Published : 06 Apr 2014 10:07 AM
Last Updated : 06 Apr 2014 10:07 AM

அசாம், திரிபுராவில் பிரச்சாரம் ஓய்ந்தது

அசாம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் முதல்கட்ட தேர்தல் பிரச்சாரம் சனிக்கிழமை ஓய்ந்தது. அசாமில் 5, திரிபுராவில் 1 என 6 மக்களவை தொகுதிகளுக்கான முதல்கட்ட வாக்குப் பதிவு திங்கள்கிழமை நடைபெற உள்ளது.

அசாமில், அரசுடன் பேச்சுவார்த்தையை ஆதரிக்கும் அல்லது எதிர்க்கும் ‘உல்பா’ எந்தவொரு பிரிவும் இத்தேர்தலை புறக்கணிக்குமாறு அழைப்பு விடுக்கவில்லை. கடந்த 30 ஆண்டுகளில் இவ்வாறு அழைப்பு விடுக்காதது இதுவே முதல்முறை.

அசாமின் 5 தொகுதிகளிலும் 51 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஆளும் காங்கிரஸ், பாஜக, திரிணமூல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், அசாம் கணபரிஷத், ஆம் ஆத்மி, ஏ.ஐ.யூ.டி.எப். உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் வேட்பாளரை நிறுத்தியுள்ளன.

பிரதமர் மன்மோகன் சிங், பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுல், மாநில முதல்வர் தருண் கோகோய் ஆகிய முக்கியத் தலைவர்கள் இங்கு பிரச்சாரம் செய்துள்ளனர்.

இதுபோல இடதுசாரி முன்னணி ஆளும் திரிபுராவில் மொத்தமுள்ள 2 தொகுதிகளில், மேற்கு திரிபுரா தொகுதிக்கான வாக்குப் பதிவு திங்கள்கிழமை நடைபெறுகிறது. இதையொட்டி 6 தொகுதிகளிலும் நேற்று பிரச்சாரம் ஓய்ந்தது.

திரிபுராவில் 13 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். எனினும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் இடையேதான் முக்கிய போட்டி நிலவுகிறது. 1952 முதல் 2009 வரை 15 முறை நடைபெற்ற தேர்தல்களில் 10 முறையும் 1996 முதல் தொடர்ந்தும் இத் தொகுதியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தக்கவைத்துள்ளது.

பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்கார் இத்தொகுதியில் பிரச்சாரம் செய்த முக்கியத் தலைவர்கள். அசாமில் எஞ்சிய 3 தொகுதிகளுக்கும், திரிபுராவின் எஞ்சிய கிழக்கு தொகுதிக்கும் ஏப்ரல் 12-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

வடகிழக்கு மாநிலங்களில் முதல்முறையாக வரும் தேர்தலில் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் புகை பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நாட்டில் காஷ்மீர், பிஹாருக்கு அடுத்து மூன்றாவது பிராந்தியமாக இங்கு இத்தடை உத்தரவு அமலுக்கு வருகிறது. முதல்கட்ட தேர்தலையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x