Last Updated : 24 Mar, 2014 12:00 AM

 

Published : 24 Mar 2014 12:00 AM
Last Updated : 24 Mar 2014 12:00 AM

தமிழக வாக்காளர் எண்ணிக்கை 5.50 கோடியை நெருங்குகிறது- பட்டியலில் பெயர் சேர்க்க நாளை கடைசி நாள்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தமிழக மக்களிடையே பெரும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு பல லட்சம் பேர் பட்டியலில் பெயர் சேர்க்க மனு செய்துள்ளதால் தமிழகத்தில் வாக்காளர்களின் எண்ணிக்கை 5.50 கோடியை நெருங்கும் என்று தேர்தல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு சுருக்கமுறை திருத்தப் பணி கடந்த ஆண்டு அக்டோபரில் நடந்தது. அதன்பிறகு தமிழகத்தில் 23.49 லட்சம் பேர் புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டனர். இதையடுத்து, தமிழக வாக்காளர்களின் எண்ணிக்கை 5.37 கோடியாக அதிகரித்தது.

முதல்முறையாக வாய்ப்பு

இந்நிலையில், முதல்முறையாக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான வாய்ப்பை தேர்தல் ஆணையம் இப்போது அளித்துள்ளது. அதன்படி, மார்ச் 25 (நாளை) வரை பெயர் சேர்ப்புக்கான விண்ணப்பங்களை அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. கடந்த 9-ம் தேதி தமிழகம் முழுக்க அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்புக்கான சிறப்பு முகாம்கள் நடந்தன. அதில் மட்டும் சுமார் 9.5 லட்சம் பேர் விண்ணப்பித்தனர்.

நாளை கடைசி நாள்

இதுதவிர, மற்ற நாட்களிலும் ஏராளமானோர் தாலுகா மற்றும் மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் விண்ணப்பம் அளித்து வருகின்றனர். மேலும் தேர்தல் துறையின் இணையதளத்தில் ஆன்லைனிலும் தொடர்ந்து மனு செய்து வருகின்றனர். மனு செய்வதற்கான வாய்ப்பு, நாளையுடன்(செவ்வாய்க்கிழமை) முடிகிறது. பட்டியலில் பெயர் சேர்க்க மக்களிடம் அதிக ஆர்வம் இருப்பதால் நாடாளுமன்றத் தேர்தலுக்குள் தமிழக வாக்காளர்களின் எண்ணிக்கை 5.50 கோடியை நெருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் தேர்தல் துறையினர் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

கடந்த ஜனவரியில் புதிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்பிறகு நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட மார்ச் 6-ம் தேதி வரை சுமார் 50 ஆயிரம் பேர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மனு செய்திருந்தனர். தேர்தல் தேதி அறிவித்த பிறகு, நடத்தப்பட்ட சிறப்பு முகாமில் மட்டும் சுமார் 9.5 லட்சம் பேர் மனு செய்துள்ளனர். அதன்பிறகு, மேலும் 50 ஆயிரத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் நேரிலும், ஆன்லைனிலும் வந்துள்ளன.

தமிழகத்தில் தற்போது வாக்காளர்களின் எண்ணிக்கை 5.37 கோடியாக உள்ளது. பல லட்சம் மனுக்கள் வந்திருப்பதால் இந்த எண்ணிக்கை 5.50 கோடியை நெருங்கிவிடும் என எதிர்பார்க்கிறோம்.

வாக்காளர் அடையாள அட்டை

புதிதாக மனு செய்தவர்களின் பெயர், தேர்தலுக்குள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும். அவர்கள் அனைவருக்கும் வாக்காளர் அடையாள அட்டை தரமுடியாத பட்சத்தில் புகைப்படத்துடன் கூடிய ‘பூத் ஸ்லிப்’களை தேர்தல் ஊழியர்களே வீடுவீடாகச் சென்று வழங்குவர். அதை வைத்து அவர்கள் தேர்தலில் வாக்களிக்கலாம்.

இவ்வாறு தேர்தல் துறையினர் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x