Published : 27 Mar 2014 06:15 PM
Last Updated : 27 Mar 2014 06:15 PM

காவிரிக்காகக் காத்திருக்கும் தஞ்சை விவசாயிகள்!

# கர்நாடகத்தின் பிடிவாதத்தால் காவிரியில் வெள்ளக் காலங்களில் மட்டுமே நீரைப் பார்க்க முடிகிறது. இதனால், நெற்களஞ்சியத்தின் மக்கள் பஞ்சம் பிழைக்கப் பிற மாவட்டங்கள், மாநிலங்களுக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

# ஆண்டுதோறும் வறட்சி அல்லது வெள்ளத்தால் பாதிப்படையும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு கிடைப்பதில்லை. தேசியப் பயிர் காப்பீட்டு நிறுவனத்தின் கணக்கிடும் முறை அறிவியல் பூர்வமாக இல்லை என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த ஆண்டிலிருந்து தனியார் மூலம் செயல்படுத்தப்படவுள்ள புதிய பயிர் காப்பீட்டுத் திட்டத்தையும் விவசாயிகள் எதிர்க்கின்றனர். இடர்ப்பாட்டுக் காலங்களில் விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்புகளைத் தனித்தனியாகக் கணக்கிட்டு, உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

# ஆறுகளில் அதிக அளவு மணல் அள்ளியதால் நிலத்தடி நீர் வற்றிவிட்டது. இதனால், விவசாயிகளுக்குப் பெரும் இழப்பு ஏற்படுகிறது. ஆறுகள் தூர்வாரப்படாததால் மண் மேடிட்டு, புதர்கள் மண்டி வெள்ளக் காலங்களில் பெரும் இழப்பை ஏற்படுத்து கின்றன. ஆறுகளைத் தூர்வார வேண்டும்.

# திருச்சி - விழுப்புரம் ‘காட் லைன்’ மின் ரயில் தடம் இரட்டை வழித்தடமாக மாறிவிட்ட நிலையில், மீட்டர் கேஜ் பாதையின்போது இருந்த பல ரயில்களை இழந்து நிற்கிறது தஞ்சாவூர் வழித்தடம். தஞ்சை - விழுப்புரம் இரட்டை வழித்தடம் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்கிறார்கள் மக்கள்.

# திருச்சி - தஞ்சை இரட்டை ரயில் வழித்தடம் திட்டம் அறிவிக்கப்பட்டும் பணிகள் தொடங்கவில்லை. இதனால், புதிய ரயில்களை இயக்குவதிலும், ரயில்கள் நேரத்துக்கு வந்துசெல்வதிலும் பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

# அரசியல் காரணங்களால் தஞ்சை - சென்னை வழித்தடத்தில் முன்னர் ஓடிக்கொண்டிருந்த ரயில்கள் மீண்டும் இயக்கப்படாமல் உள்ளன. அரியலூர் - தஞ்சை - பட்டுக்கோட்டை புதிய ரயில் வழித்தடம் அமைக்கும் பணியும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

# உள்ளூரில் மணல் தட்டுப்பாடு மிக அதிகம். மணல் கடத்தல், குவாரி முறைகேடுகளே இதற்குக் காரணம். பொதுப்பணித் துறையே நேரடியாக மணல் விற்றால்தான் பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியும்.

# மணல் மற்றும் நிலக்கரி ஏற்றிச்செல்லும் லாரிகளாலும், சாலைகள் குறுகியதாக இருப்பதாலும் திருவையாறு பேருந்து நிலையச் சாலை நெருக்கடி யில் உள்ளது. அங்கு புறவழிச் சாலை தேவை.

# ஒரத்தநாடு விவசாயிகள் மோட்டார் பம்ப் செட்டை மட்டுமே நம்பியுள்ளனர். ஆனால், மின் இணைப்பு கேட்டு அளிக்கப்பட்ட சுமார் 5,000 விண்ணப்பங்களில் 100-க்குக்கூட மின் இணைப்பு வழங்கப்படவில்லை என்கின்றனர் விவசாயிகள்.

# 400 கோடி ரூபாய் மதிப்பிலான கல்லணைக் கால்வாய் சீரமைப்புத் திட்டத்தின் அடுத்த பகுதியை விரைந்து முடிக்க வேண்டும்.

# தேங்காய் அதிகம் விளையும் பட்டுக்கோட்டை, பேராவூரணி பகுதியில் மத்திய அரசு அமைத்த தென்னை வணிக வளாகம் முடங்கிக்கிடக்கிறது. இதனைச் செயல்படுத்தி, மதிப்புக்கூட்டப்பட்ட தென்னைப் பொருள்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையும், ஏற்றுமதி மண்டலமும் அமைக்க வேண்டும் என்கிறார்கள் மக்கள்.

# சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம், அதிராம்பட்டினம் பகுதிகளில் மீன்களை இருப்பு வைக்கக் குளிர்ப்பதனக் கிடங்குகள் தேவை. மதிப்புக்கூட்டப்பட்ட மீன் பொருட்களை உற்பத்தி செய்யத் தொழிற்சாலையும், ஏற்றுமதி மண்டலமும் அங்கு அமைக்க வேண்டும். துறைமுகம் அமைக்க இயற்கையான அமைப்பு அங்கே உள்ளதால் அதற்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

# தஞ்சை - நாகை சாலையில் நீடாமங்கலம் ரயில்வே கேட் மூடப்படும்போது, வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்கின்றன. அங்கு மேம்பாலம் தேவை.

# தஞ்சை - கும்பகோணம் சாலை சீரமைக்கப்படாமலே உள்ளது. 2016-ல் மகாமகம் திருவிழா நடக்கவிருப்ப தால், இந்தப் பணியை விரைந்து முடிக்க வேண்டும். நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க சுற்றுச் சாலைப் பணிகள், சாந்தபிள்ளை ரயில்வே கேட், மாரியம்மன் கோயில் ரயில்வே கேட் மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

# தஞ்சைக்கு ஆண்டுக்கு 35 லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். அதற்கேற்ற கட்டமைப்பு வசதிகள் இல்லை. புதிய பேருந்து நிலையத்தில் கழிப்பறைகளை மேம்படுத்த வேண்டும். பழைய பேருந்து நிலையம் எதிரில் சுரங்க நடைபாதை அமைக்க வேண்டும்.

# மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி பிரிவை விரைந்து அமைக்க வேண்டும். ராஜா மிராசுதார் அரசு மருத்துவ மனையில் அவசரச் சிகிச்சைக்குத் தனிப் பிரிவும், போதிய மருத்துவர்களும் நியமிக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x