Published : 22 Apr 2014 12:21 PM
Last Updated : 22 Apr 2014 12:21 PM

தமிழகத்தில் முதல்முறையாக 144 தடை உத்தரவு அமல்: தேர்தலை அமைதியாக நடத்த ஆணையம் நடவடிக்கை

தமிழக தேர்தல் வரலாற்றிலேயே முதல்முறையாக 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இது 36 மணி நேரத்துக்கு அமலில் இருக்கும் என்று தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் கூறினார்.

இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

வரலாற்றில் முதல் முறை

தமிழக தேர்தல் வரலாற்றி லேயே முதல் முறையாக மாநிலம் முழுவதும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 144-ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி முதல் வியாழக்கிழமை (ஏப்ரல் 24) காலை 6 மணி வரை 36 மணி நேரத்துக்கு இது அமலில் இருக்கும். இதுபற்றி அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், காவல் ஆணையர்கள், காவல் கண்காணிப்பாளர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளோம். எனவே மேற்குறிப்பிட்ட கால இடைவெளியில் 5 பேருக்கு மேல் கும்பலாக சேர்ந்து செல்லக்கூடாது. வீடு, வீடாக வாக்கு சேகரிக்கச் செல்வோருக்கும் இது பொருந்தும். திருமணம் உள்ளிட்ட இதர குடும்ப விசேஷங்கள், துக்க நிகழ்ச்சிகளுக்கு இது பொருந்தாது.

வாக்குச்சாவடியில் இருந்து 100 மீட்டருக்குள் மது போதையில் யார் காணப்பட்டாலும் அது குற்ற மாகும். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வாக்குப்பதிவன்று தேவையற்ற பிரச்சினைகளைத் தடுப்பதற் காகவே, மதுக்கடைகள் மூடப் பட்டுள்ளன.

பணப்பட்டுவாடா தடுக்க..

தேர்தல் பிரச்சாரம் செவ்வாய்க் கிழமை மாலை 6 மணியுடன் முடிவடைந்தது. தொகுதிக்குத் தொடர்பு இல்லாத அரசியல் கட்சி யினர் அங்கிருந்து வெளியேறி விட வேண்டும். திருமண மண்டபங்களில், தங்கும் விடுதி களில் கும்பலாக தங்கி இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

பணப்பட்டுவாடாவைத் தடுப் பதற்காக ஏற்கெனவே 2 ஆயிரம் நிலை கண்காணிப்புக் குழுக்கள் உள்ளன. தற்போது, மண்டல அளவில் (10 அல்லது 15 வாக்குச்சாவடிக்கு ஒன்று வீதம்) மேலும் 5 ஆயிரம் குழுக்களை அமைத்து கண்காணித்து வருகிறோம். இன்று நடந்த சோதனையில் திருவண்ணா மலையில் ரூ.94 லட்சமும், நாமக்கல்லில் ரூ.1 லட்சமும் பூத் சிலிப்புடன் பிடிபட்டுள்ளன.

தமிழ்நாட்டில் வாக்காளர் களுக்கு பணம் கொடுக்கப் படுவதை தடுக்க தீவிர கண்காணிப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதுவரை கணக்கில் வராத ரூ.51 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

4 லட்சம் பேர் பாதுகாப்பு

தேர்தல் பாதுகாப்பு பணிக்கு துணை ராணுவம், மத்திய ரிசர்வ் போலீஸ் உள்பட ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட போலீசார் தயார் நிலையில் உள்ளனர். 2 லட்சத்து 93 ஆயிரம் அதிகாரிகளும், 7 ஆயிரம் கண்காணிப்பு ஊழியர் களும் தேர்தல் பணியில் ஈடுபடுத் தப்பட்டுள்ளனர். வாக்குச்சாவடி களுக்கு, தேர்தல் ஊழியர்கள் புதன்கிழமை காலை சென்றுவிட வேண்டும். மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், அந்தந்த வாக்குச் சாவடிகளுக்கு புதன் கிழமை கொண்டு செல்லப்படும்.

வாக்குச்சாவடிக்கு வரும் வாக்காளர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. 100 சதவீதம் வாக்குப்பதிவை அமைதியாக நடத்த வேண்டும் என்பதே நோக்கம். தேர்தலன்று பகல் நேர சினிமா காட்சிகளை ரத்து செய்யவேண்டும் என்ற கோரிக்கை வந்தது. ஆனால் சினிமா காட்சிகளை ரத்து செய்ய சட்டத்தில் இடம் இல்லை. இவ்வாறு பிரவீண்குமார் கூறினார்.

144-வது சட்டப் பிரிவு சொல்வது என்ன?

குற்றவியல் நடைமுறைச் சட்டம் 144-வது பிரிவின் கீழ் ஓரிடத்தில் சட்ட விரோதமாகக் கூடுவதற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. மாஜிஸ்திரேட் அந்தஸ்தில் இருப்பவர் தனது நிர்வாகப் பகுதியில் எங்கு வேண்டுமானாலும் இந்த தடை உத்தரவைப் பிறப்பிக்க இயலும். கலவரங்களைத் தடுக்கவும், பொது அமைதியைப் பராமரிக்கவும் இந்த தடை உத்தரவு பயன்படும்.

இந்த சட்டத்தின்படி தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள இடத்தில் 5 பேருக்கு மேல் பொது இடங்களில் கூட்டமாக கூடுவது தவறாகும். அந்தக் கூட்டத்தினரால் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்பட்டால், கூட்டத்தில் இருந்த அனைவருமே தண்டனைக்கு ஆளாவார்கள். குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x