Published : 22 Apr 2014 08:18 AM
Last Updated : 22 Apr 2014 08:18 AM

விஜயகாந்த் குற்றச்சாட்டுக்கு: சைதை துரைசாமி தரப்பில் எதிர்ப்பு

தேமுதிக தலைவர் விஜயகாந்த், தேர்தல் பிரச்சாரத்தில் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு சைதை துரைசாமி தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக மேயர் சைதை துரைசாமிக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறியதாவது:

கடந்த பத்தாண்டுகளில் பதவி வகித்த திமுக மேயர்கள் மொத்தமே 1,100 களப்பணிகள்தான் செய்துள்ளனர். ஆனால், சைதை துரைசாமி மட்டுமே கடந்த 24 மாதங்களில் 2,600 களப்பணிகளை செய்திருக்கிறார். மேலும் அம்மா உணவகம், அம்மா திட்டம், சாலை வசதிகள் உள்ளிட்ட நலப் பணிகளை சென்னை மாநகராட்சி செம்மையாக செயல்படுத்தி வருகிறது. இதையெல்லாம் அதிமுகவின் அரசியல் எதிரிகளால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை.

மத்திய சென்னை தொகுதி தேமுதிக வேட்பாளருக்கு எந்தச் செல்வாக்கும் இல்லை. ஆலந்தூரில் பிரேமலதாவை நிறுத்த வேண்டியதுதானே’என்று தனது பிரச்சாரத்தின்போது சைதை துரைசாமி கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் சொல்ல முடியாமல், புறம்போக்கு இடத்தை வளைத்து ரியல் எஸ்டேட் செய்வதாக சைதை துரைசாமி மீது விஜயகாந்த் பொய்க் குற்றச்சாட்டு கூறியிருக்கிறார்.

2004-க்கு முன்பு வெளிநாட்டு ஐ.டி. நிறுவனங்களுக்கு 100 ஏக்கர், 200 ஏக்கர் என இடங்களை வாங்கிக் கொடுத்துள்ளார் சைதை துரைசாமி. அதில் கிடைத்த லாபத்தைக்கூட மனிதநேய அறக்கட்டளையில்தான் சேர்த்துள்ளார். தனது வீட்டையும், வேளச்சேரியில் 14 கிரவுண்டில் கட்டப்பட்ட திருமண மண்டபத்தையும்கூட மனிதநேய அறக்கட்டளைக்கு கொடுத்துள்ளார். அத்தனைக்கும் ஆதாரம் உள்ளது.

அவரது மனிதநேய அறக்கட்டளை மூலம் ஆண்டுக்கு ஆயிரக்கணக்கான மாணவர்கள் சிவில் சர்வீஸ் உள்ளிட்ட தேர்வுகளுக்கு போய்க் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கான பயிற்சி மற்றும் தங்குமிட வசதிகளை இலவசமாக செய்து கொடுக்கிறார் துரைசாமி. இப்படி இருக்கையில், அவர் சிவில் சர்வீஸ் தேர்வுக்கான வினாத் தாள்களை லீக் செய்து பணம் சம்பாதிப்பது போலவும் அவதூறு பிரச்சாரம் செய்திருக்கிறார் விஜயகாந்த். அவர் சொல்வதுபோல் நடப்பது உண்மை என்றால், அது மிகப் பெரிய தேசவிரோதச் செயல். அதில் துளியும் உண்மை இல்லை என்பதால், இந்திய அரசேகூட விஜயகாந்த் மீது மான நஷ்ட வழக்கை தொடர முகாந்திரம் உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x