Published : 21 Apr 2014 04:20 PM
Last Updated : 21 Apr 2014 04:20 PM

கோவையில் கவனத்தை ஈர்க்கும் மார்க்சிஸ்ட் பிரச்சாரம்

வெள்ளை மாடு. கொம்புக்கு சிகப்பு பெயிண்ட். மாட்டு வண்டிக்கு சிகப்பு பெயிண்ட். டயருக்கு வெள்ளை பெயிண்ட். வண்டியின் நடுவே சுமார் 11 அடி உயரத்தில் சுத்தியல் அரிவாள் நட்சத்திர சின்னம். சின்னத்தின் அடியே, பிரச்சார வாசகங்கள் இடம்பெற்றிருக்க, மாட்டுவண்டி வீதி வீதியாக செல்கிறது.

வழியில் வண்டிக்காரர், கடந்த 5 ஆண்டுகளாக எம்.பி.யாக இருந்த மார்க்சிஸ்ட் எம்.பி. பி.ஆர். நடராஜன் செய்த பணி அச்சிடப்பட்ட துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்கிறார். சாலையில் செல்பவர்கள், நின்று வண்டியில் வைக்கப்பட்ட சின்னத்தை ஆச்சர்யம் ததும்பப் பார்க்கிறார்கள். இந்த மாதிரியான பிரச்சாரத்தை, கோவை தொகுதியில் இறுதிக்கட்டமாக எடுத்துள்ளது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.

இந்த வண்டிப்பிரச்சாரத்தை வடிவமைத்துள்ள சி.பி.ஐ.(எம்). கோவை மாவட்டக்குழு பிரதிநிதி சி.பத்மனாபன் கூறியதாவது: இரண்டு நாட்களாக யோசித்து, இதை வடிவமைத்தோம். மொத்தம் 8 வண்டிகள், இந்த பிரச்சாரத்தில் இறங்கியுள்ளன. கோவை தெற்கு, கோவை வடக்கு, சிங்காநல்லூர், சூலூர் ஆகிய தொகுதிகள் நெரிசல் மிகுந்த தொகுதிகள் என்பதால், தொகுதிக்கு தலா ஒன்றும், பல்லடம், கவுண்டம்பாளையம் தொகுதிகள் பரப்பளவு மிகுந்த தொகுதிகள் என்பதால், இங்குள்ள சுல்தான்பேட்டை, எஸ்.எஸ்.குளம் ஒன்றியங்களுக்கு கூடுதலாக ஒன்றும், களம் இறக்கியிருக்கிறோம். பாட்டாளி மக்களுடன் மிகவும் நெருக்கமான சின்னம் என்றாலும் கூட, இதை இந்த வடிவமைப்பில் கொண்டு போகும்போது, மக்கள் கவனிக்கிறார்கள். கருத்துக்களையும் பகிர்ந்து கொள்கிறார்கள்.

தேர்தல் பிரச்சாரக் கடைசி நாளன்று 8 மாட்டுவண்டிகளையும், நகரின் மிக முக்கியமான பகுதிகளில் ஊர்வலமாகக் கொண்டு போவது என்று திட்டமிட்டுள்ளோம் என்றார்.

இதற்கு தேர்தல் அதிகாரிகளிடம், போலீஸிடம் அனுமதி பெற்றிருக்கிறீர்களா? என்று கேட்டபோது, இதுக்கு போய் என்னன்னு பிரச்சார அனுமதி கேட்கிறது. மைக்செட் இல்லை. பெட்ரோல் இல்லை. பின்தொடரும் வாகனங்கள் இல்லை. மாட்டுக்குப் புல்லும், வண்டியோட்டுபவருக்கு உணவும் மட்டும்தான் தேவைப்படுகிறது. இதை என்ன கணக்கு, என்ன பிரச்சாரம்ன்னு தேர்தல் அதிகாரிகள் கேட்கட்டும். அப்புறம் பார்க்கலாம் என்று சிரிக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x