Last Updated : 11 Mar, 2014 09:54 AM

 

Published : 11 Mar 2014 09:54 AM
Last Updated : 11 Mar 2014 09:54 AM

இரு கனவுகள்... ஒரே செயல்திட்டம்!

இந்தியாவின் அடுத்த பிரதமர் மோடி அல்லது ஜெயலலிதா. முதன்முதலில் இப்படிச் சொன்னவர் சோ.

ஆருடமா, செயல்திட்டமா?

தேசிய அரசியலில் அன்றைக்கு மோடி இவ்வளவு செல்வாக்கானவர் இல்லை. பா.ஜ.க. அத்வானி கையில் இருந்தது. ஜெயலலிதாவும் இவ்வளவு உயரத்தில் இல்லை. முந்தைய தேர்தலில் ஜெயலலிதா, மாயாவதி, மம்தா மூவரையும் இணைத்து ‘15-வது மக்களவையைத் தீர்மானிக்கும் மூன்று சக்திகள்’ என்று தேசிய ஊடகங்கள் கட்டமைத்த பிம்பம் சுக்குநூறாகிவிட்டிருந்த நிலையில், ஜெயலலிதா அடுத்த பிரதமர் என்று அ.தி.மு.க. பொதுக்கூட்டப் பேச்சாளர்கள்கூட அன்றைக்குச் சொல்லத் தயங்கியிருப்பார்கள். சோ சொன்னார். தொடர்ந்து, ‘மோடி அல்லது ஜெயலலிதா’ எனும் முழக்கத்தைப் பொதுமேடைகளில் முன்வைக்க ஆரம்பித்த சோ, உச்சகட்டமாக ‘துக்ளக்’ பத்திரிகை ஆண்டு விழாவில் மோடி, அத்வானி இருவரையும் மேடையில் வைத்துக்கொண்டே “மோடி பிரதமராக அத்வானி உதவ வேண்டும்” என்று பேசினார். அந்தச் சமயத்தில் பேட்டிக்காக சோவைச் சந்தித்தபோது, மோடி அல்லது ஜெயலலிதா என்கிற தன்னுடைய குரலுக்கான அடிப்படைபற்றி இப்படிச் சொன்னார்: “நான் ஒரு வாக்காளன். அந்த அடிப்படையில் ஒரு முன்மொழிவைச் சொல்கிறேன். இந்த நாட்டின் பிரதமராக மோடிக்கு எல்லாத் தகுதிகளும் இருக்கின்றன. ஒருவேளை பா.ஜ.க-வுக்கு மோடியைப் பிரதமர் ஆக்குவதில் முட்டுக்கட்டை ஏற்பட்டால், ஜெயலலிதா பிரதமராக அவர்கள் உதவ வேண்டும். அவ்வளவுதான்!”

அன்றைக்கு சோ சொன்னது அரசியல் ஆருடம் அல்ல. எளிமையான வார்த்தைகளில், “இது ஒரு வாக்காளனின் முன்மொழிவு” என்று அதை அவர் வர்ணித்தாலும், அது ஒரு செயல்திட்டம்.

வியூகத்தின் அடிப்படை என்ன?

பிரதமர் ஜெயலலிதா. இதற்கான வியூகமும் சாத்தியமும் என்ன?

1. தமிழகம், புதுவையின் 40 இடங்களில் ஆகப் பெரும்பான்மையானவற்றை அ.தி.மு.க-வைக் கைப் பற்றச் செய்வது; அதன் மூலம் பிராந்தியக் கட்சிகளில் பெரும் கட்சியாக அ.தி.மு.க-வை உருவாக்குவது.

2. மோடி தலைமையிலான பா.ஜ.க. அணி தனிப் பெரும்பான்மையான 272 இடங்களை நெருங்க முடியாத சூழலில் - பா.ஜ.க. பெரும்பான்மைக் கட்சியாகியும் தேசிய ஜனநாயகக் கூட்டணி மொத்தமாகவே 200 இடங் களை மட்டுமே தொட்டு நிற்கும் சூழலில் - பா.ஜ.க-வை ஏற்கக் கூடிய, அதேசமயம், மோடி ஒவ்வாமையால் பாதிக்கப்பட்ட கட்சிகளோடு இணைந்து ஜெயலலிதாவை முன்னிறுத்தும் ஒரு கூட்டணியை உருவாக்குவது.

3. அந்தக் கூட்டணிக்கு பா.ஜ.க. ஆதரவை ஜெயலலிதாவின் நண்பர் மோடியின் மூலம் கேட்டுப் பெறுவது. ஊரறிந்த இந்த ரகசியம்தான் ஜெயலலிதா பிரதமராக இன்றைக்கு உள்ள ஒரே சாத்தியமும்கூட. ஆனால், அவர் இதை அறிவிக்கவில்லை. மாறாக, காங்கிரஸ், பா.ஜ.க. அல்லாத மாற்று அணி ஒன்றை நோக்கி நகர்வதாகப் போக்கு காட்டுகிறார். அதற்கு இடதுசாரிகளே மேடை அமைத்துக்கொடுத்தனர்.

மாற்று அணி சாத்தியமா?

காங்கிரஸ், பா.ஜ.க. அல்லாத ஒரு மாற்று அணியின் சார்பில் ஜெயலலிதா பிரதமராவது எந்த அளவுக்குச் சாத்தியம்?

இன்றைய சூழலில் நடக்கவே வாய்ப்பில்லாத காரியம் அது. எளிமையான உதாரணம், கிட்டத்தட்ட மக்களவையின் பாதி தொகுதிகளை (252 இடங்கள்) வைத்திருக்கும் உத்தரப் பிரதேசம் (80), மேற்கு வங்கம் (42), மகாராஷ்டிரம் (48), ஆந்திரம் (42), பிஹார் (40) ஆகிய ஐந்து மாநிலங்களின் களநிலைமை. இந்த ஐந்து மாநிலங்களிலும் காங்கிரஸ், பா.ஜ.க. அல்லாத மாநிலக் கட்சிகளே அனைத்து இடங்களையும் பகிர்ந்துகொள்வதாகக் கொண்டால்கூட, ஜெயலலிதா நம்பவைக்க நினைக்கும் மாற்று அணி வியூகம் எடுபடாது. ஏனென்றால், உத்தரப் பிரதேசத்தில் முலாயம் சிங் ஆதரித்தால், மாயவாதி எதிர்ப்பார்; ஆந்திரத்தில் சந்திரபாபு நாயுடு ஆதரித்தால், ஜெகன்மோகன் ரெட்டி எதிர்ப்பார்; பிஹாரில் லாலு ஆதரித்தால் நிதீஷ் எதிர்ப்பார் என்பதே யதார்த்தம். உள்ளிருந்து மட்டும் அல்ல; வெளியிலிருந்தும்கூட காங்கிரஸ் ஆதரிக்காது என்கிற சூழலில், பா.ஜ.க. மட்டுமே ஜெயலலிதா கனவுக்கான - அணிக்கான ஒரே சாத்தியம்.

சோவின் முன்மொழிவு, அதற்கான வியூகம் எல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். இன்றைக்குத் தேசிய ஊடகங்கள் வரை மோடி அல்லது ஜெயலலிதா எனும் செயல்திட்டத்தை முணுமுணுக்க ஆரம்பிக்கின்றனவே எது இதைச் சாத்தியமாக்குகிறது?

ஏன் மோடி அல்லது ஜெயலலிதா?

இந்திய தேர்தல் வரலாற்றில், இந்தத் தேர்தலுக்கு ஒரு முக்கியத்துவம் உண்டு. அரசியல் கட்சிகளின் ஆர்வத்துக்கு அப்பாற்பட்ட ஆர்வங்கள் பிரதமர் தேர்தலில் தம் செல்வாக்கை நேரடியாகப் பயன்படுத்திப்பார்க்கும் பரிசோதனைக் களமாக இந்தத் தேர்தல் மாறியிருக்கிறது. இந்தச் சூழலில், ஏன் மோடி என்ற கேள்விக்கு என்னென்ன காரணங்கள் பதிலோ, அந்தக் காரணங்களில் பலவும் ஜெயலலிதாவுக்கும் பொருந்தும் என்கிற ஒற்றுமைதான் மோடி அல்லது ஜெயலலிதா எனும் செயல்திட்டத்துக்கான அடிப்படை.

அரசியல் விமர்சகர்கள் பலரும் அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையை ஆராய்ந்துகொண்டிருக்கிறார்கள். அந்த அறிக்கையைவிடவும் நாம் கவனிக்க வேண்டியது அதை வெளியிடுவதற்கு இரு நாட்களுக்கு முன் தொழில் துறைக்கு ஜெயலலிதா ஆற்றிய உரை. தமிழக அரசு - தொழில் நிறுவனங்கள் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அவர், தன் பிரதமர் கனவைத் தேசத்துக்குப் பிரகடனப்படுத்தும் ‘எனக்கு இந்தியாவைப் பற்றி ஒரு கனவு உண்டு உரை’யில் இப்படிக் குறிப்பிடுகிறார்:

“அ.தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து தமிழகத்தில் இதுவரை 33 நிறுவனங்களுடன் ரூ.31,706 கோடிக்குப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டி ருக்கின்றன. இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்பு மையத்தின் ஆய்வுப்படி, ஜூன் 2011 முதல் ஜனவரி 2013 வரை தமிழகத்தில் ஈர்க்கப்பட்ட முதலீட்டின் அளவு ரூ. 1.46 லட்சம் கோடி. தமிழ்நாடு, முதலீட்டில் 18.2% வளர்ச்சியைப் பெற்றுள்ளது. இது குஜராத், மகாராஷ்டிரம், கர்நாடகத்தைவிடவும் அதிகம்” என்று சொல்லும் ஜெயலலிதா, தான் காண விரும்புவதாகக் குறிப்பிடும் தேசத்தைப் பற்றிய விவரணைகளில் முதன்மையாக இடம்பெற்றிருப்பது திறந்த சந்தையான தேசம். இது முக்கியமான ஒரு சமிக்ஞை. மோடி எப்படியோ தானும் அப்படியே ‘வளர்ச்சியின் பிம்பம்’ என்கிற சமிக்ஞை.

மோடியை எந்தத் தொழில்துறை தூக்கிப்பிடிக்கிறதோ, அந்தத் தொழில்துறை மோடி இல்லாத சூழலில், ஜெய லலிதாவைத் தாங்கிப் பிடிக்குமா? ஆம். நிச்சயம் பிடிக்கும். ஏனென்றால், குஜராத் எப்படித் தொழிலதிபர்களின் பேட்டையாக இருக்கிறதோ, அப்படித்தான் தமிழகமும் தொழிலதிபர்களின் பேட்டையாக இருக்கிறது. ஒரு சின்ன உதாரணம், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் தொடர்பான ஒப்பீடு. குஜராத்தில், பூர்வாங்கமாக அனுமதி தர ஏற்கப்பட்ட சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் 43, சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டவை 30, சிறப்புப் பொருளாதார ஏற்றுமதி மண்டலங்கள் 18. தமிழகத்தில் பூர்வாங்கமாக அனுமதி தர ஏற்கப்பட்ட சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் 67, சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டவை 53, சிறப்புப் பொருளாதார ஏற்றுமதி மண்டலங்கள் 33. தேசிய ஊடகங்கள் குஜராத்துடன் தமிழகத்தை ஒப்பிட்டு இன்றைக்கு எழுதும் ‘வளர்ச்சிக் கதைகள்’ இந்தப் பின்னணியோடு இணைத்துக் கவனிக்க வேண்டியவை.

இந்துத்துவம் ஜெயலலிதாவுக்கு அந்நியம் அல்ல. நாட்டின் தேசிய ஒருமைப்பாட்டு ஆணையக் கூட்டத்திலேயே கரசேவையை ஆதரித்துப் பேசியவர் ஜெயலலிதா. நாட்டிலேயே கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தைக் கொண்டுவந்தவர்களில் அவர் முன்னோடி. கோயில்களில் ஆடு, கோழி வெட்ட அவர் விதித்த தடை மோடியும் செய்யாதது. மோடி பிரதமரானால், மாவோயிஸ்ட்டுகளை வேட்டையாடக் காட்டுக்குள் ராணுவத்தை அனுப்புவார் என்பதை மறுப்பவர்கள்கூட, ஜெயலலிதா விஷயத்தில் சந்தேகம் கிளப்ப மாட்டார்கள். இதற்கு மேலும் என்ன ஒற்றுமைகள் வேண்டும்?

ஆக, மோடி ஒரு கனவு காணலாம்; ஜெயலலிதா ஒரு கனவு காணலாம். ஆனால், இருவர் காணும் கனவிலும் வெளிப்படும் இந்தியாக்கள் ஒரே செயல்திட்டத்தின் இருவேறு பக்கங்கள்தான்!

-சமஸ், தொடர்புக்கு: samas@kslmedia.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x