்பட்டன. இதில் புதன்கிழமை சுயேச்சை வேட்பாளர்களான ஜவகர் அலி, ஜெயபிரகாஷ் ஆகிய 2 பேர் தங்கள் வேட்பு மனுக்களை திரும்பப்பெற்றுக்கொண்டனர். இதைத் தொடர்ந்து பெரும்புதூர் தொகுதியில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியலை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் எம்.சம்பத்குமார் வெளியிட்டார்.

அதன் விவரம் (கட்சி, சின்னம் அடைப்புக் குறிக்குள்): தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி வேட்பாளர்களான அருள் அன்பரசு (காங்கிரஸ்- கை), எஸ்.ஜெகத்ரட்சகன் (திமுக- உதய சூரியன்), கே.என்.ராமச்சந்திரன் (அதிமுக- இரட்டை இலை), முகமது அப்பாஸ் (பகுஜன் சமாஜ் கட்சி- யானை), பதிவு செய்யப்பட்ட கட்சி வேட்பாளர்களான கே.பாரதி (மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட் கட்சி- 3 நட்சத்திர கொடி), ஏ.சு.மணி (தேசிய ஸ்தாபன காங்கிரஸ்- மெழுகுவர்த்திகள்), இரா.மாசிலாமணி (மதிமுக- பம்பரம்), எஸ்.ஏ.என்.வசீகரன் (ஆம் ஆத்மி- துடைப்பம்), இது தவிர சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட்டன.

திருவள்ளூர்

திருவள்ளூர் (தனி) நாடாளுமன்றத் தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் கடந்த மாதம் 29-ம் தேதி தொடங்கியது. கடந்த 5-ம் தேதி சனிக்கிழமையுடன் வேட்புமனுத் தாக்கல் முடிவடைந்தது. இதில் அரசியல் கட்சி வேட்பாளர்கள் 7 பேர், மாற்று வேட்பாளர்கள் 5 பேர், சுயேச்சை வேட்பாளர்கள் 13 பேர் என மொத்தம் 25 பேர் மனுத்தாக்கல் செய்தனர்.

வேட்புமனுக்கள் பரிசீலனை கடந்த 7-ம் தேதி திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், அரசியல் கட்சிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மாற்று வேட்பாளர்கள் ஐந்து பேர் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் நான்கு பேர் உள்பட மொத்தம் ஒன்பது பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 16 பேரின் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. வேட்புமனுக்கள் வாபஸ் பெறுவதற்கான கடைசி தேதி 9-ம் தேதியாகும். இந்நிலையில், கடைசி நாளில் சுயேச்சை வேட்பாளர்களான யுவராஜ், ஜெய்சங்கர் ஆகிய இருவரும் தங்களின் மனுக்களை வாபஸ் பெற்றனர்.

இதையடுத்து, அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கப்பட்டது. இதன்படி, பிரதான அரசியல் கட்சிகளான அதிமுக வேட்பாளர் வேணுகோபால் (இரட்டை இலை), காங்கிரஸ் வேட்பாளர் விக்டரி ஜெயக்குமார் (கை), விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் துரை.ரவிக்குமார் (மோதிரம்), இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கண்ணன் (தானிய கதிர் அரிவாள்), ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் பாலமுருகன் (துடைப்பம்), தேமுதிக வேட்பாளர் யுவராஜ் (முரசு), பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் சத்தியமூர்த்தி (யானை), சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் சீனிவாசன் (சைக்கிள்) மற்றும் சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட்டன.

பின்னர் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில், ஆட்சியர் வீரராக ராவ் உரையாற்றினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x