Published : 22 Apr 2014 08:00 PM
Last Updated : 22 Apr 2014 08:00 PM

தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு: கருணாநிதி கருத்து

தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது, மக்களை பயமுறுத்துவதைப் போலத் தெரியவில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்தார்.

சென்னையில் அவர் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

தேர்தல் ஆணையம் எந்தத் தேர்தலிலும் இல்லாத வகையில் மக்களைப் பயமுறுத்துவதைப் போல 144 தடை விதித்திருக்கிறார்கள் சி.பி.எம். போன்ற கட்சிகள் அதனை எதிர்த்து இருக்கின்றன. அது சம்மந்தமான உங்கள் கருத்து என்ன?

பயமுறுத்துவதைப் போலத் தெரியவில்லை. எந்த எண்ணத்தோடு அதைப் பிறப்பித்திருக்கிறார்கள் என்று இப்போது கூற முடியாது.

இந்தியாவில் உள்ள பா.ஜ.க. தலைவர்கள், பிரவீன் தொகாடியா போன்றவர்கள் சிறுபான்மை மக்களுக்கு எதிராக கருத்து வெளியிட்டிருக்கிறார்கள். அது அபாயகரமான விஷயமாக உள்ளது. நீங்கள் தமிழகத்தில் சிறுபான்மை மக்களின் ஆதரவோடு இந்தத் தேர்தலைச் சந்திக்கிறீர்கள். பா.ஜ.க. வினர் இவ்வாறு மோடி பிரதமரானால் இஸ்லாமியர்கள் பாகிஸ்தானுக்கு அனுப்பப்படுவார்கள் என்றெல்லாம் சொல்கிறார்களே?

அவ்வாறு ஒருசிலர் பேசுகின்ற கருத்துகளால் சிறுபான்மையினரை பயமுறுத்தும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. மத சண்டைக்கு என்னென்ன வேண்டுமோ அதையெல்லாம் செய்கிறார்கள். இந்தச் சூழலில் மதச் சார்பற்ற அரசு அமைய வேண்டும் என்பது தான் என்னுடைய கருத்து.

பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் பெரிய அபாயம் என்று நினைக்கிறீர்களா?

அப்படிக் கருதாமல் இருக்க முடியாது.

தமிழகத்தில் மோடி அலை இருப்பதாக பா.ஜ.க. வினர் சொல்கிறார்கள். அப்படி மோடி அலை இருக்கிறதா?

தமிழகத்தில் அப்படி இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

இவ்வாறு கருணாநிதி பேட்டியில் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x